Wednesday, March 22, 2017

கம்பராமாயணம் - திரு அ.கி.வரதராசனுடன் சந்திப்பு 11
மார்ச் 17, 2017 - ஜூரோங் ஈஸ்ட் பொது நூலகம்

திரு அ.கி.வரதராசனின் உரையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரை

யுத்த காண்டம், மாயா சனகன் படலம், பகுதி – 2

கடந்த வராம் பார்த்த மாயா சனகன் படலம், பகுதி ஒன்றில் இராவணன் மகோதரனிடம் மருத்தனைச் சனகனாக மாற்றி கொண்டு வரச்சொல்லிவிட்டு, அசோகவனம் சென்று சீதையிடம் தன் காதலையும், தன்னை வருத்தும் காமநோயையும் பலவாறு விளக்கி கூறிவிட்டு அவள் முன் தன் பத்து தலைகளும் நிலத்தில் படும்படி விழுந்து சரணாகதி அடைகிறான். அதற்குச் சீதை கோபத்தோடும் எரிச்சலோடும் பதிலளிக்கிறாள். போர்க்களத்தில் என் ஆசைக் கனி இராமனைக் காணாமல் வந்துவிட்டாய் போலும் என்று நக்கலாக உரைக்கிறாள். அதை கேட்டு வெகுண்ட இலங்கை வேந்தன் அயோத்தியிலிருந்தும் மிதிலையிலிருந்தும் பசுந்தலைகளைக் கொணருமாறு தன் படைகளுக்குக் கட்டளை இட்டுள்ளதாக கூறுகிறான். இதைக் கேட்ட சீதை என்னை தந்திரம் செய்து இங்கே கொணர்ந்த இவ்வரக்கர்கள் எது வேண்டுமானாலும் செய்யக்கூடிய வலியர்கள். பொய்தான் இப்போது தர்மம் போலும் என்று மனம் கலங்குகிறாள்.

அந்நேரத்தில் மகோதரன் மருத்தனைச் சனகனாக மாற்றி அவன் வாய் திறந்து அரற்றுமாறு இழுத்துக்கொண்டு விரைவாக வந்து நெருப்பு போல எரிந்துகொண்டிருந்த (காய் எரி அனையான்) இராவணன் முன் காட்டினான். மாயா சனகன் இராவணனை வணங்குவதைச் சீதை காண்கிறாள். அதைக் கண்டவுடன் தாய்ப் பறவை நெருப்பில் வீழ்வதைப் பார்க்கும் பறவைக்குஞ்சு (பார்ப்பு) போல தாங்கிக் கொள்ள முடியாதவளானாள்.     
     
அதைக் கண்ட சீதை கைகளை நெரித்தாள். கைகளால் கண்களில் மோதிக்கொண்டாள். நெய்யூற்றி எரிந்த தீயை மிதித்தது போல தன் கால்களை நிலத்தில் வைக்கமுடியாமல் பதைத்தாள். உடல் எரிவது போல செஞ்சு எரிந்தாள். ஏங்கி அழுதாள். உடல் நடுங்க கீழே வீழ்ந்தாள். மாயா சனகன் என்பதை உணராமல் தன் தந்தை மீது கொண்ட பேரன்பால் மண்ணில் புரண்டாள். அழுது புலம்பினாள்.   

தெய்வமே! உண்மை அழிந்துவிட்டதா? அழிந்து போகும்படி இவ்வுலகைத் தூற்றவா? வஞ்சம் வலிமையானதா? நான் இன்னும் உயிரோடு இருக்கிறேனா?” என்று ஒன்றல்லாமல் பல வகையில் துயரமுற்ற சீதையின் தன்மையைப் பெண்ணா? அல்லது அறமா? என்று யார்தான் தேர்ந்து சொல்ல முடியும்?

எந்தையே! எந்தையே! இன்று என்னால் உனக்கும் இத்துன்பம் ஏற்பட்டுவிட்டதே! என்னைப் பெற்றதால் உன் வாழ்வின் நிலை இதுதானா? மண்ணில் உள்ள அனைவருக்கும் தந்தை போன்றவனே! தாய் போன்று அன்பானவனே! தருமத்திற்கு ஒப்பானவனே! தவமே! என்று கொடுந்துன்பம் மிகுதியாக, தீயில் வீழ்ந்த விறகு போல மனம் வெந்து வீழ்ந்தாள்.

அனைவருக்கும் ஈந்துவிட்டு உண்டாய். அறங்கள் பல புரிந்தாய். உன்னை எதிர்த்த பகைவர்களின் ஊர்களை எரித்து வென்றாய். உயர்ந்த வேள்விகள் அனைத்தும் புரிந்து கரை கண்டாய். கள் (மட்டு) உண்ணும், மனிதர்களைத் தின்னும் அரக்கர்களால் வயிரம் பாய்ந்த உன் தோள்கள் கட்டப்பட்டு வீழ்ந்தாய். இதை எல்லாம் நானும் கண்ணால் பராத்துக் கொண்டிருக்கிறேனே! என்று வருந்தி சீதை துடித்தாள்.

இவ்வாறாக புலம்பியவள் எழுந்து மீண்டும் வீழ்ந்து துன்பத்தில் தோய்ந்தாள். இறந்துவிட்டாள் (பொன்றினள்) என பார்ப்பவர் கருதுமாறு வலியைத் தாங்கக்கூடிய தன்மை அழிந்து, பிறகு பெருமூச்சு விட்டாள். மின்னல் நிலத்தில் வீழ்ந்து புரள்வது போல உடலுடைய சீதை பெண் அன்றில் பறவையைப் போல வாய் திறந்து அழுது அரற்றலானாள்.

ஆயது ஓர்காலத்து ஆங்கண் மருத்தனைச் சனகன் ஆக்கி,
வாய் திறந்து அரற்றப் பற்றி, மகோதரன் கடிதின் வந்து
காய் எரி அனையான் முன்னர்க் காட்டினன்; வணங்கக் கண்டாள்,
தாய் எரி வீழக் கண்ட பார்ப்பு எனத் தரிக்கி லாதாள்.
 (7662)

கைகளை நெரித்தாள்; கண்ணில் மோதினாள்; கமலக் கால்கள்
நெய்யெரி மிதித்தால் என்ன நிலத்திடைப் பதைத்தாள்; நெஞ்சம்
மெய்யென எரிந்தாள்; ஏங்கி விம்மினாள்; நடுங்கி வீழ்ந்தாள்;
பொய் என உணராள் அன்பால், புரண்டனள், பூசல் இட்டாள்.(7663)

தெய்வமோ! என்னும்; ‘மெய்ம்மை சிதைந்ததோ? ‘என்னும்; ‘தீய
வைவலோ உலகை? ‘என்னும்; ‘வஞ்சமோ வலியது? ‘என்னும்;
உய்வலோ இன்னும்? ‘என்னும்; ஒன்று அல துயரம் உற்றாள்;
தையலோ? தருமமேயோ? ஆர் அவள் தன்மை தேர்வார்?(7664)

எந்தையே! எந்தையே! இன்றுஎன் பொருட்டினால் உனக்கும் இக்கோள்
வந்ததே!  என்னைப் பெற்று வாழ்ந்தவாறு இதுவோ? மண்ணோர்
தந்தையே!  தாயே! செய்த தருமமேதவமே! என்னும்;
வெந்துயர் வீங்கி, தீ வீழ், விறகு என வெந்து வீழ்ந்தாள்.(7665)

இட்டு, உண்டாய்; அறங்கள் செய்தாய்; எதிர்ந்துளோர் இருக்கை எல்லாம்
சுட்டு உண்டாய் உயர்ந்த வேள்வித் துறை எலாம் கரையும் கண்டாய்;
மட்டு உண்டார், மனிசர்த் தின்ற வஞ்சரால் வயிரத் திண்தோள்
கட்டுண்டாய்; என்னே, யானும் காண்கின்றேன் போலும் கண்ணால்(7666)

என்று, இன பலவும் பன்னி, எழுந்து வீழ்ந்து இடரில் தோய்ந்தாள்;
பொன்றினள் போலும் என்ன பொறை அழிந்து, உயிர்ப்புப் போவாள்,
மின் தனிநிலத்து வீழ்ந்து புரள்கின்றது அனைய மெய்யாள்;
அன்றில் அம் பேடை போல, வாய் திறந்து அரற்றல் உற்றாள்.(7667)

வேதங்கள் வகுத்த எல்லைகள் நீங்காத வழி வந்த மன்னரான நீங்கள், பிறை போன்ற நெற்றியைக் கொண்ட பெண்களுக்குப் பிறந்த வீட்டுக் கடன்களைச் செய்வதற்கு கூட என் இறைவன் இருக்குமிடமான அயோத்திக்கு வந்து தங்காதவர். அப்படிப்பட்ட நீங்கள் நான் சிறையில் இருப்பதைக் காண சிறைக்கு வந்து சேர்ந்தீர்களா?”

வலிமையான சிறகுகளைக் கொண்ட கருடனின் மீது ஊரும் திருமால் வரம்பில்லாத இந்த மாய, இழிந்த பிறவிச் சிறையைத் தீர்ப்பான் என கற்றறிந்த புலவர் கூறுகின்றனர். ஆனால் என்னைச் சிறையிலிருந்து மீட்பவரையே இன்னும் காணவில்லை. அப்படியிருக்க என் பொருட்டு சிறைக்கு வந்த உங்களை மீட்க இவ்வுலகில் யார் இருக்கிறார்கள்?

பண்பு உடையவர்களோடு கூடாத அரக்கர்களின் பகையைப் பெற்றாய். அவர்களின் பகழி உன் மார்பில் பாய நீ விண்ணுலகம் சென்றால் நல்லது. வேந்தர்களாகி வீரசொர்க்கம் அடைந்த உன் முன்னோர்களால் எண்ணப்படும் சிறப்பைப் பெறுவாய். ஆனால் அதே சமயம் அரக்கர்களால் கொல்லப்பட்டாய் என்ற பழியையும் பெறுவாய். ஆனால் அப்பழிக்கு காரணம் உன் செயல் அன்று. பெண்ணைப் பெற்றதுதான் அப்பழிக்கு காரணம். உன்னைப் போல் பேறு பெற்றவர் யார் இருக்கிறார்?”

கயிற்றால் சுற்றிக் கட்டப்பட்ட கலப்பையைச் (நாஞ்சில்) சுமந்து துன்பமுற்றும், அடிபட்டும், குச்சியால் குத்தப்பட்டும் சேற்று நிலத்திலை விட்டு நீங்காது தடுமாறி விழுகிற சிறிய எருது (குண்டை) போல, இராவணனால் பிடிக்கப்பட்ட அன்றே சாகாமல் இருக்கும் நான் மகாபாவி. உங்கள் எல்லோரையும் விற்று முழுங்குபவளாகிவிட்டேன். நரகத்தில் வீழ்ந்தால் அங்கிருந்து மீளும் விதியுண்டா எனக்கு?”  

இங்கிருந்து நான் இராமன் பகைவர்களை அழிப்பதைக் காணும் அளவற்ற இன்பம் எய்தவில்லை. என் தலைவன் திருடிகளைச் சூடவில்லை. நெடுநாட்களாக வருந்தினேன். உமது வம்சாவளியோடு உமக்கும் முடிவு கட்டினேன். அயோத்தியில் ஆண்ட அரசர்களின் புகழை எல்லாம் வாயால் விழுங்கிவிட்டேன்”.     

ஆங்கே வனத்தில் மாயமானைக் கொல் என்று சொன்னதன் மூலம் என் கணவனுக்கு இராவணன் என்ற ஒரு கொடும்பகையைக் கொடுத்தேன். என் தந்தையின் கல் போன்ற வலிமையான தோள்கள் கயிற்றால் கட்டப்பட்டிருப்பதைக் கண்டேன். சிறப்பு பெற்ற என் பிறந்த வீட்டிற்கும், புகுந்த வீட்டிற்கும் துன்பம் கொணர்ந்தேன். இது உண்மையல்லவா? நான் எளியவளா? இத்தனை செய்தும் இன்னும் இறக்காமல் இருக்கும் நான் பாவப்பட்டவள்

பிறையுடை நுதலார்க்கு ஏற்ற பிறந்த இல் கடன்கள் செய்ய,
இறையுடை இருக்கை மூதூர் என்றும் வந்து இருக்கலாதீர்,
சிறையிடைக் காண நீரும் சிறையொடும் சேர்ந்த ஆறோ
மறையுடை வரம்பு நீங்கா வழிவரு மன்னர் நீரே?(7668)

வன்சிறைப் பறவை ஊரும் வானவன், வரம்பு இல் மாயப்
புன் சிறைப் பிறவி தீர்ப்பான் உளன்”  எனப் புலவர் நின்றார்;
என்சிறை தீர்க்கு வாரைக் காண்கிலேன்; என்னின் வந்த
உன்சிறை விடுக்கற் பாலார் யாருளர், உலகத்து உள்ளார்?(7669)

பண் பெற்றார் ஓடு கூடாப் பகை பெற்றாய்; பகழி பாய
விண் பெற்றாய் எனினும் நன்றால்; வேந்தராய் உயர்ந்த மேலோர்
எண் பெற்றாய் பழியும் பெற்றாய்; இது நின்னால் பெற்றது அன்றால்;
பெண் பெற்றாய்; அதனால், பெற்றாய்; யார் இன்ன பேறு பெற்றார்!(7670)

சுற்றுண்ட பாச நாஞ்சில் சுமையொடும் சூடுண்டு, ஆற்ற
எற்றுண்டும், அளற்று நீங்கா, விழு சிறு குண்டை என்ன,
பற்றுண்ட நாளே மாளாப் பாவியேன், உம்மை எல்லாம்
விற்றுண்டேன்; எனக்கு மீளும் விதியுண்டோ, நரகின் வீழ்ந்தால்?(7671)

இருந்து நான் பகையை எல்லாம் ஈறு கண்டு, அளவு இல் இன்பம்
பொருந்தினேன் அல்லேன்; எம்கோன் திருவடி புனைந்தேன் அல்லேன்;
வருந்தினேன், நெடுநாள்; உம்மை வழியொடு முடித்தேன்; வாயால்
அருந்தினேன், அயோத்தி வந்த அரசர்தம் புகழை அம்மா?
 (7672)

கொல்“  எனக் கணவற்கு ஆங்கு ஓர் கொடும்பகை கொடுத்தேன்; எந்தை
கல் எனத் திரண்ட தோளைப் பாசத்தால் கட்டக் கண்டேன்;
இல் எனச் சிறந்து நின்ற இரண்டுக்கும் இன்னல் சூழ்ந்தேன்
அல் எனோ? எளியெனோ, யான்? அளியத்தேன், இறக்கலாதேன்.
 (7673)

முன்பு இணையற்ற வேள்வி செய்து என்னை ஈன்றெடுத்த என் தந்தையின் தெப்பம் (புணை) போன்ற திரண்ட தோள்கள் கட்டப்பட்டு பூமியில் புரள்வதைக் காணும் நான், திருமணச் சடங்கு முடித்து மந்திரங்களின் முறைப்படி கை பிடித்த என் கணவனுக்கும் இதே நிலை ஏற்படுவதைக் கண்டால் உடலில் உயிர் தரித்து வாழ்வேனா

அன்னைகளே! பெரியோர்களே! என் ஆருயிர்த் தங்கைகளே! என்னை பெற்றெடுத்த தந்தைக்கு ஏற்பட்ட நிலை எதுவும் முன்பே நீங்கள் அறியவில்லையா? உங்களுக்கும் ஏதாவது துன்பம் நிகழ்ந்துவிட்டதா? நெருங்க அருமையான வழியில் தந்தையை நீங்கள் தொடரவில்லை. நீங்கள் இறந்துவிட்டீர்களா (துஞ்சினீரோ)?”     

மேரு மலைக்கு மேலே சென்று வானைக் கைப்பற்றினாலும் நீர் சூழ்ந்த காவல் உடைய இலங்கையை அடைவது எளிதன்று. தந்தையே! உம்மைப் போர் புரிந்து கொண்டு வந்திருந்தாலும், வஞ்சனை செய்து கொண்டு வந்திருந்தாலும் உமக்கு நிகழ்ந்ததை எடுத்துச் சொல்ல உமக்கு யார் இருக்கிறார்கள்? உம்மிடம் அனுமன் இருக்கிறானா?”

சனக மன்னனை இங்கே கொண்டு வந்தவர்கள், தவம் புரிந்து ஆற்றல் குறைந்துள்ள பரதனைக் கொண்டு வருவதிலும் ஐயமில்லை. அது உண்மை. பரதன் இவர்களிடம் அகப்பட்டால் வரதன் (இராமன்) அதிக நாள் வாழமாட்டான். இராமனைப் பிரிந்து இலக்குமணனும் வாழமாட்டான். விரதம் மேற்கோண்டு அறத்தின் வழி வாழ்பவர்களுக்கு மேலும் மேலும் விளையக்கூடியவை இவைதான் போலும்.   

குரங்குச்சேனை கடலில் சேதுப்பாலம் கட்டி தடுத்தது. இலங்கையின் மதிலை எதிர்த்து வந்து அடைந்தது. பகைவர்களின் ஆவியை எடுத்தது’, என்று சிலர் சொல்ல, சொல்ல தான் அடைந்த பெரும் மகிழ்ச்சியை வேறு ஒரு வஞ்சனைச் செயல் உடைத்துவிட்டது விதிதான் என்று மனம் உளைந்த சீதை உணர்வற்றுப் போனாள்.   

இவ்வாறெல்லாம் ஏங்கி, நினைத்து புலம்பிய சீதையைக் கண்டு தேவர்களின் புகழ் நீக்கிய வாளுடைய இராவணன் மனம் இன்புற்று, காதலோடு நோக்கி, துன்பம் தாங்கமாட்டாள் இவள், துன்பத்திலிருந்து இவளைக் காத்து அதன் மூலம் அவள் மனதில் ஓங்கலாம் என்று எண்ணியவாறு பேசலானான்.     

இணை அறு வேள்வி மேல்நாள் இயற்றி, ஈன்று எடுத்த எந்தை
புணை உறு திரள்தோள் ஆர்த்து, பூழியில் புரளக் கண்டேன்;
மண வினை முடித்து, என் கையை மந்திர மரபின் தொட்ட
கணவனை இனைய கண்டால் அல்லது, கழிகின் றேனோ?
 (7674)

அன்னைமீர்! ஐயன்மீர்! என் ஆருயிர்த் தங்கைமீரே!
என்னை ஈன்று எடுத்த எந்தைக்கு எய்தியது யாதும் ஒன்றும்
முன்னம் நீர் உணர்ந்திலீரோ? உமக்கும் வேறு உற்றது உண்டோ?
துன்னரு நெறியின் வந்து தொடர்ந்திலீர்; துஞ்சினீரோ? (7675)

மேருவின் உம்பர்ச் சேர்ந்து விண்ணினை மீக்கொண்டாலும்,
நீர் உடைக் காவல் மூதூர் எய்தலாம் நெறியிற்று அன்றால்;
போர் இடைக் கொண்டார் ஏனும், வஞ்சனை புணர்த்தார் ஏனும்,
ஆர் உமக்கு அறையற் பாலார்? அனுமனும் உளனோ, நும்பால்? (7676)

சரதம்; மற்று இவனைத் தந்தார், தவம் புரிந்து ஆற்றல் தாழ்ந்த
பரதனைக் கொணர்தற்கு ஏதும் ஐயுறவு இல்லை; பல் நாள்
வரதனும் வாழ்வான் அல்லன்; தம்பியும் அனையன் வாழான்;
விரதம் உற்று, அறத்தில் நின்றார்க்கு இவைகொலாம் விளைவ மேன்மேல்? (7677)
 

அடைத்தது கடலை, மேல்வந்து அடைந்தது மதிலை; ஆவி
துடைத்தது பகையை, சேனை‘‘ , எனச் சிலர் சொல்லச் சொல்ல,
படைத்தது ஓர் உவகை தன்னை வேறு ஒரு வினையம் பண்ணி
உடைத்தது விதியே என்று என்று, உளைந்தனள்உணர்வு தீர்வாள்.(7678)

ஏங்குவாள் இனைய பன்ன, இமையவர் ஏற்றம் எல்லாம்
வாங்கு வாள் அரக்கன், ஆற்ற மனம் மகிழ்ந்து, இனிதின் நோக்கி,
தாங்குவாள் அல்லள் துன்பம் இவளையும் தாங்கித் தானும்
ஓங்குவான் என்ன உன்னி இனையன உரைக்கலுற்றான்.(7679)


No comments:

Post a Comment