Wednesday, March 29, 2017



ஆளுமைகளின் சிறுகதைகள் ஒரு பார்வை


வேறு ஒருவன் ஜெயமோகன்


வேட்டைகூர்க் இனத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் நிகழும் கதை. கதையின் களம் திருமண வீடு. திருமணத்தில் நடத்தப்படும் கூர்க் இனச் சடங்குகள், சம்பிராதாயங்கள், பழக்கவழக்கங்களென அனைத்தையும் நம் முன் காட்சிகளாக யூமா வாசுகி விவரிக்கும் போது அந்தத் திருமண வீட்டில் சர்வ சாதாரணமாக காக்டெயில் குடித்துவிட்டு போதையில் மிதக்கும் பெண்களையும் சிறார்களையும் போல் வாசகியாக நானும் போதையில் மிதந்து கூர்க் நடனம் ஆடியது போன்ற உணர்வு தோன்றியது.

தனது தங்கை பினுவின் மகள் ஷகிலாவின் திருமணத்துக்கு வருகிறார் உஸ்மானி. அவரது மகன் பொனாச்சாவுக்கு ஷகிலாவைத் திருமணம் செய்து தருவதாக வாக்களித்திருந்த தங்கையின் கணவன் ராசய்யா மகள் வேறு ஒருவனைக் காதலித்த காரணத்தால் வேறு வழியின்றி திருமணத்தை நடத்துகிறான். காதலித்தவள் கிடைக்கப் போவதில்லை என்று தெரிந்தவுடன்  பொனாச்சா குடிக்கு அடிமையாகிறான். தனது மகனின் நிலையைப் பார்த்து உள்ளம் குமைகிறார் உஸ்மானி. திருமணத்துக்குப் போக வேண்டாம் என்று பொனாச்சா சொல்வதையும் மீறி திருமணத்திற்கு வந்து எந்தவித வருத்தமுமின்றி உற்சாகமாகவும், கொண்டாட்டமாகவும் பங்கெடுக்கிறார். முடிவில் தாய்மாமன் செய்ய வேண்டிய, ஊன்றப்பட்ட செழுமையான வாழை மரங்களை வாளால் வெட்டி வீழ்த்தும் சடங்கு. அனைத்து மரங்களையும் வெட்டி முடிப்பவர் இறுதியில் அருகே நிற்கும் மணமகனின் அடிவயிற்றில் ஆழப்பதியுமாறு வாளை வீசும்போது வாசகியாக நான்  அதிர்ச்சியில் உறைந்து போனேன்.

கூர்க் இனத்தின் தற்போதைய தலைமுறை தனது இனத்தின் அடையாளங்களைத் தொலைப்பதை விரும்பாத கடந்த தலைமுறை மனிதரான உஸ்மானி இறுதியில் கூர்க் இன வேட்டை மனிதனாகவே மாறுவது கதையின் உச்சம். திருமண வீட்டில் அதிகம் குடிக்க நேருமென்பதாலும், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் தொந்தரவு ஏற்படுமென்பதாலும் சிறுநீர் சேகரிக்கும் ரப்பர் பையை உடைக்குள் மாட்டிக்கொண்டு வருகிறார் உஸ்மானி. மற்றவர்களுக்கு கூர்க் இனத்தின் பழமையான நம்பிக்கைகள் கழற்றி எறியவேண்டிய அந்தச் சிறுநீர் பையைப் போல தேவையற்றதாகவும் எள்ளலுக்குரியதாகவும் தோன்றலாம். ஆனால் உஸ்மானிக்கு தனது இனத்தின் பழமைகள் சிறுநீரகத்தைப் போல இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. தனது மகன் துன்புறுவதைக் காண சகிக்காமல் ஆறேழு தலைமுறைகளாக வாழ்ந்த இடத்தைவிட்டு போய்விடலாம் என்று சொல்லும் உஸ்மானி மகள் மகிழ்ச்சிக்காக அவள் காதலித்தவனையே திருமணம் செய்து வைக்கும் ராசய்யா மீது வாக்கு தவறிவிட்டான் என்று குற்றச்சாட்டு வைப்பது சோக முரண்.

மனிதன் ஒவ்வொரு முறையும் அறத்தின் வழி நடக்க முயற்சிப்பதும், ஆனால்  அவனுக்குள் இருக்கும் ஆதிமனிதனின் வேட்டைக் குணம் அத்தனை சமூக விழுமியங்களையும் விழுங்கி இரத்தம் கேட்கும் பிசாசு போல தலைவிரித்தாடுவதும் மனித குலத்தின் சாபம் என்றுதான் சொல்ல வேண்டும். உஸ்மானி வாழை மரத்தை வெட்டும்போது அவரது உடைக்குள் நிரம்பி ஊதிப்போய் ஆடும் சிறுநீரப்பந்தைப் பாரத்து அனைவரும் சிரிக்கிறார்கள். அவர்களது நையாண்டிதான் அவரது வஞ்சத்தைத் தூண்டிவிட்டதோ என்று எனக்கு சந்தேகம் வந்தது. ஆனால் அப்படி அல்ல என்பதைத் திருமண வீட்டிற்குப் போகவேண்டாம் என்று பொனாச்சா சொல்லும்போது அவர் சிந்தும் புன்னகை தெரிவித்தது. இதிலிருந்து கணநேர உணர்ச்சி வேகத்துக்கு ஆட்பட்டு அவர் இச்செயலைச் செய்யவில்லை என்பதும் வீட்டை விட்டு புறப்படும்போதே அவர் ஒரு கூர்க் வேட்டைக்காரனாக மாறிவிட்டார் என்பதும் விளங்கியது.

இதற்கு மாறாக, எந்தவித திட்டமிடலுமில்லாமல் நொடி நேர உணர்ச்சிக் கொந்தளிப்பில் மனிதர்கள் தங்களை மறந்து காரியங்களைச் செய்வதற்கு எழுத்தாளர் ஜெயமோகனின்வேறு ஒருவன்' என்ற சிறுகதையே உதாரணமாக சொல்லலாம். அதில் தனது மனைவி வேறு ஒருவனுடன் கள்ள உறவு வைத்திருப்பதைப் பார்த்துவிடும் கணவன் அவளைக் கண்ட, துண்டமாக வெட்டி கூறு போட்டுவிடலாம் என்று எண்ணும் அதே வேளையில் அதனால் ஏற்படும் பின்விளைவுகளை எண்ணிப் பார்த்துவிட்டு அவளை மன்னிக்கிறான். தனது தவறை உணர்ந்து கதறி அழும் அவளிடம் நம் பிள்ளைகளுக்காகவாவது  இனிமேல் ஒழுங்காக நடந்து கொள் என்று அறிவுரை கூறி இயல்பாகிறான். அதன் பிறகு அவர்களுக்கிடையே நடக்கும் ஓர் உரையாடலில் அவளது சிரிப்பு இவனை ஏதோ செய்ய மண்வெட்டியால் அவள் கழுத்தில் வெட்டுகிறான். அவள் உயிர் அடங்குவதைப் பார்த்துக்கொண்டு நின்றிருக்கும் அவனுக்குச் சில நொடிகளுக்குப் பிறகு அக்காரியத்தை யார் செய்தது என்றே புரியவில்லை. ஜெமோவின் ஆரம்பக்கால கதையான இதில் நேரடியாக கதை சொல்லப்பட்டிருந்தாலும் கதையின் முடிவில் வேட்டைகதை போலவே ஓர் அதிர்ச்சி தாக்குகிறது.  

இரு கதைகளிலும் அடிநாதமாக ஓடுவது நம்பிக்கைத் துரோகம். இரு கதைகளும் மனிதனுக்குள் இருக்கும் இன்னொரு மனிதனை அடையாளம் காட்டுகின்றன. அந்த மனிதன் இந்த நாகரீகச் சமூகத்திற்கு அந்நியமானவன். விலங்குகளோடு விலங்காக வாழ்ந்த ஆதி மனிதன் அவன். இச்சமூகம் இவர்களது கொடூரமான செயலின் அநியாயத்தைப் பற்றி பேசி கொந்தளிக்கலாம். ஆனால் அச்செயல்களுக்கான நியாயங்கள் அவர்களிடம் வலுவாக உள்ளன என்றுதான் கருதுகிறேன். அந்த நியாயங்களும் இச்சமூகம் உருவாக்கித் தந்த அறக் கோட்பாடுகளின் அடிப்படையில் உருவானவைதான் என்பது வருத்தத்திற்குரிய விஷயம்தான்.

வேட்டைசிறுகதைப் போலவே மற்றொரு சிறுகதை வெயிலோடு போய்’. .தமிழ்ச்செல்வனால் எழுதப்பட்டது. இயக்குநர் சசியால் பூ என்ற பெயரில் அற்புதமான திரைக்காவியமாக மாறியது. மாரியம்மாள் தனது மாமன் மகன் தங்கராசு மீது அளவற்ற ஆசை கொண்டிருக்கிறாள். சிறுவயதிலேயே தங்கராசுக்குத்தான் மாரி என்று எடுத்த முடிவு இரக்கமற்ற வாழ்க்கை தந்த பொருளாதார, கல்வி ஏற்றத்தாழ்வுகளால் தோற்றுப்போகிறது. தங்கராசுக்கு வசதியான இடத்து பெண்ணுடன் திருமணம் நடக்கிறது. மாரிக்கும் வேறு ஒருவனுக்கும் திருமணம் நடக்கிறது. ஊர்த் திருவிழாவுக்கு வந்திருக்கும் தங்கராசையும் அவனது மனைவியையும் காண ஆவலோடு செல்லும் மாரி கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பூசலைக் காண நேர்கிறது. தாங்க முடியாத துன்பத்தோடு வீட்டிற்கு வருபவள் தன் கணவனோடு இருக்கும் போது வெடித்து அழுகிறாள். கிராமத்துச் சூழலையும் தீப்பெட்டி ஒட்டும் எளிய பெண்ணின் உயர்ந்த காதலையும் இந்தக் கதை அழகாக படம்பிடித்து காட்டியுள்ளது.  

இதற்கும் வேட்டைகதைக்கும் சில ஒற்றுமைகள் இருந்தாலும் முடிவு முற்றிலும் வித்தியாசமாக அமைந்துள்ளது. ‘வேட்டைசிறுகதையில் தன்னைத் திருமணம் செய்து கொள்ளாத அத்தை மகளது கல்யாணத்திற்குப் போனால் நான் செத்துப் போவேன் என்று உஸ்மானியிடம் சொல்கிறான் பொனாச்சா. மாறாக வெயிலோடு போய்கதையில் தன்னைத் திருமணம் செய்து கொள்ளாத மாமன் மகனின் கல்யாணத்திற்கு அம்மாவும் அண்ணனும் போகாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்கிறாள் மாரி. பொனாச்சாவின் அதீத காதலின் வெளிப்பாடாக பிறக்கும் கோபம் உஸ்மானியை வேட்டைக்காரனாக மாற்றுகிறது. மாரியின் அதீத காதலின் வெளிப்பாடக பிறக்கும் புரிந்துணர்வு அண்ணனைத் திருமண வீட்டிற்குப் போகச் செய்கிறது.

போகிற இடத்தில் நல்லா இருக்கட்டும் என்று உஸ்மானி சொல்லும்போது பாம்பைப் போல தலை நிமிர்த்தி இருக்கட்டும் நல்லா இருக்கட்டும் என்று கூறும் பொனாச்சாவிடம் ஆங்காரமும் துவேஷமும் தெரிகிறது. மாறாக எங்கிட்டு இருந்தாலும் நல்லா இருக்கட்டும் என்று கண் நிறைய மனம் துடிக்க கடவுளிடம் வேண்டிக்கொள்ளும் மாரியிடம் ஆத்மார்த்தமான காதல் தெரிகிறது.

இரு கதைகளிலும் காதல் தோல்வி பிரதானமா இருந்தாலும் வேட்டைகதை வன்மத்தைத் தீர்வாகவும் வெயிலோடு போய்அன்பைத் தீர்வாகவும் வைக்கிறது. வேறு, வேறு முடிவுகளைக் கொண்டிருந்தாலும் மனித மனதின் நுட்பமான உணர்வுகளை வெளிக் கொணர்ந்த விதத்தில் இரண்டுமே மிகவும் அருமையான, கட்டாயம் வாசிக்க வேண்டிய சிறுகதைகள்.








No comments:

Post a Comment