Tuesday, March 7, 2017



Image result for கம்பனின் அம்பறாத் தூணி

கம்பனின் அம்பறாத் தூணி – நாஞ்சில் நாடன் – உமா பதிப்பகம்

கம்ப இராமாயணத்தை அறியும் முயற்சியில் எனது வாசிப்பின் கீழ் வந்த ஆறாவது நூல்கம்பனின் அம்பறாத் தூணி'. திரு. நாஞ்சில் நாடன் எழுதியது. வெகு நாட்களாக வாசிக்க வேண்டும் என்று நினைத்து, நினைத்து தள்ளிப் போட்டு ஒருவழியாக வாசித்து முடித்தேன். மேலோட்டமாக இல்லாமல் சற்று ஆழ்ந்து வாசிக்க வேண்டிய நூல். எடுக்க, எடுக்க குறையாத அம்புகளை உடைய தூணி போல (அம்பறாத் தூணிஅம்பு + அறா + தூணி), அள்ள, அள்ள குறையாமல் வந்துகொண்டே இருக்கும் கம்பனின் சொல் தூணியைப் பற்றி பேசும் நூல்

கம்பனின் வழி நூல்கள் நூற்றுக்கணக்கில் உண்டு. ஆனால் படைப்பிலக்கியவாதிகள் யாரும் அப்படி ஒரு நூலை எழுதியதாகத் தெரியவில்லை. அதிலும் குறிப்பாக சொற்களைப் பற்றி யாரும் எழுதியிருப்பதாகத் தகவல் இல்லைஎன்று நாஞ்சில் நாடன் தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார். படைப்பிலக்கியவாதியால் எழுதப்பட்டது, சொற் காமுற்று எழுதப்பட்டது என்ற  இரண்டு காரணங்களும் இந்நூலை என் மனதுக்கு மிகவும் நெருக்கமாக்கிவிட்டன. மொத்தம் பதினைந்து கட்டுரைகளை உள்ளடக்கிய இந்நூலில் ஒவ்வொரு கட்டுரையும் நாஞ்சில் நாடனின் எழுத்தின் மிடலைப் (மிடல்வலிமை, திறன், மிடுக்கு. இந்நூலின் வழியாக  அறிந்த கம்பனின் சொல்) பறைசாற்றுகின்றன.

முதல் கட்டுரையில் இவர் கம்பனுக்குள் வந்த கதையைச் சொல்கிறார். இளம்பிராயத்தில் பார்த்த தோற்பாவைக் கூத்து (..பெருமாள் இதைப் பற்றி இராமன் எத்தனை இராமனடி நூலில் எழுதியது நினைவுக்கு வந்தது), பள்ளி நாட்களில் கேட்ட இராமாயணச் சொற்பொழிவுகள், உயர்நிலைப் பள்ளிக் காலத்தில் திராவிடக் கழக கூட்டங்களில் கேட்ட ராமாயணத்தின் எதிர்பக்கங்கள், இலக்கியத் திறனாய்வுகள் போல ஒரு காலத்தில் மேடையேறிய கம்பராமாயணப் பட்டிமன்றங்கள் ஆகியவை நாஞ்சில் நாடனைக் கம்பனிடம் கொண்டு சேர்க்க பெரும் உதவி புரிந்திருக்கின்றன. பணியின் காரணமாக பம்பாயில் இருந்தபோது, திரு.ரா.பத்மநாபன் அவர்களிடம் இரண்டரை ஆண்டுகள் பயின்ற இராமாயணம் கம்பனை இவருக்கு இன்னும் நெருக்கமாக்கி உள்ளது. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு, எழுத்தாளர் ஜெயமோகன் ஏற்பாட்டில் நடந்த ஊட்டி இலக்கிய முகாமில் கம்பன் பற்றிய அமர்வை நடத்த வேண்டிய சூழலில் நாஞ்சில் நாடன் மீண்டும் கம்பனுக்குள் நுழைந்திருக்கிறார்.

இரண்டாவது கட்டுரை, நூலுக்கான பெயர்க் காரணத்தைப் பற்றி பேசுகிறது. அம்பறாத் தூணி என்பது கம்பனின் சொல் அல்ல. நாஞ்சில் நாடனின் சொல். ஆனால் அம்பறாத் தூணிக்கு கம்பன் கணைப்புட்டில், வாளி பெய் புட்டில், பகழி ஆவம் போன்ற சொற்களைப் பயன்படுத்தி இருப்பதைப் பாடல்களோடு இக்கட்டுரையில் விவரிக்கிறார்.

மூன்றாவது கட்டுரையில் கம்பனிடம் இருந்த சொற்சுரங்கத்தைப் பற்றி விளக்குகிறார். மொத்தம் மூன்று முதல் மூன்றரை லட்சம் சொற்கள் வரை கம்பன் கையாண்டிருக்க வாய்ப்பு உண்டு என்று கூறிவிட்டுத் திரும்பத், திரும்பப் பயன்படுத்திய சொற்களைக் கழித்துப் பார்த்தால் கம்பன் உத்தேசமாய் ஒன்றரை லட்சம் சொற்களைப் பயன்படுத்தி இருப்பாரா? என்ற கேள்வியையும் முன்வைக்கிறார்.

நான்காவது கட்டுரையில் தமிழர்களால் தூக்கி எறியப்பட்ட, ஆனால் இன்னும் மலையாளத்தில் புழக்கத்தில் உள்ள கம்பனின் சொற்களைப் பட்டியலிடுகிறார். பூசை, பரிக்கல், அங்கணம், அசத்து, அரை, பரிபவம், உறக்கம், சேரை, சோரி, புரை, சுரிகை, சன்னதம், மிடல், மூங்கை, குட்டன், போதம், சோறு போன்ற சொற்கள் இடம்பெற்ற கம்பனின் பாடல்களையும் மலையாளத்தில் பேச்சு வழக்கில் அவற்றின் பயன்பாட்டையும் அருமையாக எடுத்துக்காட்டுகிறார்

ஐந்தாவது கட்டுரையில் தன்னை மிகவும் கவர்ந்த கம்பனின் சொற்களைப் பாடல்களோடு விளம்புகிறார். அச்சொற்களைப் பற்றி படிக்கையில் வியப்பும் ஆச்சர்யமும் ஏற்படுகின்றன. ஒன்றிரண்டு சொற்களைத் தவிர மற்ற அத்தனைச் சொற்களுமே எனக்குப் புதிதாக இருந்தன. கம்பன் வற்றாத சொல் ஊற்றுக்குச் சொந்தக்காரன் என்பதில் ஐயமே இல்லை.

ஊழி, ஆழி இந்த இரண்டு சொற்களையும் கம்பன் எவ்வாறு பல பொருள்களில் பயன்படுத்துகிறான் என்பதை தனது ஆறாவது கட்டுரையில் கூறுகிறார். ஒரே பாடலில், ஒரு சொல் பல பொருள்கள் தருமாறு வடித்திருப்பது கம்பனின் சிறப்புகளில் ஒன்று.

கம்பனின் அம்புகள்' என்ற ஏழாவது கட்டுரையில் அம்பு என்ற சொல்லை கம்பன் எப்படி ஆளுகிறான் என்று காட்டுகிறார். சோனை, கணை, கோல், சரம், வாளி, பகழி ஆகியவை அம்புக்குப் பதிலாக கம்பன் கையாண்ட சொற்கள் என்கிறார். எட்டாவது கட்டுரையில் வழக்கில் இல்லாத உறவுச் சொற்களைப் (எம்பி, உம்பி, நும்பி, நம்பி, எந்தை, நுந்தை, உங்கை, அவ்வை, நுவ்வை, தவ்வை) பற்றி விவரிக்கிறார். ஒன்பதாவது கட்டுரை கம்பனின் மொழியாக்கங்கள்' என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. வான்மீகத்தின் வழி நின்று கம்பன் மறு உருவாக்கம் செய்தவற்றை சிலாகிக்கின்ற கட்டுரை. 10368 பாடல்களில் கம்பன் ஒரு கிரந்த எழுத்தைக் கூட பயன்படுத்தவில்லை என்பதையும், கம்பன் பயன்படுத்திய பல சொற்கள், தமிழா, வடமொழியின் தமிழ் ஆக்கமா எனக் கண்டு கொள்ள முடியாத அளவு தமிழ்மயமானது என்பதையும் சொல்கிறார்.

பத்தாவது கட்டுரை அசைச் சொற்களைப் (அரோ, அடா, அன்றே, ஆல், அன்னோ, கொல், எல்லே, அம்மா, மன்னோ, மாதோ, ஐயோ) பற்றி பேசுகிறது. அசைச் சொற்களுக்கு உணர்ச்சிதான் பொருள் என்பதையும் அவை  இடம் கருதி வேறு, வேறு பாவங்களில் பொருள் தரும் என்பதையும் தகுந்த பாடல்களை மேற்கோள்களாக காட்டுவதன் வழி விளக்குகிறார். பதினோறாவது கட்டுரையில் கம்பனின் மானுடம் சார்ந்த சொற்களை (மனிதன், மனிதர், மானிடன், மானிடர், மானுடன், மானுடர், மானுடவர், மனிசன், மனிசர்) பற்றி அலசுகிறார்.

பன்னிரண்டாவது கட்டுரை கம்பன் என்னும் கலப்பை'. கவிஞன் என்பவன் மொழி எனும் நிலத்தில் உழும் கலப்பை என்றும் அவன் சொற்களை மேல் கீழாக, கீழ் மேலாக புரட்டிப் போடுகிறவன் என்றும் சொல்கிறவர் சொற்களால் மயக்கும் கம்பனைக் கலப்பை என்கிறார். பதின்மூன்றாவது கட்டுரை கம்பன் பாடல்களில் தாமரை மலருக்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் சொற்களை அழகாக சொல்லிச் செல்கிறது.

பதினான்காவது கட்டுரை கம்பன் சேமித்த தகவல்களை எடுத்துச் சொல்கிறது. தாவரங்கள், விலங்குகள், இசைக்கருவிகள், போர்க்கருவிகள், பறவைகள், அணிகலன்கள் என்று கம்பன் தனது காப்பியத்தில் பேசியுள்ள தகவல்களைப் படிக்கும்போது வியப்பும் எவ்வளவு சொற்களைத் தொலைத்திருக்கிறோம் என்ற குற்ற உணர்வும் எழுகிறது. பதினைந்தாவது கட்டுரை எம்மனோர்' என்ற தலைப்பில் எம்மனோர் என்ற சொல்லைக் கம்பன் கையாண்ட விதத்தைக் கூறுகிறார். கம்பனைப் பற்றி வழக்கில் உள்ள தனிப்பாடல் ஒன்று இந்நூலில் தரப்பட்டுள்ளது.

வில் கிடந்தது மிதிலையின் நகரிலே
கல் கிடந்தது கானகம் தன்னிலே
நெல் கிடந்தது சடையனின் வீட்டிலே
சொல் கிடந்தது கம்பனின் நெஞ்சிலே
உயர்ந்தெழுந்தது இராமன் கதை அரோ

உண்மைதான். கம்பனின் மனதில் கிடந்த ஒவ்வொரு சொல்லையும் நாம் கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டுள்ள நூல் இது. இந்நூலை வாசித்து முடித்தபிறகு கம்பனின் கவிநயத்தைக் கொண்டாடுவதோடு நிறுத்தி விடாமல் கம்பன் பயன்படுத்திய, தமிழ் தொலைத்த சொற்களை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பும் அவற்றைத் தங்கள் படைப்புகளில் சரியாக பயன்படுத்துவதன் மூலம் அச்சொற்களை மீண்டும் புழக்கத்திற்கு கொண்டு வரும் பொறுப்பும்  படைப்பிலக்கியவாதிகளுக்கு உள்ளது என்பது புரிந்தது. கம்பனின் ஒவ்வொரு சொல்லைப் பற்றியும் பேசி முடிக்க வாழ்நாள் பத்தாது என்று தோன்றுகிறது. கம்பனின் காப்பியத்தில் காதல் கொண்ட படைப்பாளிகள் அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல் இது.
  




No comments:

Post a Comment