துமாசிக்கிலிருந்து காழகத்திற்கு –
செப்டம்பர் 10 ஆம் திகதி, 2017
காலை சுங்கை பட்டாணியிலிருந்து கிளம்பினோம். அன்று முழுவதும்
பினாங்கைச் சுற்றிப் பார்க்க திட்டமிட்டிருந்தோம். டாக்ஸி ஓட்டுநர் பெருமாள் எங்களை அழைத்து சென்றார். மலேசியாவின் முக்கிய
சுற்றுலாத் தளங்களுள் ஒன்றான பினாங்கிற்கு நான் கிட்டத்தட்ட பதினான்கு
வருடங்களுக்கு முன்பு சென்றிருக்கிறேன். ஒவ்வொரு இடங்களாக பார்க்க, பார்க்கத்தான் எங்கோ
வெகு ஆழத்தில் மூழ்கி கிடந்த பழைய நினைவுகள் மேலெழுந்து வந்தன.
முதலில் பினாங்கு மலைக்குச் சென்றோம். மலேசியத் தமிழர்கள் இந்த மலையை ‘கொடி மலை’ என்று
அழைக்கிறார்கள். மலாயில் ‘புக்கிட் பெண்டேரா’ என்று அழைக்கிறார்கள். ‘புக்கிட்’ என்றால் மலை. ‘பெண்டேரா’ என்றால் கொடி. மலைக்குச் செல்ல ரயில் சேவை இருக்கிறது. வெளிநாட்டினர்
என்றால் ஒருவருக்கு 30 ரிங்கிட் கட்டணமாக வசூலிக்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமை
என்பதால் ரயிலைவிட நீளமான வரிசை நின்றது. இப்போதெல்லாம் வரிசை என்றாலே ஓர் ஒவ்வாமை
ஏற்படுகிறது. சிங்கப்பூரில் வசிப்பதால் இருக்குமோ என்று நினைத்துக்கொள்வதுண்டு. இருபது நிமிடங்களில்
ரயில் பயணம் முடிந்து மலையை அடைந்திருந்தோம். காற்றில் இதமான குளிர் இருந்தாலும்
வெயில் விடாமல் துரத்தியது.
உயரமான இடங்களிலிருந்து நகரங்களைப் பார்ப்பது எனக்கு பிடித்தமான
விஷயம். நிலப்பரப்பு, மக்கள்தொகை, வளர்ச்சி என பல வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும் உயரத்திலிருந்து பார்க்கும்போது
எல்லா நகரங்களும் ஒரே மாதிரியாகத்தான் காட்சி அளிக்கின்றன. சலனமற்று ஆழ்ந்த
தியானத்தில் இருப்பது போலிருக்கும் நகரத்தைப் பறவையின் பார்வையில் நோக்கும்போது
வாழ்வதற்காகப் போராடும் மக்கள்திரள் மீது பரிதாபமும் மலையை விட்டு இறங்கியவுடன்
நானும் அந்த திரளில் ஒருத்தியாக கலந்து ஓடவேண்டுமே என்ற பயமும் தோன்றி மறையும். இரண்டு
வருடங்களுக்கு முன்பு சென்ற ஹாங்காங் விக்டோரியா பீக் நினைவுக்கு வந்தது. அந்தி சாய்ந்து
இருள் சூழத் தொடங்கிய நேரத்தில் விளக்குகளின் ஒளியை உமிழ்ந்துகொண்டு அசைவற்று
கிடந்த ஹாங்காங் நகரத்தைக் கண்டபோது அடர் மௌனம் மனதுக்குள் வந்து சப்பணமிட்டு அமர்ந்து
கொண்டது.
பினாங்கு மலையில் சுற்றுப்பயணிகள் கண்டு களிக்க
நிறைய இடங்கள் இருக்கின்றன. நேரப் பற்றாக்குறையால் அங்கிருந்த பழமை வாய்ந்த சுப்பிரமணிய
சுவாமி கோயிலுக்கு மட்டும் சென்று திரும்பலாம் என்று திட்டமிட்டு நாங்கள் போக
துரதிர்ஷ்டவசமாக அக்கோயில் சீரமைப்பு பணிகளுக்காக மூடப்பட்டிருந்தது. ஏமாற்றத்துடன்
திரும்பிய மனதுக்கு வழியில் இருந்த Love
Lock Bridge புத்துணர்ச்சி அளித்தது.
தோழி பாரதி
மலேசியாவில் கிடைக்கும் ஒரு காய் பற்றி குறிப்பிட்டு அதை சாப்பிட்டுப் பார்க்க
வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருந்தார். அவரது தாயார் இலங்கையில் வசித்தபோது
இந்தக் காயை சாப்பிட்டிருப்பதாகச் சொன்னார். அதன் பெயர் ‘ஆம்பரலங்காய்’. கொடி மலையிலிருந்து கீழிறங்கி டாக்ஸிக்காக
காத்துக்கொண்டிருந்த போது அங்கிருந்த கடைகளில் இந்தக் காய் கிடைக்கிறதா என்று
தேடியபோது அகப்பட்டது. அந்தக் கடைக்காரப் பெண்மணியிடம் “ருசி பார்க்க இரண்டு மூன்று காய்கள் வேண்டும். தருவீர்களா?” என்று தயங்கி, தயங்கி கேட்க
எடுத்துக் கொள்ளுமாறு சொன்ன அவர் பணம் பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். பயணங்கள்
இப்படியான அற்புதமான மனிதர்களை அறிமுகம் செய்து வைக்கும் வல்லமை கொண்டவை. பேச்சு
வழக்கில் ‘ஆம்பரலங்காய்’ என்று சொல்லப்படும் ‘அம்பலங்காய்’ புளிப்பு, துவர்ப்பு கலந்து ருசியாகத்தான் இருந்தது. உப்பைத்
தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் சுவை இன்னும் கூடுகிறது.
அடுத்ததாக நாங்கள் சென்ற இடம் Kek Lok Si கோயில். இது மலேசியாவின் மிகப் பெரிய புத்த ஆலயம் என்று
சொல்லப்படுகிறது. இங்கிருந்த Goddess
of Mercy ன் சிலையைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருந்தது.
மனதின் இரைச்சலைப் போக்கி பேரமைதியைத் தந்த இந்த அழகான வெண்கல சிலை கிட்டத்தட்ட
100 அடி உயரம் உடையது. நண்பர்கள் மூவரும் கருணைக் கடவுளின் முன் மண்டியிட்டு கண்மூடி
பிரார்த்திக்க நான் அவர்களைப் புகைப்படக் கருவியால் பிடித்துக்கொண்டேன். கோயில் வளாகத்தில்
சீனர்களின் பன்னிரண்டு ஆண்டுகளைக் குறிக்கும் விலங்குகளின் சிலைகள் இருந்தன.
நாங்கள் பிறந்த ஆண்டைக் குறிக்கும் விலங்கோடு புகைப்படம் எடுத்துக்கொண்டு அந்த
ஆண்டில் பிறந்தவர்களின் குணாதிசியங்களைப் பேசிக்கொண்டு நடந்தோம். பெரிய
நிலப்பரப்பில் அமைந்த அங்கு பல சீன கடவுளரின் சிலைகள் இருந்தன. அங்கிருந்த
குளத்தில் ஆறஞ்சு, வெள்ளை நிற கோய் மீன்கள் நீந்திக்கொண்டிருந்தன. பினாங்கில்
வசிக்கும் சீனர்களுக்கு முக்கிய வழிபாட்டுத் தலமாக இந்த கோயில் உள்ளது.
அங்கிருந்து கிளம்பி காரைக்குடிக்குச்
சென்றோம். பினாங்கிலிருந்து காரைக்குடிக்கா என்று மலைக்க வேண்டாம். இது காரைக்குடி
உணவகம். மதிய உணவை முடித்துக்கொண்டு அடுத்த இடம் நோக்கி விரைந்தோம். இந்த முறை ஒரே
சாலையில் அமைந்த இரண்டு புத்த ஆலயங்களைப் பார்க்க முடிந்தது. சாலையில் ஒரு பக்கம்
பர்மிய புத்த ஆலயம். சாலையின் மறு பக்கத்தில் தாய்லாந்து புத்த ஆலயம்.
பர்மிய ஆலயத்தில் Dharmikarama Burmese Temple புத்தரின் வரலாறு ஓவியங்களாக வரையப்பட்டு வழி
நெடுக காட்சிக்கு தொங்க விடப்பட்டிருந்தது. பல ஓவியங்களுக்கு பின்னணியில் இருந்த
கதைகளை நண்பர் ராம்சந்தர் விளக்கினார். தனது சிறுபிராயத்தில் அமர்சித்ரா நூலில்
காமிக்ஸ் கதைகளாக இவற்றைப் படித்திருக்கிறேன் என்றார். ஏனோ தெரியவில்லை.
அங்கிருந்த புத்தரை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. பெண்மையின் சாயலோடு இருந்த
அந்தச் சிலை இதுவரை நான் பார்த்துள்ள புத்த சிலைகளில் இருந்து முற்றிலும்
வித்தியாசமாக இருந்தது. லேசாக ஆரம்பித்திருந்த மழைச் சாரலில் நனைந்தவாறு அந்த
கோயிலைச் சுற்றிப் பார்த்தோம்.
பிறகு
எதிர்ப்புறத்திலிருந்த தாய்லாந்து புத்த ஆலயத்துக்குள் நுழைந்தோம். Wat Chayamangkalaram Thai Buddhist Temple . இங்குள்ள புத்தர்
பள்ளி கொண்ட பெருமாள் போல சயன நிலையில் இருக்கிறார். பர்மிய கோயிலில் இருந்த
புத்தரைப் போல இப்புத்தர் என்னை ஈர்க்கவில்லை. கிட்டத்தட்ட 180 ஆடி நீளம் உடைய
இந்தச் சிலையின் முகத்தில் ஏதோ ஒன்று குறைவது போல தோன்றியது. புத்தரின் வாழ்க்கை
நிகழ்வுகளை சுவரில் வரைந்து வைத்திருக்கிறார்கள். இறந்தவர்களின் சாம்பல் இங்குள்ள
அஸ்தி மாடங்களில் வைக்கப்பட்டுள்ளது. சுற்றி இருந்த புத்தர் சிலைகளின் கை
முத்திரைக்கான பொருளை எங்கள் சிற்றறிவின் எல்லைக்குட்பட்டு விவாதித்தோம்.
அங்கிருந்து கிளம்பி
நேராக விமான நிலையத்தை அடைந்தோம். பயணம் முடிவுறப் போகிறதே என்ற வருத்தத்தைவிட
மூன்று நாட்களின் மகிழ்வான நினைவுகள் மனதில் ததும்பி வழிந்தன. இரவு பத்து மணி அளவில் விமானம்
சிங்கையை அடைந்தது. வரலாற்றோடு தொடர்புடைய இடத்திற்குச் சென்றது, இலக்கியவாதிகளைச் சந்தித்தது, நண்பர்களோடு சென்றது, முக்கியமாக மழை பெரும்பாலும் உடனிருந்தது (மழைப் பயணம்) போன்ற
நான்கு கூறுகளைக் கொண்டிருந்ததால் இப்பயணத்தை ‘4 in 1’ பயணம் என்று சொல்லலாம். 4 நண்பர்களின் ‘4 in 1’ பயணம் இனிதே முடிந்தாலும்
அது தந்த நினைவுகளும் அனுபவங்களும் மழையைப் போல மனதில் தொடர்ந்து வந்து கொண்டேதான்
இருக்கும்.
No comments:
Post a Comment