Tuesday, September 19, 2017

துமாசிக்கிலிருந்து காழகத்திற்கு - இரண்டாம் நாள்


துமாசிக்கிலிருந்து காழகத்திற்கு – செப்டம்பர் 9 ஆம் திகதி, 2017

காலையில் நண்பர் பாலமுருகன் வந்து எங்களை ஜெராய் மலைக்கு அழைத்துச் சென்றார். நிறைய வளைவுகள் கொண்ட குறுகிய மலைப் பாதையில் லாவகமாக காடியை ஓட்டிச் சென்றார். மேலே ஏற, ஏற பனிமூட்டம் வந்து சூழ்ந்து கொண்டது. இளையராஜாவின் பாடல்களை ஒலிக்க விட்டு மௌனமாக அந்த பனிமூட்டத்தில் மலையையும் மலையிலிருந்து கீழே தெரிந்த காட்சிகளையும் ரசித்துக்கொண்டே சென்றது மனதுக்கு ரம்மியமாக இருந்த்து.
குனோங் ஜெராய் (Gunung Jerai) என்று அழைக்கப்படும் ஜெராய் மலை கடல் மட்டத்திலிருந்து 1217 மீட்டர் உயரத்தில் உள்ளது. இது கெடாவின் மிக உயரமான மலைத்தொடர். பண்டைய காலத்தில் மற்ற நாடுகளிலிருந்து வணிகத்திற்காக வந்தவர்களுக்கு இதுதான் கலங்கரை விளக்கமாக இருந்துள்ளது. இந்த மலையைப் பற்றிய மாயாஜால செய்திகள்  மக்களிடையை வாய்வழிக் கதைகளாக இன்றும் உலவுகின்றன. இந்த மலையின் அடிவாரத்தில் பல வரலாற்று உண்மைகள் புதையுண்டு கிடப்பதாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது. முன்பு அதிகம் கண்டுகொள்ளப்படாத இந்த மலையில் இன்று சுற்றுப்பயணிகள் தங்கி ஓய்வெடுக்கும் ரிசார்ட்டுகளும் வில்லாக்களும் உள்ளன. மலையிலிருந்து கீழே பார்த்தால் ஒருபக்கம் கடலும் மறுபக்கம் வயல்களும் தெரியும் என்று நண்பர் பாலமுருகன் சொன்னவுடன் அதுவரை கொஞ்சிக்கொண்டிருந்த பனிமூட்டத்தைச் சீக்கிரம் விலகிப்போ என்று விரட்ட ஆரம்பித்தோம். நாங்கள் விரட்டிய விரட்டில் பனி சிறிது நேரம் விலகிப்போய் கீழிருந்தவற்றை காட்சிக்கு அருளியது. புகைப்படங்கள் கிளிக்கி முடித்தவுடன் சற்று இளைப்பாறிவிட்டுச் செல்லலாம் என்று உட்கார கவிதை வாசிப்பு தொடங்கியது. கதிர்பாரதியின் மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்தொகுப்பிலிருந்து ஒரு கவிதையை பாலா வாசித்தார். பனி எங்களைத் தழுவ நாங்கள் கவிதையைத் தழுவியது போதை தரும் அனுபவமாக இருந்தது. இறங்கும் வழியில் சில மந்திகளைப் பார்த்தவுடன்தான் நிறைவான மலைப்பயணம் என்ற உணர்வு தோன்றியது.

அடுத்த இடத்திற்குச் செல்வதற்கு முன்பு மதிய உணவை முடித்துக்கொள்ளலாம் என்ற முடிவெடுத்து பாலா ‘MAMAK’ கடைக்கு அழைத்து சென்றார். தமிழ் முஸ்லீம்கள் வைத்திருக்கும் உணவுக் கடைகளை ‘MAMAK’ கடைகள் என்று அழைக்கிறார்கள். உண்ட களைப்பும் காடி பயணமும் தாலாட்டுப் பாட தூக்கத்தை விரட்ட கனெக்‌ஷன்விளையாடினோம். வரலாற்று சிறப்பு மிக்க பூஜாங் பள்ளத்தாக்கை அடைந்தோம். இந்த பள்ளத்தாக்கின் வரலாற்று முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள மலேசிய எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு எழுதிய இந்தக் கட்டுரை எனக்கு உதவியது.
பண்டைய நூற்றாண்டுகளில் செழித்து இருந்த கடல் வணிகத்தின் எச்சங்களும் அப்போது தழைத்தோங்கி இருந்த இந்து, பௌத்த மதங்களின் தொன்மங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தியர்கள், சீனர்கள், கலிங்கர்கள் ஆகியோர் வணிகத்துக்காக இங்கு வந்து போனதாக கருதப்படுகிறது. முன்னூறு ஆண்டுகளாக சோழர்களின் அதிகாரத்துக்கு கீழ் இப்பகுதி இருந்திருக்கிறது. அகழ்வாராய்ச்சியின் போது வெவ்வேறு இடங்களில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை (விதவிதமான மணிகள், புத்தர் சிலைகள், விநாயகர் சிலை, சிலைகள் வைக்கும் பீடங்கள்) அருங்காட்சியத்துக்குள் வைத்திருக்கிறார்கள். பூஜாங் பள்ளத்தாக்கில் பண்டைய காலத்தில் இரும்பு உலைகள் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பட்டினப்பாலை காழகம் என்று கெடாவைக் குறிக்கின்றது. காழ் என்பதற்கு இரும்பு என ஒரு பொருளும் உண்டு.







மேலும் கோயிலின் அடித்தளங்களாக இருந்திருக்கலாம் என்று நம்பப்படும் செங்கற்கள் அதிக அளவில் கிடைத்திருக்கின்றன. அவற்றை இங்கு கொண்டு வந்து கோயில் போல மீண்டும் உருவாக்கி இருக்கிறார்கள். இந்தக் கோயில்களை Candi’ என்று குறிப்பிட்டுள்ளார்கள். இந்தோனேசியாவில் இந்து-புத்த ஆலயங்களைக் Candi’ என்றுதான் குறிப்பிடுகிறார்கள்.  



இது போன்ற வரலாற்றோடு தொடர்புடைய இடங்களுக்குச் செல்கையில் கால இயந்திரத்தில் ஏறி பின்னோக்கி செல்லும் கிறுக்குத்தனம் எனக்கு உண்டு. வானம் தொடர்ந்து மழைத் தூறல்களைத் தெளித்துக் கொண்டிருக்க அந்தச் சாரலில் நனைந்தவாறு மண் வாசனையை நுகர்ந்தவாறு சோழ மகாராணியாக என்னைக் கற்பனை செய்து கொண்டு அந்த இடத்தை ஒய்யாரமாக வலம் வந்தது அப்பப்பா அருமையான அனுபவம். அங்கிருந்து அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடத்திற்குச் சென்றோம். அன்று விடுமுறை என்பதால் ஆட்கள் யாரும் வேலை செய்யாமல் அந்த இடமே வெறிச்சோடி கிடந்தது.    
திரும்பும் வழியில் மூடா ஆறு எங்களை எதிர்கொண்டு வரவேற்றது. கெடாவின் விவசாயத்திற்குப் பங்களிக்கும் முக்கியமான நீண்ட ஆறு. தண்ணீர் ஓடும் ஆற்றைப் பார்த்து வெகுநாட்களாகிவிட்டதால் இரண்டு கரைகளையும் தொட்டுக்கொண்டு நீர் ஓடியதைப் பார்த்தபோது மனதுக்குள் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டோடியது. படகு சவாரி இருக்கிறதா என்று பாலா விசாரிக்கச் செல்ல சில நிமிடங்கள் ஆற்றின் கரையோரத்தில் நின்று வேடிக்கைப் பார்த்தோம். படகு சேவை கிடையாது என்ற செய்தி வருத்தம் அளித்தது. அங்கு அமைக்கப்பட்டிருந்த சிறிய கண்காட்சிக் கூடத்தைப் பார்வையிட்டோம்.
அடுத்ததாக நாங்கள் சென்ற இடம் AIMST’ University (Asian Institute of Medical, Science and Technology). மலேசிய இந்திய மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் விதமாக மலேசியன் இந்திய காங்கிரஸால் கட்டப்பட்ட இப்பல்கலைக்கழகம் மருத்துவம், அறிவியல், தொழில்நுட்பம், வணிக நிர்வாகம் ஆகிய துறைகளில் பட்டப்படிப்புகளை வழங்குகிறது. மலேசிய மாணவர்கள் மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளைச் சார்ந்த மாணவர்களும் இங்கு வந்து தங்கி பயில்கிறார்கள். டத்தோ எஸ்.சாமிவேலு இப்பல்கலைக்கழகத்தின் Chancellor ஆகவும் Chairman ஆகவும் இருக்கிறார். அங்கிருந்த Canteenல் தேநீர் குடித்தபோது என் கல்லூரி கால நினைவுகள் மனதில் பருந்தைப் போல வட்டமடித்தன. 
அதன்பிறகு நாங்கள் சென்றது மிக முக்கியமான இடம். மலாயா வரலாற்றிலும் இலக்கியத்திலும் தமிழர்களின் வாழ்க்கை என்றாலே அது தோட்டப்புறத்து வாழ்க்கைதான். அந்த இரப்பர் தோட்டத்தை அதாவது கித்தாக் காட்டைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை எழ பாலாவிடம் கேட்டோம். மலேசியாவின் முக்கால்வாசி இரப்பர் காடுகளை விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டு திமிறிக் கொண்டு நிற்கின்றன செம்பனை மரங்கள். சில இரப்பர் தோட்டங்களே அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கின்றன.  இந்தியருக்குச் சொந்தமான ஒரு இரப்பர் தோட்டத்துக்கு பாலா எங்களை அழைத்துச் சென்றார். காடியை நிறுத்திவிட்டு இறங்கியவுடன் நாங்கள் எப்போது வருவோம் என்று காத்திருந்தது போல படையாக எங்களைச் சூழ்ந்துகொண்டு வரவேற்றன கொசுக்கள். அந்த வரவேற்பிற்குப் பயந்து தோழி பாரதி ஓடிப்போய் மீண்டும் காடிக்குள் ஏறிக்கொள்ள நண்பர்கள் சுஜாவும் ராம்சந்தரும் அந்த ஒத்தையடிப் பாதையில் சிறிது தூரம் நடந்துவிட்டு திரும்பினர். வெட்டப்பட்ட மரத்திலிருந்து வடிந்து அந்த சிறிய வாளியில் நிரம்பியிருந்த பாலைத் தொட்டுப் பார்த்தபோது கொசுக்கூட்டத்தைப் போல பல உணர்வுகள் கலவையாக வந்து சூழ்ந்து கலங்கடித்தன. அங்கு மக்கள் வசிக்கும் இருப்பிடத்தைப் பார்த்தபோது இத்தனை வசதிகள் இருந்தும் வாய்த்த வாழ்க்கையைக் குறை சொல்லிக்கொண்டு இருக்கும் என்னை நானே மனதுக்குள் திட்டிக்கொண்டேன்.


அங்கிருந்து ஹோட்டலுக்குச் சென்று சற்று நேரம் ஓய்வெடுத்துவிட்டு இரவு உணவு சாப்பிட கிளம்பினோம். செல்லும் வழியில் ஏதாவது கோயிலுக்குப் போகலாம் என்ற திடீர் திட்டம் போட பாலா எங்களை அங்கிருந்த சித்தி விநாயகர் கோயிலுக்கு அழைத்து சென்றார். விநாயகர், சிவன், நந்தி, பிரம்மா, பெருமாள், பஞ்சமுக ஆஞ்சநேயர், அஷ்டதசபுஜ மகாலட்சுமி துர்கை, கல்கத்தா மகா காளி  என அனைத்து சிலைகளும் மிக பிரமாண்டமாக தமிழ்நாட்டில் செய்யப்பட்டு கொண்டுவரப்பட்டுள்ளன. விநாயகர் ஆலயம் என்பதாலோ என்னவோ முருகனின் சிலை மட்டும் மிக சிறியதாக இருந்தது. அவலில் செய்த களி மாதிரி ஒன்றைப்  பிரசாதமாக வினியோகித்தனர்.

அலுவல் காரணமாக அடுத்த நாள் எங்களுடன் வர இயலாது என்று கூறிய நண்பர் பாலமுருகன் எங்களிடமிருந்து பிரியா விடைபெற்றுக்கொண்டார். அவர் சமீபத்தில் எழுதி வெளியிட்டுள்ள நூல்களை பெற்றுக்கொண்டோம். நானும் தோழி பாரதியும் இரவு இரண்டு மணி வரை அரட்டை அடித்துவிட்டு உறங்கச் சென்றோம்.
    

    

No comments:

Post a Comment