Monday, September 18, 2017

துமாசிக்கிலிருந்து காழகத்திற்கு - முதல் நாள்


துமாசிக்கிலிருந்து காழகத்திற்கு – செப்டம்பர் 8 ஆம் திகதி, 2017

பயணம் ஒரு கொண்டாட்டு. அதுவும் நண்பர்களுடனான பயணம் என்றால் சொல்லவே வேண்டாம். வரலாறு, இலக்கியத்தோடு தொடர்புடையதாகவும், பயண நேரமும் செலவும் குறைவானதாகவும், அனைவரும்  வழக்கமாகச் செல்லும் சுற்றுலாத்தளமாக இல்லாமலும் உள்ள இடம் ஒன்றை யோசித்தபோது மலேசியாவின் கெடாநினைவுக்கு வந்தது. ‘கடாரம் வென்றான்என்ற பட்டப்பெயரை இராசேந்திர சோழனுக்குப் பெற்றுத் தந்த கடாரம்தான் இன்றைய கெடா’. மலேசியாவின் சிறந்த எழுத்தாளர்கள் பலரைத் தந்த பெருமை இந்த மண்ணுக்கு உண்டு. பயண ஏற்பாடுகள் மும்முரமாய் நடந்தேறின.



நான்கு நண்பர்கள் கொண்ட குழாம் (நான், பாரதி மூர்த்தியப்பன், சுஜா செல்லப்பன், ராம்சந்தர்) காலை ஒன்பது மணிக்கு மலேசியாவின் புகழ்பெற்ற சுற்றுலாத்தளமான பினாங்கு தீவிற்கு விமானத்தில் புறப்பட்டது. வழக்கமான கிண்டல், கேலி, கலாய்த்தலோடு பயணம் களைகட்டியது. அதிர்ஷ்டவசமாக விமானத்தில் பாதி இருக்கைகள் காலியாக இருக்க நாங்கள் ஓடிபிடித்து விளையாடாதது ஒன்றுதான் பாக்கி. சீட்டுகட்டு, அந்தாக்‌ஷரி என விளையாடியதில் ஒன்றரை மணி நேரம் போனதே தெரியவில்லை. விமானத்திலிருந்து பார்க்க பினாங்கு தீவு அழகாக இருக்கும் என்ற கேள்வி ஞானத்தால் ஜன்னல் ஓர இருக்கை தேடி ஓடி நண்பர்கள் அமர்ந்து கொள்ள நான் மட்டும் விமானம் எந்தவித பிரச்சனையுமின்றி தரை தொட வேண்டுமென்று என் ஊரான பட்டுக்கோட்டையில் குடியிருக்கும் எல்லை தெய்வமான நாடி அம்மனுக்கு ஓர் அர்ச்சனையை வேண்டியவாறு கண்களை மூடிக்கொண்டு மோன நிலையில் இருந்தேன் (பயத்தை வெளிக்காட்டாமல் இருக்க எப்படியெல்லாம் நடிக்க வேண்டி உள்ளது). நாடி அம்மன் கைவிடவில்லை (இதுவரை செய்யாமல் விட்ட அர்ச்சனைகளின் பட்டியலில் ஒன்று கூடி இருக்கிறது. நாடி ஆத்தா மன்னிப்பாளாக!)

பினாங்கு விமானநிலையத்தை விட்டு வெளியே வந்தவுடன் மலேசிய எழுத்தாளரும் நண்பருமான திரு பாலமுருகன் உதவியோடு ஏற்பாடு செய்திருந்த டாக்ஸி ஓட்டுநர் பெருமாள் எங்களை அழைத்து போக காத்திருந்தார். அவரது காடியில் கிட்டத்தட்ட ஒரு மணி நேர பயணம். மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்த பெருமாளின் மூதாதையர்கள் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாம். ஊரில் உள்ள உறவுகளைச் சந்திக்க பலமுறை தமிழ்நாடு சென்றிருப்பதாக கூறினார். பினாங்கு மலாயா வரலாற்றில் முக்கியமான துறைமுகம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் நாகப்பட்டினத்திலிருந்து கிளம்பிய கப்பல்கள் சிங்கை வழியாக பயணித்து இறுதியாக பினாங்கு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. பினாங்குத் தீவை மலேசிய நிலப்பரப்புடன் 13.5 கி.மீ நீளமுடைய பாலம் ஒன்று இணைக்கிறது. விமான நிலையத்திலிருந்து இப்பாலத்தின் வழியாக காடியில் சென்றது அற்புதமான அனுபவமாக இருந்த்து. ஜார்ஜ் டவுன் பினாங்கு மாநிலத்தின் தலைநகரம்.

பினாங்கின் எல்லையாக வடக்கிலும் கிழக்கிலும் கெடா மாநிலம் உள்ளது. இந்த மாநிலத்தில் உள்ள சிறிய ஊர்தான் சுங்கை பட்டாணி. மலாயில் சுங்கை என்றால் ஆறு. பட்டாணி என்றால் விவசாயி. கெடா மாநிலத்தை மலேசியாவின் நெல் களஞ்சியம் என்று சொல்கிறார்கள். விமான நிலையத்திலிருந்து சரியாக ஒரு மணி நேரத்தில் சுங்கை பட்டாணியில் முன்பதிவு செய்திருந்த ஹோட்டலை அடைந்தோம். அங்கிருந்து எங்களை நண்பர் பாலமுருகன் அவரது இல்லத்திற்கு அழைத்து சென்றார். உள்ளே நுழைந்தவுடன் அவரது ஏழு வயது மகன் வாங்க! வணக்கம்!என்று வரவேற்ற அந்த நொடியில் அத்தனை களைப்பும் பறந்தோட புதிய உற்சாகம் தொற்றிக்கொண்டது. மிக சுவையான மதிய உணவை அவரது தாயும் மனைவியும் பார்த்துப் பார்த்துப் பரிமாற வயிறும் மனமும் நிறைந்தது.

அடுத்ததாக மலேசிய எழுத்தாளர் சீ.முத்துசாமியின் வீட்டிற்குப் புறப்பட்டோம். வரும் டிசம்பர் மாதம் விஷ்ணுபுரம் விருதைப் பெறப்போகும் அற்புதமான படைப்பாளியைச் சந்திக்கப் போகும் ஆவலில் நாங்கள் வீட்டு வாசலில் காத்திருக்க சீ.முத்துசாமி தனது கறுப்பு நாயோடு கதவைத் திறக்க வந்தார். ஜெயமோகனுக்கு யானை போல சீ.முத்துசாமிக்கு நாய். எனக்கும் தோழி பாரதிக்கும் பைரவர் என்றாலே மரியாதை கலந்த பயம். அதைச் சொன்னவுடன் கழுத்துப் பட்டையை எடுத்து வந்து நாயின் கழுத்தில் கட்டியவுடன் அது எங்களை முறைத்துக்கொண்டே நடந்து வந்து அவர் அருகில் சமர்த்தாக அமர்ந்து கொண்டது.



சிங்கை இலக்கியம், மலேசிய இலக்கியம், ஜெயமோகனின் விமர்சனம், எழுத்தாளர்களின் கோமாளித்தனங்கள் என பல்வேறு தளங்களில் உரையாடல் விரிந்தது. “தனித்துவமான, கவித்துவமான மொழி எப்படி தங்களுக்கு வயப்பட்டது?” என்ற கேள்விக்கு வயசாயிடுச்சுல்ல. அதான் காரணம்என்று சொல்லி சிரித்தார் சீ முத்துசாமி. அவரது நூல்கள் ஒன்றிரண்டைத் தவிர மற்றவை சிங்கை நூலகத்தில் கிடைக்கவில்லை என்று சொன்னவுடன் தன்னிடமே சில நூல்கள் இல்லை என்று சொன்னவர் அனைத்து நூல்களையும் மறுபதிப்பு செய்யும் வேலை நடந்து கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். அவரிடம் இருந்த சில நூல்களை எங்கள் நால்வருக்கும் கையெழுத்திட்டு தந்தார். நான் என் ஆறஞ்சுசிறுகதை நூலை அவரிடம் கொடுத்தேன். டிசம்பரில் கோவையில் நடைபெற இருக்கும் விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கு கட்டாயம் வரவேண்டும் என்றவர் நான் உங்கள் அனைவரையும் நிச்சயம் எதிர்பார்ப்பேன் என்றார். வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் வாசலில் மாட்டியிருந்த கருப்பசாமி படத்தில் மயங்கிய தோழி பாரதி அதைப்பற்றி விசாரிக்க அது என் மனைவி டிபார்ட்மெண்ட் என்று கூறி சிரித்த சீ.முத்துசாமியிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டோம்.

அடுத்து நாங்கள் சென்று சேர்ந்த இடம் கூலிம் பாயா பெசார் சிற்றூரில் அமைந்திருக்கும் தியான ஆசிரமம். வானம் லேசாக இருட்டத் தொடங்கியது. தியான மண்டபத்தில் வலது புறம் மூத்த மகன் கணபதி இருக்க இடது புறம் இளைய மகன் கந்தன் இருக்க நடுவில் கொள்ளை அழகுடன் அமர்ந்திருந்த அம்மனைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என தோன்றியது. நவகிரகங்களும் அவற்றின் வாகனங்களும் ஐம்பொன்னால் வடிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன.

சுவாமி பிரமானந்த சரஸ்வதி எங்களை அன்புடன் வரவேற்று தனது அறைக்கு அழைத்துச் சென்றார். மழை ஆரம்பித்திருந்தது. அந்தச் சிறிய அறையில் திரும்பிய பக்கங்கள் எல்லாம் நூல்கள். ஆன்மீகமும் இலக்கியமும் இணைந்த சுவாமியின் நூலகம் அது.  சங்க இலக்கியங்கள் முதல் நவீன இலக்கியங்கள் வரை அனைத்தும் அங்கே இருந்தன. என் நூலும் ஓர் ஓரத்தில் இருக்கட்டுமே என்ற எண்ணத்தில் எனது ஆறஞ்சு நூலை எடுத்து சுவாமியிடம் தந்தேன். நூலைப் பெற்றுக்கொண்டவுடன் சுவாமி பழிக்குப் பழி என்று கூறிக்கொண்டே எழுந்தார். நூலை தொட்டதற்கே இப்படி ஒரு பழிவாங்கும் உணர்ச்சியா? ஐயோ என்ன செய்யப்போகிறாரோ?” என்று நான் உள்ளுக்குள் நடுங்க அவரோ ஓர் இலக்கியவாதியைச் சரியாக எப்படி பழி வாங்க முடியும் என்பதைத் தெரிந்தவராக அவர் எழுதிய தனியன் என்ற நூலை என்னிடம் தந்தார்.



சற்று நேரம் இலக்கியம் பற்றிய சிறு உரையாடல் நடந்தேறியது. நவீன இலக்கிய களத்தைச் சேர்ந்த ஏழெட்டு நண்பர்கள் மாதம் ஒருமுறை அந்த அறையில் சந்தித்து இலக்கியம் பற்றி விவாதிப்பதாக நண்பர் பாலமுருகன் சொன்னார். பிறகு சுவாமி எங்களை சமையல் அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்த நீண்ட உணவருந்தும் மேசையைச் சுற்றி நாங்கள் அமர்ந்துகொள்ள சுவாமி எங்களுக்காக தேநீர் தயாரித்தார். சிறிது நேரத்தில் நவீன இலக்கிய களத்தின் மற்றொரு நபரான விரிவுரையாளர் குமாரசாமி (பினாங்கு ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி) எங்களுடன் இணைந்து கொண்டார். சூடான தேநீர், கொட்டும் மழை, நண்பர்களுடனான உரையாடல்....எத்தனை பேருக்கு வாய்க்கும் இப்படியான அனுபவம் என்று நினைத்துக் கொண்டேன். இந்த ஆசிரமத்தில் வசதி குறைந்த சிறுவர்கள் தங்கி படிக்கும் ஹோம் ஒன்றை சுவாமி நடத்தி வருகிறார்.

பகவத்கீதை வகுப்பு எடுக்க சுவாமி வேறு ஓர் இடத்திற்குச் செல்ல வேண்டி இருந்ததால் எங்களைப் புதிய ஆசிரமத்தைச் சென்று பார்த்துவிட்டுச் செல்லுமாறு கூறிவிட்டு விடைபெற்றார். நாங்கள் அங்கிருந்து கூலிம் சுங்கை கோப் பிரம்மவித்யாரண்யம் மலைச்சாரல் ஆசிரமத்திற்குச் சென்றோம். மழை லேசாக தூறிக்கொண்டிருந்தது. அங்கே ஆழ்ந்த தியானத்தில் இருந்த மூன்று பைரவர்களும் எங்களைக் கண்டவுடன் வாலாட்டிக்கொண்டே வரவேற்றன. நீண்டு விரிந்த தியான மண்டபம், உணவருந்த அன்னபூர்ணி அறை, தங்குவதற்கு சிறிய அறைகள் என அனைத்து வசதிகளுடனும் கட்டப்பட்டுள்ளது இந்தப் புதிய ஆசிரமம். மலைச் சாரலும் மழைத் தூறலும் சொற்களால் விவரிக்கவே முடியாத உற்சாகத்தைத் தந்தன. இருட்டத் தொடங்கியது.





மலையிலிருந்து மெதுவாக இறங்கிய காடி சுங்கை பட்டாணி நகரத்தை நோக்கி விரைந்தது. சிறிய ஊர் என்பதால் குறைவான கடைகளே இருந்தன. ஓர் இந்திய உணவகத்தில் இரவு உணவை முடித்துக்கொண்டோம். தமிழ்நாட்டில் கிடைக்ககூடிய அத்தனை உணவு பதார்த்தங்களும் அங்கே கிடைத்தன. ருசியிலும் ஊர் தெரிந்தது. உணவகத்தில் வேலை செய்பவர்களில் பெரும்பாலோனோர் தமிழ்நாட்டிலிருந்து குறிப்பாக மதுரை மாவட்டத்திலிருந்து வந்தவர்கள். ஆண்ட தமிழ் இனம் என்ற பெயரெல்லாம் கடாரம் வென்றானோடு போய்விட்டது. ஹோட்டலுக்குத் திரும்பியபோது அடித்து போட்டது போல களைப்பும் சோர்வும் உடலை அழுத்தினாலும் உள்ளம் ஆனந்தத்தால் நிரம்பி வழிந்தது. பின்னணியில் இளையராஜா பாடல்களோடு சிறிது நேரம் சீட்டுகட்டு விளையாடிவிட்டு நித்திரா தேவியை அணைத்துக்கொண்டோம்.


4 comments:

  1. பயணங்கள் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா!

    ReplyDelete
  2. வணக்கம் அழகுநிலா,
    வாசிப்புச் சுகத்துக்கான நல்ல நடை. வீட்டு விஷேஷம் காரணமாக சந்திக்க இயலவில்லை. 2 நாட்கள் எங்கள் ஊரிலிருந்ததும் உங்கள் கட்டுரையைப் படித்த பின்னரே தெரிந்துகொண்டேன்.அடுத்த சந்த்த்திப்பு சாத்தியமாகட்டும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி. நிச்சயம் அடுத்த பயணத்தில் சந்திப்போம்.

      Delete