சாத்தானைச் சந்தித்த சந்தோஷ தருணங்கள்
அமைப்பு சார்ந்து இயங்காமல் 'தனி' ஆளாக சில இலக்கிய நண்பர்களின் உதவியோடு நண்பர் நீதிபாண்டி இலக்கிய ஆளுமைகளைச் சிங்கப்பூருக்கு அழைத்து வருகிறார். முதலில் வந்தவர் கவிஞர் அய்யப்ப மாதவன். அப்போது நான் சென்னையில் இருந்ததால் அவரைச் சந்திக்கும் வாய்ப்பை இழந்தேன். இரண்டாவதாக வந்தவர் கவிஞர் யவனிகா ஸ்ரீராம். அவருடனான செறிவான உரையாடல் மறக்க முடியாததாக அமைந்தது. அந்த வரிசையில் அடுத்ததாக யூமா
வாசுகி வரப்போகிறார் என்று
நீதி
சொன்னபோது இரட்டிப்பு மகிழ்ச்சி. சிறார் இலக்கியம் என்ற பிரிவில் தொடர்ந்து இயங்கும் ஒரு படைப்பாளியைச் சந்திக்கப் போகிறேன் என்பதும் அவர்
என் ஊர்க்காரர் என்பதும்தான் அந்த
இரட்டிப்பு மகிழ்ச்சிக்கான காரணம்.
பிப்ரவரி 4, சனிக்கிழமை மாலை பீஷான் நூலகத்தில் நடைபெற்ற குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் எழுத்தாளர் யூமா வாசுகியைச் சந்தித்தேன். குழந்தைகளுக்கு அவர் கதைகளைச் சொல்ல அதன்பிறகு குழந்தைகள் அவருக்கு கதைகள் சொல்ல
நிகழ்ச்சி இனிமையாக கழிந்தது. (என் மகள்
மதியரசி எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய வெள்ளை ராணி கதையைச் சொல்லி கேட்டது மனதுக்கு உற்சாகமாக இருந்தது). எத்தனை வயதானலும் கதை கேட்கும்போது நமக்குள் இருக்கும் குழந்தமை வெளிவந்து கைதட்டி குதுகலிக்கத்தான் செய்கிறது.
இறுதியில் தோழி பாரதி மூர்த்தியப்பனின் ஏற்பாட்டில் ‘குல்லா வியாபாரியும் குரங்குகளும்' கதை பாடலாகவும் காட்சியாகவும் விரிந்தது. நான், பாரதி
மற்றும் தோழி சுபா
செந்தில்குமார் மூவரும் பாடலைப் பாட தோழி
பானு
சுரேஷ் குல்லா வியாபாரியாக நடித்தார். தோழி
ரமா சுரேஷும் குழந்தைகளும் குரங்குகளாக மாறிப்போயினர். பார்வையாளர்கள்தான் பாவம். நாங்கள் பாடி கேட்க வேண்டிய நிலைமை. ஆனாலும் நாங்கள் விடுவதாக இல்லை. பாடி, ஆடி முடித்தோம். உண்மையில் அந்த சில நிமிடங்கள் நாங்கள் அனைவருமே
குழந்தைகளாக மாறிப்போனோம் என்றுதான் சொல்லவேண்டும்.
பிப்ரவரி 5, ஞாயிறு மாலை அங் மோ கியோ
நூலகத்தில் நடைபெற்ற வாசகர் வட்ட வட்ட
சந்திப்பிற்கு நான் எதிர்பார்த்ததைவிட அதிக பேர்
வந்திருந்தார்கள். மறைந்த எழுத்தாளர் க.சீ.சிவக்குமாருக்கு ஒரு நிமிட
மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பிறகு
யூமா
தன்னைப் பற்றியும் இலக்கியத்தில் தனது இயங்குதளம் பற்றியும் சிறு அறிமுகம் தந்தார். அதன்பிறகு வாசகர்களுடனான கலந்துரையாடல் நடந்தது.
மாரிமுத்து என்ற இயற்பெயரைக் கொண்ட யூமா சிறுவயதில் தந்தையை இழந்து தாயுடனும் உடன்பிறந்தவர்களுடனும் சொந்த ஊரான
பட்டுக்கோட்டையில் வசித்திருக்கிறார். மூன்று தாய் மாமன்களும் கலைஞர்கள். ஒரு மாமா
ஓவியர். இன்னொருவர் நாடகக்கலைஞர். மற்றொருவர் கர்நாடக இசைக்கலைஞர். பயங்கரவாதிகள் குழு போல சிறுவர்கள் இணைந்து குழுவாகவும் இரகசியமாகவும் காமிக்ஸ் நூல்களை வாசித்த அனுபவத்தை யூமா
சொன்னபோது கோகுலம் இதழைக் கடன் வாங்கி படிக்க நான்
சிறுவயதில் பட்டபாடு கண்முன் நிழலாடியது.
ஜெயகாந்தனின் ஒரு கதை காமிக்ஸ் தளத்திலிருந்து சிறுகதை வாசிப்பிற்கு யூமாவை நகர்த்தியுள்ளது. அக்கதை தந்த
வியப்பும், அதிர்ச்சியும் அவரது பார்வையை மற்ற எழுத்தாளர்களை நோக்கி திருப்பி உள்ளது.
சுந்தர ராமசாமி, கு.அழகிரிசாமி என்று எந்தவித வரிசையோ தேர்வோ இல்லாமல் பலதரப்பட்ட எழுத்துகளை வாசிக்கத் தொடங்கி இருக்கிறார் யூமா.
இவரது
முதல்
கவிதை
மா.அரங்கநாதன் அவர்கள் நடத்திய ‘முன்றில்’ என்ற
இதழில் வெளியாகி உள்ளது. அதன்பிறகு நிறைய
கவிதைகளை எழுதி யாரிடமும் காட்டாமல் வைத்துக்கொள்கிறார் யூமா. ஓவியக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் ‘அலைகள்’ பதிப்பகத்திற்கு புத்தகத்திற்கான அட்டைப்படம் வரைந்து கொடுக்கும் பணி செய்கிறார். அப்போது ‘அலைகள்’ பதிப்பகத்தின் உரிமையாளர் சிவம்
இவரது
கவிதைகளைப் படித்துவிட்டு அதை நூலாக
வெளியிடுகிறார். அந்நூலின் தலைப்பு ‘தோழமை இருள்’.
எழுத்தாளர் ஜெயமோகன் உடனான
நட்பும் அதன் மூலம்
நிகழ்ந்த குரு நித்ய
சைதன்ய யதி உடனான சந்திப்பும் யூமாவிற்கு வேறு ஓர் உலகை
அறிமுகப்படுத்துகின்றன. குரு நித்யாவின் இடத்தில் வாசிக்க நேர்ந்த மலையாள சிறார் நூல்
ஒன்று இவரது இன்றைய இலக்கிய இயங்குதளத்திற்கு வித்து
என்று சொல்லலாம். அந்நூலைப் படித்த பிறகு
மலையாள சிறார் இலக்கியத்தை பற்றி அறிய
வேண்டும் என்ற ஆர்வத்திலும் உந்துதலிலும் மலையாள மொழியைக் கற்றுக்கொண்டுள்ளார். மலையாளத்தில் உள்ள
பெரும் எழுத்தாளர்கள் அனைவரும் சிறார் இலக்கியத்திற்குத் தங்கள் பங்கை
ஆற்றியிருப்பதைக் கண்ட யூமா
தமிழில் அப்படியான சூழல்
இல்லாததால் வருத்தமுற்று மலையாள சிறார் நூல்களை மொழிபெயர்த்து தமிழ்
சூழலில் வைத்தால் இவற்றை முன்மாதிரியாக கொண்டு படைப்பாளிகள் சிறுவர் இலக்கியம் எழுதலாம் என்ற
நம்பிக்கையில் தனது பணியைத் தொடங்கியதாக கூறினார்.
ஐம்பதுகளில் பூவண்ணன், முல்லை தங்கராசன், அழ.வள்ளியப்பா போன்ற பலரது முயற்சியாலும் தீவிர செயல்பாட்டாலும் பூத்துக் குலுங்கிய சிறார் இலக்கியம் இன்றைய சூழலில் வறண்டும், ஒருவித செயற்கைத் தன்மையோடும் விளங்குகிறது என்றும் வளமான கலை, இலக்கியமற்று வளரும் அடுத்த தலைமுறையின் சிந்தனையில் பெரும் தேக்கம் நிகழும் என்றும் தனது வருத்தத்தை யூமா பதிவு செய்தார்.
எந்த
இலக்கிய வடிவமும் தன்னகத்தே ஒரு கவித்துவத்தைக் கொண்டிருக்கும்போதுதான் அதன்
உச்சத்தை அடைகிறது என்றவர் தற்காலத்தில் நவீன
கவிதைகளின் பாய்ச்சல் நம்பிக்கை தரக்கூடியதாக உள்ளது என்றார். சிறார் இலக்கியத்தில் இயங்குபவர்கள் குழந்தைகளைப் பார்த்து படைப்புகளை எழுதாமல் குழந்தையாக மாறி
எழுதுவது அவசியம் என்றவர் குழந்தைகளின் மொழியில் அவர்கள் உலகத்தைப் பதிவு செய்யவது மிக அவசியம் என்றார்.
கவிதை
நூலுக்கு வரையப்படும் ஓவியங்கள் பற்றிய கேள்வி எழுந்தபோது சில நேரங்களில் கவிதையின் திறப்பை ஓவியம் குறுக்கிவிடும் அபாயம் இருப்பதால் அது மிக, மிக கவனமாக செய்யவேண்டிய பணி என்று
பதிலளித்தார்.
கவிதைகளில் வார்த்தை தேர்வு பற்றிய கேள்விக்கு கவிதை
எழுதுவதை ஒரு PROCESS மாதிரி செய்பவர்கள் இருக்கிறார்கள் என்றாலும் தான் ஒருபோதும் அப்படி செய்வதில்லை என்றும் தனது
ஆழ்மனதின் கொந்தளிப்புகள் கவிதைக்கான வார்த்தைகளை தானாகவே தேர்ந்தெடுத்துக் கொள்கின்றன
என்றும் கூறினார்.
மலையாளத்திலிருந்து மொழிபெயர்க்கும்போது நிலம்
மற்றும் பண்பாடு சார்ந்த நுட்பமான விஷயங்களைத் தமிழுக்கு கொணர்வதில் உள்ள
சிக்கல் பற்றிய கேள்வி எழுந்தபோது சில சமயங்களில் அந்த நுட்பமான செய்திகள் பொருந்தாமல் போனாலும் அதனால்
பெரிதாக பாதிப்பு இல்லை என்றும் குழந்தைகளின் இயல்பும் உணர்ச்சிப்பெருக்கும் உலகெங்கும் ஒரே மாதிரியாக இருப்பதால் படைப்பை எளிதாக அவர்களுக்குப் புரியவைத்துவிடலாம் என்றும் உரைத்தார்.
அதிகமான மொழிபெயர்ப்பு செய்யும்போது சுயம் தொலைப்பதும் அடுத்தவரின் சாயலில் எழுதும் ஆபத்தும் இருப்பதாக கேள்வி எழுந்தபோது ஓரளவு அது உண்மைதான் என ஒத்துக்கொண்டவர் தொடக்கத்தில் இந்தப் பிரச்சனை ஏற்பட வாய்ப்பிருந்தாலும் நாட்கள் செல்ல, செல்ல
சுயத்தை மீட்டெடுத்துவிடலாம் என்றார்.
இலக்கிய கோட்பாடுகள் பற்றிய கேள்விக்கு கோட்பாடுகள் இருந்தால் அது எப்படி கலையாக முடியும்? என்று
எதிர்
கேள்வி கேட்டவர் கோட்பாடுகள் ஆபத்தானவை என்றும் அவற்றை தான்
முற்றிலும் நிராகரிப்பதாகவும் சொன்னார். ‘கலகம்
செய்யும் இடது கை’ என்ற
பிரெஞ்சு சிறுகதைத்தொகுப்பு குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்குமான கதையைத் தன்னகத்தே கொண்டிருப்பது போல தமிழில் இருதரப்பினருக்கும் பொதுவான படைப்பு இருக்கிறதா என்ற
கேள்விக்கு இல்லை என்பதுதான் அவரது பதிலாக இருந்தது.
வாண்டுமாமா போன்ற ஆளுமைகள் தற்போது இல்லை
என்று
வருந்தியவர் அமர்சித்ராவைப் பற்றிய கேள்விக்குத் தற்போது பூவுலகின் நண்பர்களால் வெளிவரும் ‘மின்மினி’ இதழ்
நல்ல
முயற்சி
என்று
குறிப்பிட்டார். ‘மஞ்சள் வெயில்’ நாவலைப் படித்த ஒரு வாசகர் அந்நாவலில் பெரும்பாலான இடங்களில் கதாநாயகன் இறைஞ்சும் தோணியில் பேசுவதாகவும் அதுதான் உங்கள் குணாதிசயமா என்று கேட்க
‘சாத்தானும் சிறுமியும்’ கவிதைத் தொகுப்பில் வரும்
சாத்தான்தான் நான் என சிரித்துக்கொண்டே கூறினார்.
அந்தத் தொகுப்பில் வரும் குடிகாரர்களின் கவிதையைத் தோழி சுபா
செந்தில்குமார் வாசித்து எந்த
சூழலில் இதை எழுதினீர்கள்? என்று கேட்க
‘நான்
குடிப்பேன்மா’
என்றார் யூமா. அந்தக் கவிதை தன்னை
மிகவும் பாதித்த கவிதை என்றும் ஒவ்வொரு முறை படிக்கும்போதும் தன் அண்ணனை நினைவூட்டுகிறது என்றும் கூறிய நண்பர் எம்.கே.குமார் எழுந்து சென்று யூமாவின் கைகளுக்கு முத்தமிட நெகிழ்வான ஒரு தருணமாக அது அமைந்தது. குழந்தையாக மாறிய ஒரு வாசகன் கண்களில் ஈரம்
பனிக்க தந்த அந்த
முத்தத்தைவிட சிறந்த பரிசாக அந்த குழந்தை எழுத்தாளனுக்கு வேறென்ன கிடைத்து விடக்கூடும்?
No comments:
Post a Comment