புத்தகங்களைத் தேடி பூக்களின்
பயணம்
2016 ஆம் ஆண்டு சென்னை புத்தக கண்காட்சி
டிசம்பர் மழையின் காரணமாக புத்தக
கண்காட்சி தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்ற செய்தி காதில் விழுந்தது. ஜூன் 1 to 13 என்று தேதிகள் உறுதியானவுடன்
கூட்டாக குறுந்தொகை வாசித்த தோழிகள் குடும்பத்தை விட்டுவிட்டு கண்காட்சிக்குப்
போகலாம் என்று திட்டம் தீட்டினோம். கணவன்மார்கள், "நோ தங்கமணி.என்ஜாய்" என்ற
மைண்ட் வாய்ஸோடு வேகமாக பச்சைக் கொடி காண்பிக்க பயணத்திற்கான வேலைகள் ஆரம்பித்தன.
கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாதல்லவா.....அதனால் பயணத்தைப் பற்றிய செய்தி மிக
ரகசியமாக வைக்கப்பட்டது. ரகசியம் என்றாலே எல்லோருக்கும் எப்படியாவது தெரிய வருவது
உலக நடைமுறைதானே! அதே போல் எங்கள் பயணமும் சிங்கை இலக்கிய உலகிற்குத் தெரிய
வந்தது. சிலர் மகிழ்ந்தனர். பலர் எரிந்தனர். நாங்கள் மனம் வருந்தினோம். பலர்
எரிந்ததற்காக அல்ல. எங்களுடன் வருவதாக இருந்த அன்புத் தோழி சுஜா வரமுடியாமல்
போனதற்காக.
ஜூன் 9, 2016, வியாழக்கிழமை
வியாழன் இரவு சாங்கியை
அடைந்து விமானத்தில் ஏறி அமர்ந்தவுடன் அருகில் இருந்த தோழி பாரதியிடம் "இது
கனவு இல்லையே?" என்று
நான் கேட்க,
அவர்கள் வழக்கம்போல
சத்தமாக சிரித்துவிட்டு "நம்புங்கள் நிலா. நாம் சென்னைக்குப் பறக்கப்
போகிறோம்" என்றார். நான்கு
மணி நேர பயணத்தில் உறக்கம் குறைவு. உரையாடல் அதிகம். நள்ளிரவு பன்னிரண்டு
மணிக்குச் சென்னையை அடைந்தோம். வழக்கம்போல குடியுரிமைக்கு நீண்ட வரிசை. வரிசையில்
காத்திருக்கும்போது மலேசிய விமானம் தரையிறங்க அதிலிருந்து இறங்கி வந்த பயணிகளில்
எழுத்தாளர் எம் ஜி சுரேஷும் ஒருவர். அவர் எங்களைக் கவனிக்கவில்லை. நான் பாரதியிடம்
"விமான நிலையத்திலேயே ஓர் எழுத்தாளரைப் பார்த்துவிட்டோம். நல்ல சகுனம்"
என்றேன். பாரதியின் உறவினர் வீட்டிற்கு காரில் சென்றபோது ஒரு தெருவில்,
இரண்டு தெரு நாய்கள் குரைத்துக்கொண்டே காரை விடாமல் துரத்திக்கொண்டு
ஓடிவந்தன. எனக்கு நாஞ்சில் நாடனின் "குக்கல் நீதி" சிறுகதை நினைவில் ஓடி
மறைந்தது. வீடு சென்று படுக்கையில் விழுந்தபோது மணி அதிகாலை நான்கு. கடலின் நடுவே
தனியாக தத்தளித்துக் கொண்டே "உதவி! உதவி!" என்று நான் கத்துவது போல
கனவு. புத்தக கண்காட்சிக்கு வந்த இடத்தில் சம்பந்தமே இல்லாமல் இப்படி ஒரு கனவு
வருகிறதே என்று பயந்து எழுந்தேன். பிறகு "பின்நவீனத்துவ கனவாக இருக்கும்.
இதற்கெல்லாம் விளக்கம் தேடி மண்டையை உடைத்துக்கொள்ள கூடாது" என்ற முடிவோடு
மீண்டும் கண்மூடினேன்.
ஜூன் 10, 2016, வெள்ளிக்கிழமை
வார நாட்களில் புத்தக
கண்காட்சி மதியம் இரண்டு மணிக்குத்தான் தொடங்கும் என்று அறிந்தவுடன் சற்று
ஏமாற்றமாக இருந்தது. மதிய உணவை முடித்து கிளம்பினோம். எந்தெந்த பதிப்பகத்தாரிடம்
எந்தெந்த புத்தகங்கள் வாங்க வேண்டும் என்பதே பேச்சாக இருந்தது. கார் விரைந்தது.
போகும் வழியில் கடைத்தெருவில் கவிஞர் மேத்தா நின்று கொண்டிருப்பதைப் பார்த்தேன்.
இரண்டாவது நல்ல சகுனம் என்று சொல்லி சிரித்துக்கொண்டோம். சரியாக மூன்று மணிக்கு
சகாரா பாலைவனத்தை இல்லை,
இல்லை தீவுத்திடலை அடைந்தோம். 10
ரூபாய் கொடுத்து நுழைவுச்சீட்டை வாங்கிகொண்டு உள்ளே நுழைந்தோம்.
வரிசை வரிசையாக கடைகள். "கண்ணா லட்டு தின்ன ஆசையா!" என்று மூளைக்குள்
மணி அடிக்க ஆரம்பித்தது. எல்லா கடைக்குள்ளும் நுழைந்து பார்க்க வேண்டுமென்று
கண்கள் பரபரக்க, எல்லா புத்தகங்களையும் வாங்க
வேண்டுமென்று மனசு பரபரக்க "என்னை மீறி வாங்கிவிடுவாயா" என்று மிஸ்டர்
ஆதவன் மல்லுக்கு நிற்க "என்ன ஆனாலும் சரி. ஒரு கை பார்த்துவிடுவது" என்ற
முடிவோடு களத்தில் சே கண்காட்சியில் ஐக்கியமானோம்.
முதலில் சிங்கைக் கடையை நோக்கி
நடந்தோம். அங்கே சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத் தலைவர் திரு ஆண்டியப்பன் எங்களை
வரவேற்றார். சிங்கை எழுத்தாளர் கனகலதாவின் புத்தகங்களை வாங்கிகொண்டோம். எங்கள்
புத்தகப் பட்டியலை வெளியே எடுத்தோம். தோழி பாரதியின் பட்டியலில் அதிக கவிதை
தொகுப்புகள். என் பட்டியலில் அதிக கட்டுரைத் தொகுப்புகள். வேட்டை
ஆரம்பமானது. பத்து கடைகளுக்குள் நுழைந்து வெளியாவதற்குள் வியர்வையில் பாதி
குளித்திருந்தோம். ஆனாலும் விடவில்லை. தேடினோம்,
தேடினோம் விரும்பிய புத்தகம் கிடைக்கும் வரை தேடினோம். மெல்ல,
மெல்ல ஆத்மாநாம், பிரமிள்,
தேவதேவன், எஸ்
ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன் ஆகியோரை எங்கள்
பைகளில் சிறைபிடித்தோம்.
உயிர்மை
கடையில் , கவிஞர் மனுஷ்யபுத்திரனைச் சந்தித்து
பேசினோம். அவரது ஆஸ்தான புகைப்பட கலைஞர் பிரபு காளிதாஸ் எல்லோரையும் வளைத்து, வளைத்து புகைப்படம் எடுத்துக்
கொண்டிருந்தார். அவரிடமும் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பேசினேன். நான்
எப்போதுமே புகைப்படக் கலைஞர்களை (சட்டியில் இல்லாததை அகப்பையில் அள்ளும் வித்தை
தெரிந்தவர்கள் என்பதால்) பகைத்துக்கொள்வதே இல்லை. கவிஞர் மனுஷுடன் ஒரு புகைப்படம்
எடுத்துக்கொள்ள விரும்பினோம். அவர் உடனே அருகே இருந்த சிங்கைக் கடையின் முன்
எடுத்துக்கொள்வோம் என்றார். "இதில் கூட அரசியலா?" என்று கேட்டு
நாங்கள் சிரிக்க "ஆமாம். அரசியல் இல்லாமல் எதுவுமே இல்லை" என்றார்.
அரசியலைப் பற்றி மனுஷ் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் (சத்தியமா இதில் எந்த உள்
அரசியலும் கிடையாதுங்கோ) என்பதால் சிங்கைக் கடையின் முன் நின்று புகைப்படம்
எடுத்துக்கொண்டோம். மனிதர்களுக்குத்தானே அரசியல்! புகைப்படக்கருவிக்கு ஏது அரசியல்?? பிரபுவின் புகைப்படத்தில் சிங்கை கடையின்
பெயர் பலகை மட்டும் இல்லை.
புகைப்படத்திற்கு
போஸ் கொடுத்துவிட்டு திரும்பினால் உயிர்மை அரங்கில் எஸ்.ரா நின்றுகொண்டிருந்தார்.
ஓடிச்சென்று அவரிடம் உரையாடினோம். சிங்கையில் தங்கமீன் ஏற்பாட்டில் அவர் நடத்திய
கதைப்பயிலரங்கிற்குப் பின்னர் நிறைய பேர் எழுதுகிறார்கள் என்று அவரிடம் சொன்னோம்.
டிஸ்கவரி புக் பேலஸில் ஒரே கூட்டம். யாரென்று எட்டிப்பார்த்தால் சீமான் கையை ஆட்டி
வேகமாக ஏதோ பேசிக்கொண்டிருந்தார். நாங்கள் அதைவிட வேகமாக அருணின் pure cinema அரங்கை நோக்கி
ஓடினோம். ஆறு மணிக்கு தோழி லீனா அங்கு வருவதாக சொல்லியிருந்தார். நாங்கள் சென்று
பதினைந்து நிமிடங்களில் லீனா துள்ளலும் புன்னகையுமாக வந்து சேர்ந்தார். அவரிடம்
சில நிமிடங்கள் உரையாடிவிட்டு அவரது கவிதை தொகுப்புகளில் கையெழுத்து வாங்கினோம்.
நாங்கள் அங்கு
இருந்தபோது ஷோபா சக்தி வந்து லீனாவுடன் உரையாடிக்கொண்டிருந்தார். அவரைப் பார்த்து
புன்னகைத்தேனே தவிர எதுவும் பேசவில்லை. ஏன் பேசவில்லை என்று இப்போது என்னை நானே
கேட்டுக்கொள்கிறேன். ஆனால் காரணம் பிடிபடவில்லை. இயல் விருது பெற்றிருக்கும்
அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! லீனாவிடம்
பெண் எழுத்தாளர்கள் யாரைப் படிக்கலாம் என்று பாரதி கேட்க அம்பை, சூடாமணி ஆகியோரைக் குறிப்பிட்ட லீனா 'யாரைப் படித்தாலும் உங்களுக்கென்று ஒரு
நிலைப்பாட்டை வைத்துக்கொள்ளுங்கள்' என்றார். அது
எனக்குப் பிடித்திருந்தது. வாங்கிய
புத்தகங்களை தூக்க முடியாமல் தூக்கிகொண்டு வீடு வந்து சேர்ந்தோம். பட்டியலை
எடுத்து பார்த்தால் பாதி புத்தகங்கள் கூடஇன்னும் வாங்கவில்லை என்று அறிந்தபோது
மலைப்பாக இருந்தது.
ஜூன் 11, 2016, சனிக்கிழமை
கண் விழித்தவுடன் முதல்
வேலையாக எழுத்தாளர் திரு இமையத்தை தொலைபேசியில் அழைத்தேன். ஏற்கனவே தான் புத்தக
சந்தைக்கு வந்து விட்டு ஊர் திரும்பிவிட்டதாகவும், சில நெருக்கடிகளால் தன்னால்
மீண்டும் வர இயலாது என்றவர் அடுத்த முறை கட்டாயம் சந்திப்போம் என்றார். மார்ச்
மாதம், என்
நூல் ஆறஞ்சை அனுப்பியபோது படித்துவிட்டு தொலைபேசியில் அழைத்து குறைகளைச்
சுட்டிக்காட்டிவிட்டு நிறைகளை மட்டும் விமர்சனமாக தந்தவர். அவரது எழுத்தைப் போலவே
பாசாங்கற்ற மனிதர். புத்தக சந்தையிலிருந்து வாங்கிவந்த நூல்களில் முதலில் படித்தது
அவரது 'எங்
கதெ' நூலைத்தான்.
அதைப்பற்றி பின்பு அவருக்கு எழுதவேண்டும்.
பேராசிரியர் வீ அரசு
அவர்களைப் பற்றியும் அவரது வீட்டு நூலகத்தைப் பற்றியும் நண்பர் நவீனின் முகநூல்
பதிவு வழியாக அறிந்தேன். நவீனிடமிருந்து தொலைபேசி எண்ணைப் பெற்று பேராசிரியரிடம்
பேசி அவரது வீட்டிற்கு வருவதாக கூறியிருந்தேன். காலை பெருங்குடிக்குப் பயணமானோம்.
அவரது வீட்டைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறியபோது 'வீட்டின் முன் ஒற்றைப் பனைமரம்
இருக்கும்' என்று
அவர் கூறிய அடையாளம் மனதுக்கு நெருக்கமான ஓர் இடத்திற்கு போகப் போகிறோம் என்ற
உணர்வைத் தந்தது. ஒற்றைப் பனைமரத்திற்கு கீழே 'கல்மரம்' என்ற
பெயர் கொண்ட அவ்வீடு எங்களை கனிவோடு வரவேற்றது. பேராசிரியரும் அவரது மனைவி திருமதி
அ. மங்கையும் வீட்டின் வாசலுக்கு வந்து எங்களை அன்போடு வரவேற்றார்கள்.
உள்ளே நுழைவதற்கு முன்
"நாய் இருக்கிறதா? எனக்கு நாய் என்றால் பயம்"
என்று கூறும்போதே இரு நாய்கள் மெதுவாக எட்டிபார்த்தன. 'இவை
இரண்டும் யாரைப் பார்த்தாலும் குரைக்கும். ஆனால் உங்களைக் கண்டு குரைக்கவில்லை.
உங்கள் மீது வீசும் இலக்கிய வாசனையை அவை மோப்பம் பிடித்துவிட்டன என்று
நினைக்கிறேன். அதனால் தைரியமாக வாருங்கள்' என்று கூறி சிரித்தார் வீ அரசு.
கம்பன் வீட்டு தறியும் கவிபாடும் என்பது போல பேராசிரியர் வீட்டு நாயும்
இலக்கியவாதிகளை இனம் கண்டுகொள்கிறது.
வீட்டைச் சொர்க்கமாக
நினைப்பவள் நான். நாம் நாமாக மட்டும் இருக்ககூடிய இடம். வீட்டிலுள்ள ஒரு சிறு
பொருளின் வழியாக அவ்வீட்டில் வாழும் மனிதர்களின் இயல்புகளை, விருப்பங்களை
எளிதில் அறிந்து கொள்ளலாம். அவ்வகையில் அந்த இல்லத்தில் இருந்த பொருட்கள், இரு
பெரிய ஆளுமைகளின் (வீ அரசு சென்னைப் பல்கலைக்கழகத்தில் 30 ஆண்டுகள்
பணியாற்றி ஓய்வு பெற்றவர். திருமதி அ மங்கை ஆங்கில பேராசிரியை) துறை சார்ந்த
விருப்பங்களைப் பறை சாற்றிக் கொண்டிருந்தன. முதல் மாடியில் அவரது மாணவர்கள்
கண்டெடுத்த தொல்பொருட்களைக் கண்டோம். இரண்டாவது மாடியில் அவரது மாணவர்கள் சிலருடன்
உரையாடினோம்.
மூன்றாவது மாடியில்தான்
அந்த சொர்க்கம் இருந்தது. கிட்டத்தட்ட 22000 புத்தகங்கள். சங்க இலக்கியங்கள், அதற்கான
உரைகள், நிகண்டுகள், காப்பியங்கள், அகராதிகள், கதைகள், நாடகங்கள், நாவல்கள்
அப்பப்பா.....எல்லாவற்றிற்கும் மேலாக இதுவரை தமிழில் வெளிவந்த, வந்து
கொண்டிருக்கிற சிற்றிதழ்கள். அசந்து போனேன். 'நான் எப்போது வேண்டுமானாலும்
இங்கே வரலாம் அல்லவா?' என்று கேட்க அவர்
சிரித்துக்கொண்டே 'தாராளமாக வரலாம்' என்றார்.
அப்புத்தகங்களின் வழியாக என் இனிய தமிழ் படைப்பாளர்கள் அனைவரும் என்னையே உற்று
நோக்கி கொண்டிருப்பது போல ஒரு பிரம்மை. பெண்ணாக அதுவும் தமிழச்சியாக பிறந்தது
மாபெரும் வரம்தான்.
ஒரு கோப்பைத் தேநீர், இரண்டு
பிஸ்கட்டுகள், பேராசிரியருடன் சில நிமிடங்கள்
உரையாடல், சுற்றிலும்
புத்தகங்கள்...இதை சொர்க்கம் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது? பிரிய
மனமில்லாமல் விடைபெற்றோம். 'மீண்டும் எப்போது வருவோம் என்று
தெரியாது. ஆனால் எப்படியாவது வரவேண்டும்' என்று தோழி பாரதியிடம்
சொல்லியபோது கார் தீவுத்திடலை நோக்கி விரைந்து கொண்டிருந்தது.
தீவுத்திடலை அடைந்தபோது சூரியன்
உச்சத்தில் இருந்தான். காரப் பணியாரத்தையும் இனிப்பு பணியாரத்தையும் மதிய உணவாக
ருசித்துவிட்டு புத்தகச் சந்தைக்குள் நுழைந்தோம். நேராக ரஹ்மத் பதிப்பகம்
சென்றோம். அங்கு கவிஞர் உஸ்மான் எங்களை அன்போடு வரவேற்று உரையாடினார்.
சிங்கையிலிருந்து புறப்படும்போது நண்பர் ஷானவாஸ் முடிந்தால் கவிக்கோ மன்றம் சென்று
வாருங்கள் என்று கூறி இருந்தார். துரதிர்ஷ்டவசமாக எங்களால் அங்கு செல்ல இயலவில்லை.
திரு உஸ்மான் எங்களை புகைப்படம் எடுத்து எங்கள் வருகையை முகநூல் வழியாக
நண்பர்களுக்கு தெரிவித்திருந்ததைக் கண்டு மகிழ்ந்தோம்.
அங்கிருந்து மூன்று, நான்கு
அரங்குகள் செல்வதற்குள் எங்களுக்கு மயக்கம் வருவது போல இருக்க மெதுவாக சென்று
தடாகம் பதிப்பகத்திற்கு முன்னால் இருந்த இருக்கையில் அமர்ந்துவிட்டோம். தடாகம்
பதிப்பகம், பனுவல்
புத்தக நிலையம் இரண்டும் நண்பர் அமுதராசனுக்குச் சொந்தமானவை. ஏற்கனவே மின்னஞ்சல்
வழியாக அறிமுகம் ஆகியிருந்த அவரை அன்றுதான் நேரில் சந்தித்து பேசினேன். பனுவல்
நண்பர்கள் 'பட்டியலைத்
தாருங்கள். நாங்கள் நூல்களை வாங்கி தருகிறோம்' என்று கூறி கிட்டத்தட்ட எல்லா
நூல்களையும் பெற்று தந்தார்கள். பனுவல் நண்பர்கள் ராம்குமார், ஜான், சரவணன்
ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி.
வாங்கிய
புத்தகங்களுக்குப் பணம் செலுத்த பனுவல் அரங்கிற்கு வந்தோம். அங்கு ஒருவர்
சரவணனிடம் உரத்த குரலில் பேசிக்கொண்டிருந்தார். முகம் தெரிகிறது. பெயர்
நினைவில்லை. நான் மிக மெதுவாக "அவர் பெயர் என்ன?" என்று
பனுவல் நண்பர்களிடம் கேட்க அவர் "அவங்க கிட்ட ஏன் கேட்கிறிங்க. நானே சொல்றேன்
என் பெயர் கிருஷ்ண பிரபு" என்றார். என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்.
அப்போது நண்பர் இளங்கோ கிருஷ்ணன் வந்தார். அவரிடம் 'நான் உங்கள் முகநூல் நட்பில்
இருக்கிறேன். உங்கள் பதிவுகளை தவறாமல் படிப்பேன்' என்றேன். அவர் 'மன்னிக்கவும்.
எனக்கு உங்களை நினைவில் இல்லை' என்றார். அவரது அந்த நேர்மை
எனக்குப் பிடித்திருந்தது. எத்தனை முகநூல் நண்பர்களைத்தான் நினைவில்
வைத்துக்கொள்வது?. எனக்கும் இந்த மறதி பிரச்சனை
உண்டு. மார்க்கிடம் சொல்லி முகநூலில் இதற்கு உடனடி தீர்வு கொண்டு வரச்சொல்ல
வேண்டும்.
'நாளைக்கும்
நாங்கள் வருவோம்' என்ற பெரிய குண்டை பனுவல்
நண்பர்களை நோக்கி வீச 'கட்டாயம் வாங்க. இன்னும் பெரிய
பட்டியலோடு வாங்க' என்று கூறி 'எவ்வளவோ
பார்த்துட்டோம்' என்ற தோரணையில் எங்களைப் பார்த்து
சிரித்தார்கள். புத்தகங்களோடு சிங்கை அரங்கை அடைந்தோம். அங்கு சிங்கை
எழுத்தாளர்கள் ஜே.எம்.சாலி, கோட்டி முருகானந்தம், பிச்சினிக்காடு
இளங்கோ, மாதங்கி, சித்துராஜ்
பொன்ராஜ் ஆகியோரைச் சந்தித்து உரையாடினோம். இலக்கியப் பரிசுக்குத் தேர்வாகி உள்ள
சித்துராஜ் பொன்ராஜின் கவிதை, சிறுகதைத் தொகுப்புகளை
வாங்கினோம். அரங்கில் எழுத்தாளர் கனவு சுப்பிரபாரதிமணியன் அவர்களைச் சந்தித்து
பேசினேன். என் நூல் ஆறஞ்சிற்கு அருமையான விமர்சனக் கட்டுரை தந்தவர். அந்த
விமர்சனத்தை ஒரு நல்ல இதழில் வெளியிட முயற்சிகள் எடுத்து வருகிறார். அவருக்கு
நன்றி. தோழி அனிதா ராஜ் அவர்களைச் சந்தித்தது மகிழ்ச்சியளித்தது.
மாலை ஜே எம் சாலியின்
நூல் வெளியீடு இருந்தது. அதற்கு எழுத்தாளர் மாலன் வந்திருந்தார். கண்கள் விரிய
புன்னகையுடன் "நீங்கள் எப்போது வந்தீர்கள்?" என்றார். அவரிடம் சில நிமிடங்கள்
உரையாடினேன். 'உங்கள் சிறுவர் நூல்
"கொண்டாம்மா கெண்டாமா" இருக்கிறதா?' என்று கேட்டார். அதுதான் மாலன்.
இளம் எழுத்தாளர்களைத் தட்டிக் கொடுத்து ஊக்கமூட்டுவதில் அவருக்கு இணை அவர்
மட்டுமே. நான் ரசிக்கும் ஆளுமைகளில் ஒருவர். நல்ல நண்பர். எனது வளர்ச்சியில்
உண்மையான அக்கறை கொண்ட மனிதர். அவரைச் சந்தித்தது மனதுக்கு நிறைவாக இருந்தது. சென்றிருந்த
கார் காத்திருக்க முடியாத காரணத்தால், ஜே.எம்.சாலி
அவர்களின் புத்தக வெளியீட்டில் கலந்துகொள்ளும் அரிய வாய்ப்பை இழந்து வீடு
திரும்பினோம்
ஜூன் 12, 2016, ஞாயிற்றுக்கிழமை
இரண்டு நாட்கள் சுற்றி, சுற்றி
நூல்களை வாங்கியதால் ஞாயிறு காலை கண் விழித்தபோது தலை சுற்றியது. மதிய உணவை
முடித்து நிதானமாக கிளம்பினோம். இன்றாவது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்
புத்தகம் வாங்குவோம் என்று பெரிய மனதுடன் முடிவெடுத்தோம்.
ஓர் அரங்கத்தில் புத்தகத்தை
தேடிக்கொண்டிருந்தபோது சற்று தொலைவில் நின்றவரைப் பார்த்தவுடன் "அவர் லக்ஷ்மி
சரவணக்குமார்தானே?" என்று நான் கேட்க பாரதி
"அப்படித்தான் நினைக்கிறேன்" என்றார். தேடலை நிறுத்திவிட்டு அவரை நோக்கி
நடந்தோம். ஒருமுறைக்கு இருமுறை அவரை சுற்றிவிட்டு அங்க அடையாளங்கள் எல்லாம் சரியாக
உள்ளனவா என்று உறுதிப்படுத்தியவுடன் மெல்லிய குரலில் "நீங்க லக்ஷ்மி
சரவணக்குமார்தானே" என்றவுடன் அவர் "ஆமாம்" என்று தலையசைத்தார்.
இளம் படைப்பாளிகளைப்
பார்த்தாலே மனதில் ஒருவித உற்சாகம் தொற்றிக்கொள்கிறது. எங்களை
அறிமுகப்படுத்திக்கொண்டவுடன் அவர் "உங்களை பற்றி கேள்விப்பட்டுள்ளேன்.
அம்ருதா இதழில் மலேசியா நவீன் எழுதிய கட்டுரை வழியாக தெரியும்" என்றவுடன்
மனம் மகிழ்ந்தேன். நண்பர் நவீனுக்கு மனமார்ந்த
நன்றி. பின்பு அவர் "சிங்கையிலிருந்து ரமா சுரேஷ் என்ற தோழி என் நூலைப்
படித்துவிட்டு எனக்கு செய்தி அனுப்பியிருந்தார். உங்களுக்கு அவரைத் தெரியுமா"
என்றார். ரமாவைத் தெரியாது என்று சொன்னால் ஏற்கனவே பட்டிமன்றங்களில் என்னோடு சண்டை
போடுபவர் உண்மையிலேயே சண்டைக்கு வந்துவிடுவாரே என்று பயந்து தெரியும் என்ற உண்மையை
லக்ஷ்மியிடம் சொன்னேன்.
அவருடன் புகைப்படம்
எடுத்துக்கொள்ள விரும்பி யாரை எடுக்கச் சொல்லலாம் என்று தேடியபோது அருகிலிருந்த
லக்ஷ்மியின் மனைவி நான் எடுக்கிறேன் என்று கூறி முற்போக்கு பெண்ணாக முன்வந்தார்.
புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தபோது "இவரோட போட்டோ எடுத்துக்கிற இது ரெண்டும்
கட்டாயம் லூஸாத்தான் இருக்கணும்" என்ற லக்ஷ்மி மனைவியின் மைண்ட் வாய்ஸ்
காதுகளில் ஒலித்தது. எங்களுக்குத்தான் அவர் படைப்பாளி. அவங்களுக்கு அவர் வெறும்
கணவர்தானே!
புக்ஸ் ஃபார்
சில்ட்ரன்ஸ் அரங்கில் குழந்தைகளுக்கான புத்தகங்களை வாங்கினோம். பணம் செலுத்தும்
இடத்தில் நண்பர் கொ.மா.கோ இளங்கோ அவர்களைச் சந்தித்து பேசினேன். மற்ற மொழியில்
புகழ்பெற்ற சிறுவர் கதைகளை தமிழில் மொழி பெயர்த்துள்ளார். என் மகளுக்கு அந்நூல்களை
வாசித்து காட்டுகிறேன். அற்புதமாக உள்ளன. இறுதியாக சிங்கை அரங்கிற்கும், பனுவல்
அரங்கிற்கும் சென்று ஊருக்கு கிளம்புவதை அறிவித்துவிட்டு புத்தகச் சந்தைக்கு
பிரியா விடைகொடுத்தோம். வெளியே வந்தபோது சிங்கை நண்பர்கள் வாணி, சீர்காழி
செல்வராஜ் இருவரையும் சந்தித்து பேசினோம். அவர்களது நூல்கள் மணிமேகலைப்
பிரசுரத்தால் அன்று வெளியீடு கண்ட செய்தியை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார்கள்.
ஆட்டோவிற்காக
காத்திருக்கும்போதுதான் அந்த அற்புதம் நிகழ்ந்தது. எழுத்தாளர் பிரபஞ்சன் வந்து
கொண்டிருந்தார். நான் பாரதியிடம் சொல்லிவிட்டு ஓடிப்போய் வணக்கத்துடன் அவர் முன்
நின்றேன். என்னைப் பார்த்து புன்னகை செய்தவர் 'நலமா?' என்றார்.
'என்னைத்
தெரியுமா?' என்று
கேட்டேன். 'ஏன்
தெரியாமல்? சிங்கப்பூரிலிருந்துதானே
வந்துள்ளீர்கள்?' என்று அவர் கேட்டவுடன் மனம்
நெகிழ்ந்து போனேன். அற்புதமான மொழியும், அசத்தும்
படைப்பாற்றலும் கொண்ட அவரின் முன் நான் நின்ற தருணங்கள் வாழ்வில் மிக
முக்கியமானவை. அருகில் இருந்தவரை கவிஞர் விஜயலெட்சுமி என்று அறிமுகம்
செய்துவைத்தார். நடை தளர்ந்திருந்தது. உடல்நலம் குன்றியிருந்தது. முதுமை முகத்தில்
தெரிந்தது. விடை பெற்றுச் சென்றவரை பார்த்துக் கொண்டே நின்றேன். ஆனால்
அப்போதும் அவரின் படைப்புகளின் வழியாக மனம் ஓடி திரும்பியது. அதுதானே ஒரு
படைப்பாளனின் வெற்றி.
ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தோம். வாங்கிய புத்தகங்களைப் பிரித்து பெட்டிக்குள் வைத்தோம். இரவு விமான நிலையத்திற்குப் புறப்பட்டோம். அங்கு லக்ஷ்மி சரவணக்குமார் வந்திருந்தார். அவருடன் பொதுவாக இலக்கியச்சூழல் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். பின்பு சிங்கார சென்னைக்கு குட்பை சொல்லிவிட்டு விமானத்தில் ஏறி அமர்ந்தோம்.
ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தோம். வாங்கிய புத்தகங்களைப் பிரித்து பெட்டிக்குள் வைத்தோம். இரவு விமான நிலையத்திற்குப் புறப்பட்டோம். அங்கு லக்ஷ்மி சரவணக்குமார் வந்திருந்தார். அவருடன் பொதுவாக இலக்கியச்சூழல் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். பின்பு சிங்கார சென்னைக்கு குட்பை சொல்லிவிட்டு விமானத்தில் ஏறி அமர்ந்தோம்.
மூன்று நாட்கள் பயணம்..அற்புதமான
தருணங்கள், மறக்கமுடியாத
மனிதர்கள், புதிய
சந்திப்புகள், எழுத்தாளர்களின் அறிமுகம், நண்பர்களுடனான
உரையாடல்கள், வாங்கிய
நூல்கள், வாங்க
இயலாத புத்தகங்கள், சென்னை வெயில், தீவுத்திடல், பணியாரங்கள்
அத்தனையும் இறப்பு வரை நெஞ்சாங்கூட்டுக்குள் நினைவுகளாக நீந்திக் கொண்டே
இருக்கும்.
No comments:
Post a Comment