கம்பராமாயணம் - திரு அ.கி.வரதராசனுடன்
சந்திப்பு 8
பிப்ரவரி 17, 2017 - ஜூரோங்
ஈஸ்ட் பொது நூலகம்
திரு அ.கி.வரதராசனின் உரையை
அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரை
அயோத்தியா காண்டம்,
நகர் நீங்கு படலம், சீதை வனம் ஏகுதல்
“ஆழி
சூழ் உலகமெல்லாம் பரதன் ஆளட்டும். நீ பதினான்கு ஆண்டுகள் கழித்து வா. இது அரசனின் ஆணை” என்று கைகேயி கூற “நும் பணி என்றால் மறுப்பேனா?” என்று பதிலுரைத்த
பெருந்தகை இராமன் ஒவ்வொருவரிடமாக விடைபெற்றுக்கொண்டு இறுதியில் மண் பயந்த
மைதிலியைக் காணவருகிறான். மனைவியைத் தன்னுடன் அழைத்துச் செல்லும் திட்டம்
எதுவுமில்லாமல் ‘சென்று வருகிறேன்’
என்று சொல்லிவிட்டுப் போக வந்தவன் அவளையும் அழைத்துச் செல்ல வேண்டிய
கட்டாயத்திற்கு உள்ளானதை இப்பாடல்கள் விவரிக்கின்றன.
அயோத்தி
மாநகரமே வாடி துன்பமடைய, உழைக்கின்ற ஏவலர்கள் கலங்கி
வருந்த, அனைத்து பக்கங்களிலும் அளவில்லாத மக்கள் தொடர்ந்து
வர, பூமியில் பிறந்த அத்தனை உயிர்களுக்கும் ஓர் உயிராய் விளங்கும்
இராமன் ஒளி பொருந்திய ஆபரணத்தை அணிந்த மார்பகங்களை உடைய சீதை இருக்குமிடத்திற்கு வந்து
சேர்ந்தான்.
அந்தணர்கள், சிற்றரசர்கள், அருந்தவம் புரிந்த
முனிவர்கள், கீழே விழுந்து அழுது புரண்டதால் புழுதி படிந்த உடம்பை
உடையவர்கள் என அனைவரும் இராமனின் அருகில் வந்து பொருமி அழ, மிக
சாதாரணமான மர உரியை அணிந்து தனது நாயகன் வரும் தன்மையைக் கண்டு ஓவியத்தில் வரையப்பட்ட
பாவையை ஒத்த சானகி மனதில் திடுக்கிடலுடன் எழுந்தாள்.
எழுந்த
சீதையை அருகில் இருந்த பெண்கள் ஆறுதலாய் தழுவிக் கொண்டனர். அக்காட்சியை உண்ட சீதையின்
கண்கள் வருந்தி புது நீரைப் பொழிகின்றன. (இதுவரை சீதை அழுததே இல்லை என்பதால் புதுப்புனல்).
தன்னைக் கட்டிக்கொண்டு அழும் பெண்களின் புலம்பலைக் கேட்ட சீதை நடந்ததை அறிய முடியாமல், கண்களில் நீர் வழிய தன் மீது காதலை வாரி வழங்கும் வள்ளல்
இராமனைப் பார்க்கிறாள்.
“பொன்னாலான
அழகிய கழலை அணிந்தவனே! புகழ் பெற்ற சக்கரவர்த்தி தசரதனுக்கு ஏதும் தீங்கு நேர்ந்ததா? அப்படி இல்லை என்றால் இந்தக் கொடிய துன்பம் எதனால் விளைந்தது? சொல்” என்று தன் மேனியில் மின்னலைப் போல நடுக்கத்தைக்
கொண்ட சீதை இராமனைப் பார்த்து வினவுகிறாள்.
“ஒப்பற்ற
என் எம்பி பரதன் இந்த நாட்டைப் புரப்பான். புகழ்வதற்கும் போற்றுதலுக்குமுரிய என் தந்தை, தாய் இருவரது ஆணையையும் சிரமேற்கொண்டேன். இன்று மேகத் தொகுதிகள் நிரம்பிய
அதிக மழை பொழியும் கற்கள் நிறைந்த காட்டிற்குச் கிளம்பிச் சென்று மீண்டும் இங்கே திரும்புவேன்.
நீ வருந்தாதே” என்று இராமன் சீதைக்கு மறுமொழி கூறுகிறான். இதன்
தொடர்புடைய பாடல்கள் கீழே:
இராமன் சீதை இருக்குமிடம் சேர்தல்
உயங்கி
அந் நகர் உலைவுற, ஒருங்கு, உழைச்சுற்றம்
மயங்கி ஏங்கினர்; வயின்வயின் வரம்பு இலர் தொடர, இயங்கு பல் உயிர்க்கு ஓர் உயிர் என நின்ற இராமன் தயங்கு பூண் முலைச் சானகி இருந்துழிச் சார்ந்தான். |
1818
|
இராமனின் கோலம் கண்டு சீதை திடுக்கிடுதல்
அழுது, தாயரோடு
அருந்தவர், அந்தணர், அரசர்,
புழுதி ஆடிய மெய்யினர், புடை வந்து பொரும, பழுது சீரையின் உடையினன் வரும்படி பாரா, எழுது பாவை அன்னாள், மனத் துணுக்கமொடு எழுந்தாள். |
1819
|
எழுந்த நங்கையை, மாமியர் தழுவினர்; ஏங்கிப்
பொழிந்த உண் கண் நீர்ப் புதுப் புனல் ஆட்டினர்; புலம்ப, அழிந்த சிந்தையள் அன்னம், 'ஈது இன்னது' என்று அறியாள்; வழிந்த நீர் நெடுங் கண்ணினள், வள்ளலை நோக்கி. |
1820
|
'பொன்னை உற்ற பொலங் கழலோய்! புகழ்-
மன்னை உற்றது உண்டோ , மற்று இவ் வன் துயர் என்னை உற்றது? இயம்பு' என்று இயம்பினாள்- மின்னை உற்ற நடுக்கத்து மேனியாள். |
1821
|
இராமன் நடந்தது இயம்புதல்
'பொரு இல் எம்பி புவிபுரப் பான்; புகழ்
இருவர் ஆணையும் ஏந்தினென்; இன்று போய்க் கருவி மாமழைக் கல்-கடம் கண்டு, நான் வருவென் ஈண்டு; 'வருந்தலை நீ' என்றான். |
1822
|
தனது
கணவன் காட்டிற்குச் செல்கிறான் என்பதற்காகவோ அவன் நாட்டை இழந்துவிட்டான் என்பதற்காகவோ
சீதை விம்மி அழவில்லை. “நீ வருந்தாமல் இரு. உன்னைவிட்டு நீங்கி நான் செல்கிறேன்”
என்று அவன் சொன்ன தீயை ஒத்த சுடு சொற்கள் அவள் செவி வழியாக மனதைச் சுட
தேம்பி அழுதாள்.
அறத்தை
நிலை நாட்ட திருமால் இராம அவதாரம் எடுத்து அயோத்தியில் பிறந்தபோது, பாற்கடலை விட்டு அவனுடன் ஒன்றாக நீங்கி பிரியாமல் பின்தொடர்ந்த
சீதையால் “நான் உன்னை விட்டுச் செல்கிறேன்” என்ற இராமனின் சொல்லைத் தாங்கிக்கொள்ள இயலுமா?
“தந்தையும்
தாயும் சொன்ன கட்டளைகளை மீறாமல் பின்பற்ற முடிவு எடுத்தது நன்று. ஆனால் எதற்காக என்னை
இங்கேயே இரு என்று கூறினான்?” என்று நினைத்து நினைத்து உயிரே
போவது போல சீதை வருந்தி நின்றாள்.
“கொடிய
அரக்கரைப் போன்ற பெரிய காடானது இரவிலும் அரக்கை உருக்கும் போது எழும் வெப்பத்திற்கு
ஒப்பான சூட்டைக் கொண்டிருக்கும். காட்டு வழிகள் உராயக்கூடிய கற்கள் நிரம்பி நடப்பதற்கு
துன்பம் விளைவிக்க கூடியவை. குளிர்ந்த செம்பஞ்சுக் குழம்பு தடவிய உன் சிவந்த கால்களுக்கு
அது கடினமாக இருக்கும்” என்று இராமன் தான் செல்லப்போகும் காட்டின்
தன்மையை எடுத்துரைத்து அவள் வருவதைத் தடுக்க முயற்சிக்கிறான். (அரக்கர், மெழுகு, உராய்தல், செம்பஞ்சுக்
குழம்பு என்ற நான்கு பொருளில் அரக்கு என்ற ஒரு சொல்லைக் கம்பர் கையாண்டுள்ளார்)
“இரக்கமில்லாமல்
விருப்பமே இல்லாத மனதோடு என்னை விட்டு நீங்குகிறாய். ஊழிக் காலத்து அருக்கன் (சூரியன்)
தரக்கூடிய வெப்பம் எங்குள்ளது. இதோ இங்குள்ளது. உன் பிரிவைக் காட்டிலும் அந்தக் கொடியக்
காடு என்னைச் சுடுமா?” என்று கேட்கிறாள் சீதை.
இராமன்
அவள் பேசியதைக் கேட்டதோடு மட்டுமல்லாமல் அவளது மனதில் ஓடும் சிந்தனைகளையும் புரிந்து
கொண்டான். அவளை கண்ணீர்க் கடலில் கைவிட்டுவிட அவன் விரும்பவில்லை. என்ன செய்யலாம் என்று
சிந்திக்கிறான். இதன் தொடர்புடைய பாடல்கள் கீழே:
இராமன் சொல் கேட்ட சீதையின் துயர்
நாயகன் வனம் நண்ணல் உற்றான் என்றும்,
|
1823
|
'துறந்து போம்' எனச் சொற்ற சொல் தேறுமோ-
உறைந்த பாற்கடற் சேக்கை உடன் ஒரீஇ, அறம் திறம்பும் என்று ஐயன் அயோத்தியில் பிறந்த பின்பும், பிரியலள் ஆயினாள்? |
1824
|
அன்ன
தன்மையள், 'ஐயனும், அன்னையும்,
சொன்ன செய்யத் துணிந்தது தூயதே; என்னை, என்னை, "இருத்தி" என்றான்?' எனா, உன்ன, உன்ன, உயிர் உமிழா நின்றாள். |
1825
|
இராமன் தன் கூற்றுக்கான காரணத்தை இயம்புதல்
'வல் அரக்கரின் மால் வரை போய் விழுந்து,
அல் அரக்கின் உருக்கு அழல் காட்டு அதர்க் கல் அரக்கும் கடுமைய அல்ல-நின் சில் அரக்குண்ட சேவடிப் போது' என்றான். |
1826
|
சீதை தன் மன உறுதியை இராமனுக்கு உரைத்தல்
'பரிவு இகந்த மனத்தொடு பற்றிலாது
ஒருவு கின்றனை; ஊழி அருக்கனும் எரியும் என்பது யாண்டையது? ஈண்டுநின் பிரிவினும் சுடுமோ, பெருங் காடு?' என்றாள். |
1827
|
சீதை சொற்கேட்டு இராமன் சிந்தனை வயப்படுதல்
அண்ணல், அன்னசொல்
கேட்டனன்; அன்றியும்,
உள் நிவந்த கருத்தும் உணர்ந்தனன்; கண்ணில் நீர்க்கடல் கைவிட நேர்கிலன், எண்ணு கின்றனன், 'என்செயல் பாற்று?' எனா. |
1828
|
இராமன்
சிந்தனையில் மூழ்கி இருந்த தருணத்தில் அருகில் இருந்த அறைக்குள் நுழைந்த சீதை மரவுரிதான்
தானும் அணியத்தக்கது என்ற முடிவெடுத்து அணிந்து கொண்டாள். இன்னும் சிந்தித்துக் கொண்டிருந்த
வள்ளல் இராமன் பின்னால் வந்து அவனருகே நின்றவள் அவனது பனை போன்ற வலிமையான நீண்ட கையைப்
பற்றிக்கொண்டாள்.
மரவுரி
அணிந்த சீதையின் தோற்றத்தைக் கண்ட அனைவரும் விழுந்து இறந்து போவதற்குரிய இடமான நிலத்தில்
வீழ்ந்தனர். ஆனால் இறக்கவில்லை. அவர்களுக்கு வாழ்வதற்கு நாட்கள் இருக்கும்போது எப்படி
இறப்பது? பிரளயமே வந்தாலும் வாழ விதிக்கப்பட்டவர்கள் வாழத்தானே
செய்வார்கள்.
செவிலித்தாய்கள், அக்காமார்கள், சேடிப்பெண்கள், அவள் மீது நிலைத்த அன்பு கொண்டவர்கள் என அனைவரும் தீயில் விழுந்ததைப் போன்று
துடித்தனர். சிவந்த கண்களைக் கொண்ட இராமன் கற்பில் தூய்மையான சீதையை நோக்கி கூறினான்.
“முல்லை
அரும்பும் கடல் முத்தும் போட்டியிட்டாலும் வெல்ல முடியாத அளவுக்கு அழகான வெண்மையான
பற்களைக் கொண்டவளே! உன் முடிவால் ஏற்படப் போகும் விளைவுகளை நினைத்துப் பார்க்க மறுக்கிறாய்.
நீ என்னுடன் வருவதாக இருந்தால் எல்லை இல்லாத துன்பத்தை எனக்குத் தருவாய்” என்றான் இராமன்.
கொற்றவன் இராமன் அப்படி கூறியதும் குயிலை தோற்கடிக்கும்
குதலைப் (மழலைப்) பேச்சுக்கு உரியவளான சீதை சினத்தில் சீறுகிறாள். “நான்
உடன் வருவதுதான் நீங்கள் அடைந்த துன்பமா? என்னை விட்டுவிட்டு
காட்டிற்குச் செல்வது உங்களுக்கு இன்பம் பயப்பது போலும்” என்று
கோபப்படுகிறாள்.
அவள் அப்படி சினந்ததும் இராமன் பதிலேதும் பேசாமல்
அவ்விடத்தை விட்டு அவளோடு நீங்குகிறான். ஆண்களும் மாதர்களும் மறுகி வீழ்ந்து அழுது
புலம்ப அவர்களது கண்ணீரால் சேற்று வயல் போல மாறிய நீண்ட தெருவின் வழியாகச் செல்லும்
இராமன் வழி கிடைக்காமல் சிரமப்பட்டு நீங்கி சென்றான்.
மரவுரி அணிந்த சீதை பின்னால் செல்ல,
வலிமையான வில்லைக் கையில் ஏந்திய இலக்குமணன் முன்னால் செல்ல கரிய மேகத்தின் நிறத்தைக்
கொண்ட இராமன் நீங்கியதைக் கண்ட அவ்வூர் மக்கள் அடைந்த துன்பத்தை விளக்க முடியுமா? இதன் தொடர்புடைய பாடல்கள் கீழே:
சீதை மரவுரி தரித்து இராமன் அருகில் வந்து நிற்றல்
அனைய
வேலை, அகல்மனை எய்தினள்;
புனையும் சீரம் துணிந்து புனைந்தனள்; நினையும் வள்ளல் பின் வந்து, அயல் நின்றனள், பனையின் நீள்கரம் பற்றிய கையினாள். |
1829
|
சீதையைக் கண்டோர் கொண்ட துயரம்
ஏழை தன்
செயல் கண்டவர் யாவரும்,
வீழும் மண்ணிடை வீழ்ந்தனர்; வீந்திலர்; வாழும் நாள் உள என்றபின் மாள்வரோ?- ஊழி பேரினும் உய்குநர் உய்வரே! |
1830
|
தாயர், தவ்வையர்,
தன் துணைச் சேடியர்,
ஆய மன்னிய அன்பினர், என்றிவர் தீயில் மூழ்கினர் ஒத்தனர்; செங்கணான் தூய தையலை நோக்கினன், சொல்லுவான். |
1831
|
இராமன் சீதை உரையாடல்
'முல்லையும் கடல் முத்தும் எதிர்ப்பினும்,
வெல்லும் வெண்ணகை யாய்! விளைவு உன்னுவாய் அல்லை; போத அமைந்தனை ஆதலின் எல்லை அற்ற இடர்தரு வாய்' என்றான். |
1832
|
கொற்றவன்
அது கூறலும், கோகிலம்
செற்றது அன்ன குதலையள் சீறுவாள், 'உற்று நின்ற துயரம் இது ஒன்றுமே? என் துறந்த பின், இன்பம் கொலாம்?' என்றாள். |
1833
|
சீதையை அழைத்துக் கொண்டு இராமன் புறப்படுதல்
பிறிது
ஓர் மாற்றம் பெருந்தகை பேசலன்;
மறுகி வீழ்ந்து அழ மைந்தரும் மாதரும் செறுவின் வீழ்ந்த நெடுந் தெருச் சென்றனன் - நெறி பெறாமை அரிதினின் நீங்குவான். |
1834
|
இராமன், சீதை மற்றும் இலக்குவனுடன் செல்லுதல்
சீரை
சுற்றித் திருமகள் பின்செல,
மூரி விற்கை இளையவன் முன்செல, காரை ஒத்தவன் போம்படி கண்ட, அவ் ஊரை உற்றது உணர்த்தவும் ஒண்ணுமோ? |
1835
|
பிறகு யாரும் அழுது துன்பமடையவில்லை. சோர்ந்த மனதுடன்
அனைவரும் ஒன்று சூழ்ந்தனர். இராமன் வனம் செல்வதற்கு முன் நாம் அங்கு செல்வோம் என்று
முடிவு செய்து போருக்கு முன்பு செய்யப்படும் பெரும் ஒலியோடு,
ஆரவாரத்தோடு கிளம்பிச் சென்றனர்.
கையுறை அணிந்த இராமன் தந்தையின் மாளிகை வாயிலை நெருங்கியதும்
தாய்மார்களைக் கும்பிட்டு வணங்கி சக்கரவர்த்தியை நீங்கள்தான் தேற்ற வேண்டும் என்று
சொன்னவுடன் அவர்கள் மயங்கி தரையில் விழுந்தனர்.
தங்கள் மகன் இராமனையும் மருமகள் சீதையையும் புகழ்ந்து
வாழ்த்திய, இலக்குமணனைத் துதித்த தாய்மார்கள் “தெய்வங்களே! இவர்களைக் காத்து அருளுங்கள்” என்று நா தழும்ப அரற்றி அழுதனர்.
தாய்மார்கள் பிரிந்து சென்றவுடன் தனது முன்னே நின்ற
வசிட்டரை வணங்கி, பின் தனது உயிருக்கு இணையான தம்பியுடனும் பொற்தாமரையில் வீற்றிருக்கும் மலைமகளைப்
போன்ற சீதையுடனும் இராமன் ஒரு தேர் மீது ஏறிச் சென்றான்.இதன் தொடர்புடைய பாடல்கள் கீழே.
மக்கள் யாவரும் இராமனைத் தொடர்ந்து செல்லுதல்
ஆரும்
பின்னர் அழுது அவலித்திலர்;
சோரும் சிந்தையர், யாவரும் சூழ்ந்தனர்; 'வீரன் முன் வனம் மேவுதும் யாம்' எனா, போரென்று ஒல்லொலி கைம்மிகப் போயினார். |
1836
|
இராமன் மன்னனுக்கு ஆறுதல் கூறுமாறு கூறுதல்
தாதை
வாயில் குறுகினன் சார்தலும்,
கோதை வில்லவன் தாயரைக் கும்பிடா, 'ஆதி மன்னனை ஆற்றுமின் நீர்' என்றான்; மாதராரும் விழுந்து மயங்கினார். |
1837
|
தாய்மார்கள் மூவரையும் வாழ்த்துதல்
ஏத்தினார், தம்
மகனை, மருகியை;
வாழ்த்தினார், இளையோனை; வழுத்தினார், 'காத்து நல்குமின், தெய்வதங்காள்!' என்றார்- நாத் தழும்ப அரற்றி நடுங்குவார். |
1838
|
வசிட்டனை வணங்கி மூவரும் தேர் ஏறிச் செல்லுதல்
அன்ன
தாயர் அரிதின் பிரிந்தபின்,
முன்னர் நின்ற முனிவனைக் கைதொழா, தன்னது ஆர் உயிர்த் தம்பியும், தாமரைப் பொன்னும், தானும், ஒர் தேர்மிசைப் போயினான். |
1839
|
நகர மக்கள்
அனைவரும் காடு சென்றமை
ஏவிய
குரிசில் பின் யாவர் ஏகிலார்?
மா இயல் தானை, அம் மன்னை நீங்கலாத்
தேவியர்
ஒழிந்தனர்; தெய்வ மா நகர்,
ஓவியம்
ஒழிந்தன, உயிர் இலாமையால்.
1840
|
|
எனது பார்வை
இத்தனை நாட்கள் சீதைக்கு இராமாயணத்தில் பெரிதாக குரலில்லை
என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு அவளது சினமும் சீற்றமும் ஆச்சர்யம் அளித்தது.
‘மின்னை
உற்ற நடுக்கத்து மேனியாள்’ – இதில் வானில் மின்னல் போல அவளது
உடலில் நடுக்கம் எழுந்தது என்று சொல்வது கம்பனின் அருமையான கற்பனை.
‘ஈண்டு நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு’ – சங்க காலப் பாடல்களில் அதிகம் பேசப்பட்ட உணர்ச்சி பிரிவுத் துயர்தான். சீதையும்
அப்படி ஒரு பிரிவுத் துயருக்குப் அஞ்சிதான் துணிந்து பேசுகிறாளோ என்று தோன்றுகிறது.
ஊழி பேரினும் உய்குநர் உய்வரே! – ஊழிக்காலத்திலும்
வாழ்வதற்கு வாழ்நாட்கள் இருப்பவர்கள் வாழ்ந்துதான் ஆகவேண்டும். ஆனால் அந்த வாழக்கை
வன் துயராக இருக்கும். அப்படி ஒரு துயரைத்தான் சீதையைக் கண்டவர்கள் அடைந்தார்க்ள என்று
கம்பன் அழகாக காட்டுகிறான்.
No comments:
Post a Comment