வந்தியத்தேவனின் காதலி கண்டு களித்த பொன்னியின் செல்வன்
சிங்கையில் ஒரு பேச்சாளராக நான் மாறியதில் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலுக்கும் சிறு பங்குண்டு. 2011 ஆம் ஆண்டு, திரு.பாலுமணிமாறன் உட்லேண்ட்ஸ் நூலகத்தில் ஏற்பாடு செய்திருந்த பட்டிமன்றத்திற்கு என்னை
அழைத்திருந்தார். இலக்கியத்தைத் திரைப்படங்களாக எடுப்பதன் சாதக, பாதகங்களைப் பட்டிமன்றம் அலசியது. பார்வையாளர்கள் மத்தியில் ஒருவரைப் பேச அழைத்த போது நான்
எழுந்து நாவல்களைத் திரைப்படங்களாக எடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை என்று
உணர்ச்சிவசப்பட்டுப் பேசினேன்.
“வந்தியத்தேவன் என்ற கதாபாத்திரத்தின் மீது அதீத
காதல்
கொண்டுள்ள நான் அவனுக்கு உருவம் தந்து என் கற்பனையில் உலவவிட்டுள்ளேன். இந்நாவல் திரைப்படமாக எடுக்கப்பட்டால் அதில் வந்தியத்தேவனாக வலம் வரப்போகும் திரைகதாநாயகனால் என் மானசீக காதலனின் ஆளுமை
குலையலாம். ஆதலால் இதுபோன்ற நாவல்களைத் திரைப்படமாக கொண்டு வராமல் இருப்பது என் போன்ற
வாசகர்களுக்கு நலம் பயக்கும்” என்று பொரிந்து தள்ளினேன்.
பொதுவாகவே ஒரு நாவலைக் காட்சி ஊடகத்திற்குக் கடத்துவதில் நிறைய சிரமங்கள் உள்ளன. அதைச்
சரிவர
செய்வதில் சில இயக்குனர்களே வெற்றி பெறுகின்றனர்.
அந்த வகையில், என்னைக் கவர்ந்த இயக்குனர்கள் என்று பாலுமகேந்திரா,
மகேந்திரன், பாலா
இவர்களைச் சொல்லலாம். ஆனால்
மணிரத்னம் ‘பொன்னியின் செல்வனை’ படமாக
எடுக்கும் எண்ணம் இருப்பதாகச் சொன்னபோது “என்னே கல்கிக்கு வந்த சோதனை!” என்று
மனதுக்குள் கிலி.
“நான்
உன்னை
விரும்பலை. உன்மேல் ஆசைப்படலை. நீ அழகாக
இருக்கேன்னு நினைக்கலை. ஆனால்
இதெல்லாம் நடந்துடுமோன்னு பயமா
இருக்கு” என்று
வந்தியத்தேவன் குந்தவையிடம் சொல்வதை நினைத்து பார்த்தேன். “ஐயோ! என் காதலன் வந்தியத்தேவனைக் குந்தவையிடமிருந்தும் மணிரத்தினத்திடமிருந்தும் மீட்டுக்கொடு கடவுளே!” என்று
வேண்டிக்கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை.
ஆனால் இப்போது பொன்னியின் செல்வன் நாவல் மீது
இருந்த மயக்கமும் கிறக்கமும் குறைந்துவிட்டாலும் பருவ
வயதில் வாசித்த காரணத்தாலோ என்னவோ வந்தியத்தேவன் மீது இருந்த காதல் மட்டும் குறையவே இல்லை. நாவலின் அறிமுக காட்சியில் வீர நாராயண ஏரிக்கரை மீது குதிரையில் வரும் வந்தியத்தேவன் இன்னும் மனதை
கொள்ளை அடிக்கும் ஒருவனாகவே இருக்கிறான். அவன்
மீது
இருக்கும் இந்த பித்துதான் என்னைச் சிங்கையில் நடந்தேறிய ‘பொன்னியின் செல்வன்’ நாடகத்தைப் பார்க்க இழுத்துச் சென்றது.
நாவலைத் திரைப்படமாக எடுப்பதே தலைவலி என்றால் ஐந்து
பாகங்கள்
கொண்ட
பெரிய
வரலாற்று புனைவு நாவலை
ஒரு மேடை
நாடகமாக மாற்றுவதை நினைத்துப்
பார்த்தபோது தலை 360 டிகிரி சுற்றியது. அறிவிப்பு வந்தவுடனேயே இணையத்தில் முன்பதிவு செய்துவிட்டேன். நேற்று (29 ஏப்ரல் 2017) சிங்கப்பூர் எஸ்பிளனேட் தியேட்டரில் நான்கு மணி நேரம்
அரங்கேறிய ‘பொன்னியின் செல்வன்’ நாடகத்தைப் பார்த்தது வாழ்நாளில் மறக்க
முடியாத அனுபவம்.
அத்தனை பெரிய
நாவலிலிருந்து முக்கிய நிகழ்வுகளை மட்டும் எடுத்து நான்கு மணி நேரத்தில் விறுவிறுப்பு குறையாமலும் தொய்வில்லாமலும் கொடுத்த அத்தனை பேரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஆடிப் பெருக்கு கொண்டாட்டத்திற்காக மக்கள் கூடத் தொடங்கும் முதல் காட்சியில் சுவரில் வரையப்பட்ட சித்திரங்கள் உயிர் கொண்டு எழுந்து வந்தது போல நடிகர்கள் தோன்றியது கொள்ளை அழகாக
இருந்தது. ஒவ்வொரு நடிகரும் தங்கள் உடல் மொழியாலும் உச்சரிப்பாலும் அடுத்தவரை விஞ்சி, மிஞ்சி நின்றனர். பிரம்மாண்டமான மேடை, அற்புதமான மேடை வடிவமைப்பு, கண்களுக்கும் காதுகளுக்கும் சரியான விகிதத்தில் விருந்தளித்த ஒலி, ஒளி அமைப்பு, அழகான
நடனம், அருமையான பாடல்கள், நடிகர்களின் அழகுக்கு அழகூட்டிய ஒப்பனை, வசனத்திற்குரிய ஆங்கில மொழிபெயர்ப்பு இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.
பொன்னியின் செல்வன் அறிமுக காட்சி, ஆதித்த கரிகாலனும் பெரிய
பழுவேட்டரையரும் சொற்களால் மோதும் காட்சி, நந்தினியும் கரிகாலனும் சந்திக்கும் உணர்ச்சிமயமான காட்சி போன்றவை மீண்டும் பொன்னியின் செல்வனை வாசிக்க வேண்டும் என்ற ஆசையைக் கிளர்த்திவிட்டன. குறிப்பாக குந்தவை மீது
காதல்
கொண்ட
வந்தியத்தேவன் வேகமாக வெளியேறிச் செல்லும்போது ஒரு கணம்
நின்று மீண்டும் திரும்பி குந்தவையைப் பார்த்துவிட்டுச் சென்ற காட்சி அபாரம். குந்தவை வந்தியத்தேவனிடம் காதலைச் சொல்லும் தருணத்தில் மேடையில் கோட்டை வடிவமைப்பிற்குப் பின்னால் மேலெழுந்து வந்த முழுநிலவும் அவர்கள் இருவரது உடல் மொழியும் எனக்கு குந்தவையின் மீதான
பொறாமையையும் வந்தியத்தேவன் மீதான காதலையும் அதிகரித்தன.
ஆதித்த கரிகாலன், பெரிய
பழுவேட்டரையர் ஆகியோரது மரணக்காட்சியிலும் அருள்மொழி மதுராந்தகருக்கு முடி சூட்டிய காட்சியிலும் என்னை
அறியாமல் கண்கலங்கினேன். வந்தியத்தேவனும் பூங்குழலியும் நிலவு
வெளிச்சத்தில் படகில் பயணம்
செய்தபோது அவர்களோடு நானும் இலங்கைக்குப்
புறப்பட்டுவிடலாமா
என்று
கால்கள் பரபரத்தன. வானதியும் பூங்குழலியும் யானை
மீது
தஞ்சை
நோக்கிச் சென்ற போது
என் உடலும் யானை சவாரி
செய்வது போல மெதுவாக ஆடி அசைந்தது. “மதத்
தலைவர்கள் ராஜாங்க விஷயத்தில் தலையிடக் கூடாது. மீறி
தலையிட்டால் மதத்திற்கும் கெடுதல். ராஜாங்கத்திற்கும் கெடுதல்” என்ற
வசனத்திற்குப் பலமாக கைதட்டி ரசித்தேன். இறுதியாக ஆதித்த கரிகாலனைக் கொன்ற குறுவாளைக் கையில் ஏந்தி
தன் முகத்திற்கு எதிராக நீட்டி பொன்னியின் செல்வன் வெறித்துப் பார்க்கும் அந்த ஒரு காட்சி மற்ற அத்தனை காட்சிகளையும் பின்னுக்குத் தள்ளியது. வசனங்களில் விவரிக்க இயலாத
அருள்மொழியின் மனவோட்டத்தை அந்தக் காட்சி அதி அற்புதமாக வெளிக்காட்டியது.
எத்தனை பேரின் உழைப்பு!
ஒரு துளி
கூட பிசகாத ஒருங்கிணைப்பு!
ஆச்சர்யம்! வியப்பு!
ஆனால்
மறுபக்கம் இந்நாவலை வாசிக்காதவர்களுக்கு இந்த அனுபவம் எப்படி இருக்கும்? அவர்களால் இதை எளிதாக புரிந்துகொள்ள முடியுமா!? இல்லை
அவர்களுக்கு ஏதாவது குழப்பம் நேரிடுமா? கல்கியின எழுத்தை வாசிக்காதவர்களுக்கு இது எவ்விதமான பாதிப்பை ஏற்படுத்தும்?
அவர்கள் கல்கி என்ற
எழுத்தாளனை கொண்டாடுவார்களா? என்ற
பல கேள்விகள் ஓடிக்கொண்டிருந்தன. நாடகம் முடிந்தவுடன் இரண்டு பெண்மணிகள் பேசியது காதில் விழுந்தது.
“யாருலா கரிகாலனைக் கொன்னிருப்பா?”
“தெரியலையே”
சற்று தூரம்
நடந்தவுடன் ஒரு தாய்க்கும் பதின்ம வயது
மகனுக்கும் இடையே நடந்த
உரையாடல் காதில் விழுந்தது.
“ஏன்டா
பக்கத்துல உட்கார்ந்துகிட்டு இது யாரு, அது யாருன்னு கேள்வி கேட்டு டார்ச்சர் பண்றே? என்னை நிம்மதியா பார்க்கவிட்டியா?”
“ரொம்ப
பிகு
பண்ணாதம்மா. நானும்
பொன்னியின் செல்வனைப் படிக்கிறேனா இல்லையா பாரு”
“பாகுபலியைக் கட்டப்பா ஏன் கொன்றான்?” என்ற
கேள்வி வேகமாக பரவிக் கொண்டிருக்கும் சீசனில் “ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்?” என்ற
கேள்வியைக் கேட்க வைத்ததிலும், ஓர் இளையரைப் ‘பொன்னியின் செல்வனை’ வாசிக்க வேண்டும் என்று
சொல்ல
வைத்ததிலும் ‘பொன்னியின் செல்வன்’ நாடகம் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது என்று
உறுதியாகச் சொல்லலாம்.
கல்கி என்ற
தமிழ்
எழுத்தாளனை உலக அரங்கில் உயர்த்திய இந்த
நாடகத்தில் பங்கு பெற்ற
அத்தனை கலைஞர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும். சிங்கையின் 2017 தமிழ்
மொழி
விழாவின் முத்தாய்ப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று ‘பொன்னியின் செல்வன்’ நாடகம்.
No comments:
Post a Comment