இந்து சுந்தரேசன் (தமிழாக்கம் மதுரம் சுந்தரேசன்)
வானதி பதிப்பகம்
தனது தாய்
மும்தாஜின் மறைவுக்குப் பிறகு
திருமணமே செய்து கொள்ளாமல், தந்தை
ஷாஜஹானுக்கு உற்ற துணையாய் விளங்கிய முகலாய இளவரசி ஜஹனாராவைப் பற்றிய கதை இது. ஷாஜஹானின் இரண்டாவது மனைவியும் அவனது அதீத
காதலுக்குச் சொந்தக்காரியுமான மும்தாஜ் தனது பதினாலாவது குழந்தையைப் பிரசவிக்கையில் மரணம் அடைகிறாள். அப்போது ஜஹனாராவுக்குப் பதினேழு வயதாகிறது. பதினான்கில் உயிரோடு இருக்கும் எட்டு குழந்தைகளில் மூத்தவளாக இருக்கிறாள் ஜஹனாரா. தாரா, ஷாஷூஜா, ஔரங்கசீப், முராத் என்ற நான்கு சகோதரர்களும் ரோஷனாரா, கோஹராரா என்ற இரண்டு சகோதரிகளும் இருக்கிறார்கள்.
இந்த வரலாற்று புனைவு நூல் ஜஹனாராவை மையமாக கொண்டு புனையப்பட்டுள்ளது. மும்தாஜின் இறப்பால் நிலை
குலைந்து போகும் ஷாஜஹான், ஜஹனாரா இல்லாவிட்டால் தான்
இல்லை
என்று
எண்ணுமளவிற்கு அவனுக்கு எல்லாமுமாய் இருக்கிறாள். அந்தப்புரத்திலும் அரசரிடத்திலும் இவளுக்கு இருக்கும் செல்வாக்கால் இவளது சகோதரி ரோஷனாரா எரிச்சல் அடைகிறாள்.
ஜஹனாரா, நஜபத்கான் என்ற பேரவைப் பிரபு மீது
காதல்
கொள்கிறாள். ரோஷனாராவும் அவனைத் தன்பக்கம் ஈர்க்க முயற்சிக்கிறாள். அது தோல்வியில் முடிய சக்கரவர்த்தி ஷாஜஹான் தனது
புதல்வி ஜஹனாராவை மனைவி
ஸ்தானத்தில் வைத்திருக்கிறார் என்ற
வதந்தியை நாடெங்கும் உலவ விடுகிறாள். ரோஷனாராவின் அத்தனை முயற்சிகளும் வீணாகிறது. ஜஹனாரா தனது காதலன் நஜபத்கானைத் திருமணம் செய்து கொள்ளாமலேயே அவனது
குழந்தையைப் பெற்றெடுக்கிறாள்.
ஷாஜஹான் தனது
காதல்
மனைவிக்காக நிர்மாணிக்க நினைக்கும் கல்லறையைப் பற்றி இந்நூல் ஒரு புறம்
விலாவாரியாக பேசி செல்கிறது. கல்லறை கட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தின் வரலாறு, இக்கல்லறையை வெள்ளைப் பளிங்கு கற்களால் கட்டுவதற்கு காரணமாக இருந்த மற்றொரு கல்லறை ( ஜஹாங்கீரின் இருபதாவது மனைவி
நூர்ஜஹான் (மெஹ்ருன்னிஸா – பெண்களின் சூரியன் ) அவளது
தந்தை
மிர்ஜா கியாஸ் பெக்கிற்கு கட்டிய கல்லறை), தாஜ்மஹாலை வடிவமைத்த முக்கிய மனிதர்கள், கல்லறையின் நுழைவாயில்கள், யமுனை
நதியின் திசை மாற்றம், கல்லறையைச் சுற்றி உள்ள தோட்டங்கள், கல்லறையை நிர்வகிக்க தேவையான நிதிவரவு, பர்ஷியக் கட்டிடக் கலை இப்படி பலவற்றை இந்நூலில் வாசிக்கலாம்.
மறுபுறம் ஷாஜஹானின் ஆட்சியில் ஜஹனாராவின் பங்கு சொல்லப்பட்டுள்ளது. தனது மூத்த
சகோதரன் தாரா ஆட்சிக்கு வரவேண்டும் என்று
ஜஹனாரா நினைப்பதும், அதே சமயம்
ரோஷனாரா ஔரங்கசீப்தான் சசக்கரவர்த்தி ஆகவேண்டும் என்று
எண்ணுவதும் சகோதரிகளுக்குள் இருக்கும் siblings
rivalry ஐ வெளிப்படுத்துகின்றன.
முகலாய வம்சத்தில் பெண்களுக்கான இடம்
அந்தப்புரம் மட்டுமே என்று
இருந்த காலகட்டத்தில் ஜஹனாரா தன் தந்தைக்கு நிழலாக இருந்து அரசியலில் தனது
ஆளுமையை நிறுவியிருக்கிறாள். தந்தையைப் போலவே ஔரங்கசீப் தனது சகோதரர்களைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றி தனது தந்தையை சிறைவைக்கிறான். தன்னோடு வந்துவிடுமாறு ஔரங்கசீப் அழைத்தும் தந்தையின் மரணம் வரை அவருக்குச் சேவை செய்து வாழ்கிறாள் ஜஹனாரா. தந்தையின் மரணத்திற்குப் பிறகு
ஔரங்கசீப்பிடம் அடைக்கலம் புகும் அவளுக்கு ரோஷனாராவின் பதவியை பிடுங்கி தருவதன் மூலம்
மூத்த
சகோதரி மீது இருக்கும் அளப்பரிய அன்பை
வெளிப்படுத்துகிறான் ஔரங்கசீப்.
புனைவின் சுதந்திரத்தை எடுத்துக்கொண்ட நூலாசிரியர் ஜஹனாராவுக்கு ஒரு காதலையும் அதன் மூலம்
ஒரு குழந்தையையும் காட்டுகிறார். ஆனால்
வரலாற்றில் அப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கான சரியான ஆதாரம் இல்லை. இறுதிவரை தந்தை மட்டுமே தனது உலகம்
என்று
வாழ்ந்து இறந்து போன ஜஹனாரா மீது ஒருவித பரிதாப உணர்வுதான் தோன்றுகிறது. நாட்டை ஆள்வதற்குரிய அத்தனை திறமைகள் இருந்தாலும் பெண் என்பதாலேயே அங்கீகாரங்கள் மறுக்கப்படுவதும் அரச குடும்பத்தில் பிறந்த பாவத்திற்காக ஒரு பெண்ணுக்குரிய இயல்பான குடும்ப வாழ்க்கை மறுக்கப்படுவதும் கொடுமை.
வாசகர் வட்டத்தில் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் பரிந்துரைத்த இந்த நூல்
ஆங்கிலத்தில் வெளிவந்து பின்பு நூலாசிரியரின் தாயாரால் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. மும்தாஜின் மரணத்தோடு விறுவிறுப்பாக தொடங்கும்
இந்நாவல் போகப், போக ஒரு வித சலிப்பையும் எப்போது படித்து முடிப்போம் என்ற
உளச்சோர்வையும் ஏற்படுத்தியது. இது மொழியாக்கத்தால் வந்த பிரச்சனையா அல்லது இது எனக்குரிய புத்தகம் இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ஆனால் இந்நூலின் வாயிலாக நிறைய
தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது.
- அக்காலத்தில் பிரசவத்தின்போது வலி தெரியாமல் இருக்க ஓபியம் கொடுக்கப்பட்டுள்ளது.
- கடிதப் போக்குவரத்து ஓடுநர்களால் நடந்திருக்கிறது. அரச குடும்பத்து கடிதத்தை எடுத்துக்கொண்டு ஒருவன் ஒன்பது மைல் தூரம் நிற்காமல் ஓடி மற்றொருவனிடம் தர அவன் அங்கிருந்து ஓடி அடுத்தவனிடம் தருவான். இப்படியாக நீண்ட தொலைவை குறைந்த நாட்களில் கடிதங்கள் கடந்திருக்கின்றன.
- தண்ணீர் கடிகாரங்கள் இருந்திருக்கின்றன. அதற்காக நியமிக்கப்பட்ட ஒருவன் தண்ணீரைக் கடிகார பாத்திரத்தில் நிரப்ப அது சொட்டாக சொட்டாக வெளியேறியவுடன் பாத்திரத்தில் உள்ள தண்ணீரின் அளவை வைத்து நேரத்தைக் கணக்கிட்டு மணி அடித்து மக்களுக்கு தெரிவிக்கிறான்.
- ஷாஜஹான் ஆட்சிக் காலத்தில் சொத்துரிமை சட்டம் – பிரபுக்கள் இறந்தால் சொத்து அரசுக்கு சொந்தம். வாரிசு உரிமை கொண்டாட முடியாது. சக்கரவர்த்தி விரும்பினால் ராஜ்ஜிய விசுவாச அடிப்படையில் வாரிசுக்கு அளிப்பார். இந்துக்களுக்கு இதில் விதிவிலக்கு. அரசு சொத்தில் உரிமை கோருவதில்லை.
- ஜரோக்கா – ஐ – தர்ஷன் – பிரஜைகளுக்குச் சக்கரவர்த்தியின் தரிசனம்
- இரவு நேர பயணங்களில் - கூடாரங்களில் இருந்து வழி தவறுபவர்களுக்காக – நாற்பது அடி உயர கழியில் வைக்கப்படும் இரவு பகல் எரியும் விளக்கு – ஆகாஷ் தியா – ஆகாய விளக்கு
- மரணத்திற்கு பிறகு ஒரு வருடம் கழித்து செய்யப்படும் சடங்கு – உர்ஸ் – இந்துஸ்தானில் உள்ள அஜ்மீரைச் சேர்ந்த சுபி ( Sufi) இனத்து சிஸ்தி மக்கள் மரணத்தைக் கொண்டாடுவது ஒரு பழக்கம். உர்ஸ் என்றால் அரபு மொழியில் திருமணம் என்று பொருள். அதாவது மரணமடைந்தவரின் ஆன்மாவிற்கும் அல்லாவிற்கும் இடையே ஏற்படும் ஒரு சந்திப்பு. முகலாய சக்கரவர்த்தி ஷாஜஹான் தனது மனைவி மும்தாஜின் முதல் வருட இறந்த தினத்தில் இந்து மத சடங்கைப் பின்பற்றியது அவரது மத சகிப்புத்தன்மைக்கு எடுத்துக்காட்டு.
- சிறுவர்கள் வேலைக்காக அந்தப்புரத்தில் பணி அமர்த்தப்படுவதும் அவன் வயதிற்கு வந்துவிட்டால் பெண்களோடு இருக்க முடியாத காரணத்தால் அலியாக மாற்றம் செய்யப்படுவதும் வழக்கமாக இருந்துள்ளது.
- மாசிடோனியா அலெக்ஸாண்டரின் குதிரை ‘புசிபலுஸ்' வம்ச குதிரைகள் ஷாஜஹானிடம் இருந்துள்ளன. அக்குதிரைகளின் முன் நெற்றியில் ஒரு கருப்பு தழும்பும் ஒரு கண் நீலமாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
- இரவு நேரத்தில் போலோ விளையாடும்போது பந்து தெரிவதற்காக அதில் தீ பற்ற வைக்கிறார்கள். இந்த போலோ பந்துகள் நின்று எரியக்கூடிய ‘காட்டின் தீ' என்று அழைக்கப்படும் செங்கொன்றை மரங்களால் செய்யப்பட்டுள்ளன.
- யானை சண்டைகள் மிக பிரபலம் – யானைகளைப் பராமரிக்க ‘ஒன்பதரை மனிதன்' குழு அமைக்கப்பட்டுள்ளது. சரியான பழக்க வழக்கங்களைச் சொல்லித்தர ஐந்து பேர், குளிப்பாட்டி உணவு தந்து அலங்காரம் செய்ய மூன்று பேர், பாகனாக ஒரு மாவுத்தன், மாவுத்தனுக்கு உதவி செய்யவும் தேவைப்பட்டால் பாகனாக மாறவும் ஒரு சிறுவன்.
- யானை சண்டையின் போது மாவுத்தர்களின் மனைவிகள் வெள்ளை ஆடை அணிந்து விதவைக் கோலத்தில் அமர்ந்திருப்பார்கள். கணவன் மீண்டு வந்தால் கொண்டாட்டம். மரணம் அடைந்தால் நூறு மடங்கு மாத வருமானமும் ஓய்வூதியமும் கிடைக்கும்.
- முகலாய அரசர்களுக்கு நீண்ட காலமாக சிஸ்தி இனத்து சூஃபி துறவிகளுடன் தொடர்பு இருந்திருக்கிறது. அக்பர் தனது மூத்த புதல்வரான ஜஹாங்கீருக்குச் சூட்டிய சலீம் என்ற பெயர் ஷைக் சலீம் சிஸ்தி என்ற சூஃபி துறவியின் பெயர்தான்.
- தாஜ்மஹலின் பராமரிப்புச் செலவுக்காக ஷாஜஹான் கட்டியது தாஜ்கஞ்ச். அதன் பயணியர் விடுதிகளின் புகழ் பரவ அதிலிருந்து கிடைத்த வாடகையும் அங்குள்ள கடைக்காரர்கள் செலுத்திய வரிப்பணமும் பராமரிப்புச் செலவுக்கு உதவி உள்ளன.
- ஜிஸ்யா என்பது இந்துக்கள் மீது மட்டும் விதிக்கப்படும் வரி. அக்பர் நீக்கிய இந்த வரியை ஔரங்கசீப் மீண்டும் கொண்டு வருகிறான். ஜிஸ்யாவோடு வேறு சில சட்டங்களும் இருந்துள்ளன.அதில் ஒன்று மூன்று இந்துக்களுக்கு மேல் சேர்ந்து நின்று தெருக்களில் பேசவோ அல்லது ஒருவர் வீட்டில் சந்திக்கவோ கூடாது.
No comments:
Post a Comment