கம்பராமாயணம் - திரு அ.கி.வரதராசனுடன்
சந்திப்பு 7
பிப்ரவரி 10, 2017 - ஜூரோங்
ஈஸ்ட் பொது நூலகம்
திரு அ.கி.வரதராசனின் உரையை
அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரை
தாடகை வதைப் படலம்,
பால காண்டம்
(சில பாடல்கள் விடுபட்டுள்ளன)
சென்ற
வாரம் பார்த்த கையடைப் படலத்தில்,
இராமனையும் இலக்குமணனையும் விசுவாமித்திரரின் கையில் பிடித்துக் கொடுத்து இனிமேல் அவர்களுக்குத் தந்தையும் தாயும்
நீங்கள்தான் என்கிறான் தசரதன். அவர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு அயோத்தியை
விட்டு நீங்கி பாலை நிலத்தின் வழியாக பயணிக்கிறார் விசுவாமித்திரர். செல்லும்
வழியில் பலை, அதிபலை என்ற இரண்டு அருமறைகளை அவர்களுக்கு
உபதேசிக்கிறார். பாலை நிலத்தின் தன்மையையும் வெம்மையையும் கண்ட இராமன் அதற்கான
காரணம் என்னவென்று வினவ விசுவாமித்திரர் தாடகையின் வரலாற்றை எடுத்துரைக்கிறார்.
விசுவாமித்திரர் தாடகையின் வரலாறு கூறுதல்
“சினமுற்றால்
பூலோகத்தையே தூக்ககூடியவள். கடலையே வாரி அள்ளக்கூடியவள். வானையே இடிக்க கூடியவள். எண்ணிக்கையும்
தன்மையும் அறிய இயலாத பல பாவங்கள் சேர்ந்து, உருவத்தில்
மட்டுமே பெண்ணாகத் திரிந்து கொண்டிருப்பவள் இவள். பெண்ணாக மாற வேண்டும் என ஆண்களே
ஆசைப்படும் வகையில் அழகான தோள்களைக் கொண்ட இராமனே! காட்டில் வாழ்பவளும் சூடகம்
அணிந்த கையில் பாம்புகள் செரிந்த சூலத்தை வைத்திருப்பவளுமான இந்தச் சழக்கியன்
பெயர் தாடகை. இதுவரை உலகில் நியதிகளால் உருவாகி வந்துள்ள அனைத்து உயிர்களும் தனது
உணவுக்காக மட்டுமே எனக் கருதுபவள். மைந்தனே! இனி சொல்ல என்ன உள்ளது? இன்னும் சில நாட்களில் இந்த மண்ணில் பிறந்த அத்தனை உயிர்களும் அவளுக்கு
இரையாகிவிடும்”, என விசுவாமித்திரர் தாடகையைப் பற்றி
இராமனுக்கு கூறுகிறார்.
மண் உருத்து எடுப்பினும், கடலை வாரினும்,
விண் உருத்து இடிப்பினும், வேண்டின், செய்கிற்பாள்;
எண் உருத் தெரிவு அரும் பாவம் ஈண்டி, ஓர்
பெண் உருக் கொண்டெனத் திரியும் பெற்றியாள்; (360)
'சூடக அரவு உறழ் சூலக் கையினள்;
காடு உறை வாழ்க்கையள்;-கண்ணின் காண்பரேல்,
ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்!-
"தாடகை" என்பது அச் சழக்கி
நாமமே; (362)
'முன் உலகு அளித்து முறை நின்ற உயிர் எல்லாம்
தன் உணவு எனக் கருது தன்மையினள்;-மைந்த!-
என் இனி உணர்த்துவது? இனிச் சிறிது நாளில்
மன்னுயிர் அனைத்தையும் வயிற்றின் இடும்' என்றான். (365)
தாடகையின் உறைவிடத்தை இராமன் வினாவுதல்
தனது ஆசிரியர் சொன்னதைக் கேட்ட பிறகு, சங்கிருக்கும் கையில் ஒப்பற்ற
வில்லை ஏந்தியுள்ள இராமன் தேன் மிகுந்த மணமிக்க மலர்கள் சூட்டிய தனது தலையை
அசைத்து இப்படிப்பட்ட பாதகமான தொழிலை செய்யும் தாடகை இப்போது எங்கிருக்கிறாள்
என்று வினவுகிறான்.
அங்கு,
இறைவன் அப் பரிசு உரைப்ப, அது கேளா,
கொங்கு உறை நறைக் குல மலர்க் குழல் துளக்கா,
'எங்கு உறைவது, இத் தொழில் இயற்றுபவள்?'
என்றான் –
சங்கு உறை கரத்து ஒரு தனிச் சிலை தரித்தான்.(366)
தாடகையின் தோற்றம்
கால்களில்
அணிந்த சிலம்புகளுக்கிடையே மலைகள் செறியும்படி நிலத்தை மிதித்தாள். மிதித்த
நிலத்தில் ஏற்பட்ட குழியில் கடல் நீர் உட்புக,
தீயை ஒத்த வலிமையுடைய எமனும் அவளுக்கு அஞ்சி ஓடி குகையில் ஒளிந்துகொள்ள, நிலத்தில் உள்ள மலைகள் எல்லாம் பின்தொடர தாடகை வந்தாள்.
சிலம்புகள் சிலம்பிடை செறித்த கழலோடும்
நிலம் புக மிதித்தனள்; நெளித்த குழி வேலைச்
சலம் புக, அனல் தறுகண் அந்தகனும்
அஞ்சிப்
பிலம் புக, நிலக் கிரிகள் பின் தொடர,
வந்தாள் (368)
தாடகை ஆரவாரத்துடன் அவர்களை நோக்கி நகைத்து வீர உரை பகர்தல்
கடப்பதற்கு
கடினமான, வலிமையான எனது காவலுக்கு உட்பட்ட பகுதி இது. இங்குள்ள
அனைத்தும் மீண்டும் துளிர்க்காதவாறு கருவறுத்துவிட்டேன். இனிமேல் சுவை மிகுந்த ஊண்
உணவு எனக்கு கிடைப்பது அரிது என்று எண்ணி நீங்களே உணவாக வந்தீர்களா? அல்லது உங்களது தீயூழ் உங்களை உந்தித் தள்ள வந்தீர்களா? இங்கு வந்ததன் காரணத்தைச் சொல்லுங்கள் என்று கிண்டலாக கேட்கிறாள்
தாடகை.
'கடக்க அரும் வலத்து எனது காவல் இது; யாவும்
கெட, கருவறுத்தனென்;
இனி, "சுவை கிடக்கும்
விடக்கு அரிது" எனக் கருதியோ?
விதிகொடு உந்த,
படக் கருதியோ?-பகர்மின், வந்த பரிசு!' என்றே. (372)
வேல் கொண்டு வருவேன் எனத் தாடகை சினந்து வருதல்
மேகங்கள் விழுமாறு முறைத்தாள். மனம் புழுங்கினாள். மலைகள் கீழே
விழுமாறு எட்டி உதைத்தாள். சந்திரனின் திண்மையான ஒரு பாகம் என்று சொல்லத்தகுந்த
முற்றிய பற்களை அதக்கினாள். வேலைக் கைகளில் எடுத்துக்கொண்டு உங்கள் உடலில் இதை
எறிவேன் என இராமலக்குமணனை நோக்கி சினத்துடன் உரைத்தாள்.
மேகம் அவை இற்று உக விழித்தனள், புழுங்கா,
மாக வரை இற்று உக உதைத்தனள்; மதித் திண்
பாகம் எனும் முற்று எயிறு அதுக்கி, அயில் பற்றா,
'ஆகம் உற உய்த்து, எறிவென்'
என்று, எதிர் அழன்றாள்.
(373)
பெண் என்றெண்ணி இராமன் கணை ஏவாமல் இருத்தல்
அந்த
அரக்கியைக் கொல்வது விசுவாமித்திரரின் கருத்தாக இருந்தாலும் அவளது ஆவியை வாங்கிவா
என இராமன் தனது கணையைத் தொடுக்கவில்லை. மண்ணுயிர்கள் அனைத்தும் நடுங்குமாறு அவள்
கொலைத்தொழிலை தொடங்கி இருந்தாலும் அவள் பெண்ணாயிற்றே என நினைத்து தயங்கினான்
பெருந்தகை இராமன்.
அண்ணல் முனிவற்கு அது கருத்து எனினும், 'ஆவி
உண்' என, வடிக் கணை தொடுக்கிலன்; உயிர்க்கே
துண் எனும் வினைத்தொழில் தொடங்கியுளளேனும்,
'பெண்' என மனத்திடை பெருந்தகை நினைந்தான்.
(374)
இராமன் கருத்தறிந்த முனிவன் இவள் பெண் அல்லள் கொல்லுதி எனல்
“உலகில்
உள்ள அனைத்து தீமைகளையும் செய்து முடித்தவள். வெறும் சக்கை என்பதால் எம்மைப் போன்ற
முனிவர்களை உண்ணாமல் விட்டுவைத்திருக்கிறாள். அவள் செய்த தீயச்செயல்களில்
இவ்வளவுதான் குறை. மணியாலான ஆபரணங்களை அணிந்தவனே! இவளை என்னவென்று கருதுவது? இந்தக் கொடுமைக்காரியைப் பெண் என்று கருதலாமா?
நாணம், மானம் உடையவர்களுக்குத் தீங்கிழைத்தால்தான் அது
நகைப்புக்கு உரியதாக மாறும். இவளுக்கு அப்படி எதுவுமில்லை. வாள்வித்தையில் வலிமை
மிக்க ஆடவர்களின் தோளாற்றால் இவளது பெயரைக் கேட்டமாத்திரத்தில் தோற்கும் என்றால்
ஆண்மை என்ற பண்பு யாரிடம் இருக்கிறது? யோசித்துப்பார்.
அந்தகனுக்கு ஒப்பான வேலைக் கையில் ஏந்தியவனே! வாழ்நாள் முடிந்ததைக் கணக்கிட்டு, அறப்பயன்களைக் கருத்தில் கொண்டு விண்ணுக்கு அனுப்பும் வேலையைச் செய்யாமல்
வாசனையை உணர்ந்த மறுநொடியே அவ்வுயிரைத் தின்றுவிடத்துடிக்கும் எமன் இந்தத் தாடகை. இவள்
மீது உள்ள கோபத்தில் கூறவில்லை. அழிவற்ற நல்லறத்தின் அடிப்படையில் கூறுகிறேன்.
இவளது தீச்செயல்களைப் பற்றி அறிந்தபின்பும் நீ அமைதி காப்பது தர்மம் இல்லை. இந்த
அரக்கியை கொல்!” என்று விசுவாமித்திரர் இராமனின் மனதை
மாற்றுகிறார்.
'தீது என்றுள்ளவை யாவையும் செய்து, எமைக்
கோது என்று உண்டிலள்; இத்தனையே குறை;
யாது என்று எண்ணுவது? இக் கொடியாளையும்,
மாது என்று எண்ணுவதோ?-மணிப் பூணினாய்! (376)
'நாண்மையே உடையார்ப் பிழைத்தால், நகை;
வாண்மையே பெற்ற வன் திறல் ஆடவர்
தோண்மையே இவள் பேர் சொலத் தோற்குமேல்,
ஆண்மை என்னும் அது ஆரிடை வைகுமே? (377)
'சாற்றும் நாள் அற்றது எண்ணி, தருமம்
பார்த்து,
ஏற்றும் விண் என்பது அன்றி, இவளைப் போல்,
நாற்றம் கேட்டலும் தின்ன நயப்பது ஓர்
கூற்றும் உண்டுகொல்?-கூற்று உறழ் வேலினாய்! (380)
'ஈறு இல் நல் அறம் பார்த்து இசைத்தேன்; இவட்
சீறி நின்று இது செப்புகின்றேன் அலேன்;
ஆறி நின்றது அறம் அன்று; அரக்கியைக்
கோறி' என்று, எதிர் அந்தணன் கூறினான்.(382)
முனிவனின் ஏவலுக்கு இராமன் இசைந்து கூறுதல்
விசுவாமித்திரர்
சொன்னதைக் கேட்ட ஐயன் (இராமன்) “அவளைக்
கொல்வதால் அறத்திக்குப் புறம்பான
விளைவுகள் ஏற்பட்டாலும் அவ்வாறு செய்யுமாறு
நீங்கள் கட்டளையிட்டால் உங்கள் உரையை வேத வாக்காக கொண்டு செய்து முடிப்பதே எனது அறத்தின்
வழியாகும்” என்றான்.
ஐயன் அங்கு அது கேட்டு, 'அறன் அல்லவும்
எய்தினால், "அது செய்க!"
என்று ஏவினால்,
மெய்ய! நின் உரை வேதம் எனக் கொடு
செய்கை அன்றோ! அறம் செயும் ஆறு'
என்றான்.(383)
தாடகை சூலப்படையை ஏவ, இராமன் அம்பால் அதனைத் துணித்தல்
கங்கையின்
இனிய நீர் பாயும் கோசல நாட்டுக்குரியவனான இரமனின் எண்ணத்தைத் தீயைப் போன்ற சினம்
கொண்ட சழக்கியான தாடகை மனதில் கொண்டு, கொடிய கண்களிலிருந்து நெருப்பை உமிழ்ந்து, தனது சிவந்த கையில் உள்ள சூலம் என்ற நெருப்பை அவர்கள் மீது வீசினாள். திருமாலின்
அவதாரமான இராமன் அம்பைத் தொடுத்ததையும் தனது அழகிய வில்லை வளைத்ததையும் யாரும் காணவில்லை.
அக்கொடியவள் எய்த எமனின் மறுவடிவான சூலம் சிறு, சிறு
துண்டுகளாக உடைந்து விழுந்ததை மட்டுமே கண்டனர்.
கங்கைத் தீம் புனல் நாடன் கருத்தை, அம்
மங்கைத் தீ அனையாளும் மனக்கொளா,
செங் கைச் சூல வெந் தீயினை, தீய தன்
வெங் கண் தீயொடு மேற்செல வீசினாள்.(384)
மாலும், அக் கணம் வாளியைத் தொட்டதும்,
கோல வில் கால் குனித்ததும், கண்டிலர்;
காலனைப் பறித்து அக் கடியாள் விட்ட
சூலம் அற்று வீழ் துண்டங்கள் கண்டனர்.(386)
இராம பானம் தாடகையின் நெஞ்சில் ஊடுருவ, அவள் மாய்ந்து மண்ணில் வீழ்தல்
கரிய
செம்மல் இராமனது சுடுசொல்லுக்கு இணையான வேகம் மிக்க வாளி, இருள் நிறமுடைய தாடகையின் வைரம் பாய்ந்த கல்லாகிய மார்பைத்
துளைத்துக்கொண்டு அவளது முதுகுப்புறம் சென்று விழுந்தது. அந்த சரத்தின் வேகம்
கல்லாத மூடர்களுக்கு கற்றவர்கள் சொல்லும் பொருள் ஒரு காதில் புகுந்து மறுகாதில்
வெளியேறும் வேகத்திற்கு இணையாக இருந்தது. உலோகவியலில் (Metallurgy) வலிமையான ஓர் உலோகத்தை உடைக்க அல்லது துளையிட அதைவிட
வலிமையான கருவி தேவை. அக்கருவியை நீரில் மூழ்கவைக்கும் முறையாலோ (Water
Quenching) அல்லது காற்றில் மூழ்கவைக்கும்
முறையாலோ (Air Quenching) தயார் செய்வார்கள். உயர் வெப்பநிலைக்கு சூடாக்கப்பட்ட அந்தக்
கருவி நீரிலோ அல்லது காற்றிலோ உடனே குளிர்விக்கப்படும்போது அதன் வலிமை பலமடங்கு
பெருகுகிறது. இப்பாடலில் துளையிடப்படவேண்டியது வைரம் பாய்ந்த கல்லாகிய தாடகையின்
நெஞ்சு. அதை துளையிட சொல்லைப் போல அதிக வெப்பநிலையில் புறப்படும் இராமனது அம்பு
காற்றில் பட்டு குளிர்விக்கப்பட்டு பலமடங்கு ஆற்றலைப் பெற்று செய்ய வேண்டிய வேலையை
கனகச்சிதமாக செய்து முடிக்கிறது.
புழுதி
மிக்க அந்தக் கானகம் முழுவதும் குருதி பொங்கிப் பரவ தடித்த உடலைக் கொண்டவளும் குகை
போன்ற வாயைக் கொண்டவளுமான தாடகை,
பத்து தலையிலும் மணிமுடி கொண்ட இராவணனது அழிவை முன்பே அறிவிக்கும் துர்நிமித்தமாக
வீழ்ந்து கிடக்கும் வெற்றிக்கொடியைப் போல நிலத்தில் கிடந்தாள்.
மணம்
பொருந்திய தாமரையில் வீற்றிருக்கும் பிரம்மனை ஒத்த விசுவாமித்திரரின் ஆணையை
மறுக்காத, மணிகளாலும் பொன்னாலும் ஆன ஆபரணங்களை அணிந்துள்ள
காகுத்தனின் (இராமன்) கன்னிப்போரில், இதுநாள் வரை வாள் கொண்ட
அரக்கர்களின் உயிரைக் குடிக்கப் பயந்து, நாணமுற்று ஆனால் அதே
சமயம் ஆசையால் உழன்று கொண்டிருந்த எமன் அச்சுவையைச் சிறிது அறிந்துகொண்டான்.
சொல் ஒக்கும் கடிய வேகச் சுடு சரம், கரிய செம்மல்,
அல் ஒக்கும் நிறத்தினாள் மேல் விடுதலும், வயிரக் குன்றக்
புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள் என, போயிற்று அன்றே! (388)
பொடியுடைக் கானம் எங்கும் குருதிநீர் பொங்க வீழ்ந்த
தடியுடை எயிற்றுப் பேழ் வாய்த் தாடகை, தலைகள்தோறும்
முடியுடை அரக்கற்கு, அந் நாள், முந்தி உற்பாதம் ஆக,
படியிடை அற்று வீழ்ந்த வெற்றி அம் பதாகை ஒத்தாள்.(390)
வாச நாள் மலரோன் அன்ன மா முனி பணி மறாத,
காசு உலாம் கனகப் பைம் பூண், காகுத்தன் கன்னிப் போரில்,
கூசி, வாள் அரக்கர்தங்கள் குலத்து
உயிர் குடிக்க அஞ்சி,
ஆசையால்
உழலும் கூற்றும், சுவை சிறிது அறிந்தது
அன்றே.(392)
No comments:
Post a Comment