Sunday, March 19, 2017

கம்பராமாயணம் - திரு அ.கி.வரதராசனுடன் சந்திப்பு 10
மார்ச் 10, 2017 - ஜூரோங் ஈஸ்ட் பொது நூலகம்

திரு அ.கி.வரதராசனின் உரையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரை

யுத்த காண்டம், மாயா சனகன் படலம், பகுதி – 1

இப்படலம் முழுவதும் அறுசீர் விருத்தத்தில் எழுதப்பட்டுள்ளது. விருத்தத்தில் ஸ்பெஷலிட்டான கம்பன் இப்படலத்தின் ஒவ்வொரு பாடலிலும் தன் சொல்வண்ணத்தைக் காட்டி வாசிப்பவர்களைக் கட்டிபோடுகிறான். சீதையை தன் வழிக்கு வரச்செய்யும் நோக்கில் இராவணன் செய்யும் ஒரு தந்திர மந்திர உத்திதான் இப்படலம். அரக்கன் ஒருவனை மிதிலை அரசன் சனகனாக மாற்றி அவனை சீதையிடம் காட்டுவதன் மூலம் தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று இராவணன் முயற்சிக்கும் காட்சிகள் இப்படலத்தில் காட்சிகளாக விரிகின்றன. வான்மீகத்தில் இல்லாத இப்படலம் கம்பனால் புனையப்பட்டுள்ளது. இதற்கான நோக்கம் சீதையின் மேன்மையைக் கூறுவதற்காக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அங்கே போர்க்களத்தில் கும்பகருணன் செய்த பேராண்மையும் அழகும் நிறைந்த வீரதீர செயல்களைப் பற்றி செம்மையாக உணர்வில் தைக்குமாறு கூறினோம். இங்கே இலங்கையில் இலங்கை மன்னன் இராவணன் சீதை மீது கொண்ட பேராசையால் இழிவான, அறமற்ற மாயைச் செயல் ஒன்றைத் தனி இடத்தில் இருந்து, நினைத்து, திட்டமிட்டதைக் கூறத் தொடங்கினோம்.

திசைகளை எல்லாம் வென்ற பெருவலி தோளனான இராவணன் தனது மந்திராலோசனை மண்டபத்திற்கு வந்து மோதரன் (மகோதரன்) என்னும் நாமம் கொண்டவனை நோக்கிசீதையை அடைந்து அதன் மூலம் என் உள்ளத்தின் துன்பம் நீங்கும் வழி என்ன என்பதை உரைத்து கொஞ்சம், கொஞ்சமாக என் உடலை விட்டு நீங்கிக்கொண்டிருக்கும் என் இன்னுயிரை மீட்டுக் கொடுஎன்கிறான்.

உரைக்கிறேன். இன்றே நல்ல ஓர் ஆலோசனையை உறுதியாக உரைக்கிறேன். மாயச் செயல் ஒன்றை உரைக்கிறேன். வஞ்சனை செய்து நொடிப்பொழுதில் மருத்தன் என்னும் அரக்கனைக் கொடுமையான சனகனாக உருமாற்றி கட்டி இழுத்து வந்து சீதையிடம் காட்டினால் அவள் உடனே உன்னை மணப்பாள்என மகோதரன் அபாயகரமான உபாயத்தை உரைக்கிறான்.

இவ்வாறு மகோதரன் உரைத்தவுடன் இராவணன் எழுந்து சென்று அவனை மார்புற இறுகத் தழுவி அன்பானவனே! மருத்தனை அழைத்துக் கொண்டு நீ அங்கு வந்த சேர்வாயாக!” என்று கூறிவிட்டு அழகிய மலர்கள் பூத்துக் குலுங்கும் சோலையாகிய அசோக வனத்தை நோக்கி, தீய வினைகளைத் தன் கற்பின் ஆற்றலால் வெல்லும் விளக்காகிய சீதையை அச்சுறுத்தும் பொருட்டு எழுந்து செல்கிறான்.   

ஒளி பொருந்திய மகுட வரிசையானது வெயில் போன்ற ஒளியை எங்கும் வீசியதால் துன் இருளானது தோற்று ஓட, ஒளியுடைய மணிகளை அணிந்த தோளில் பொன்னாலான மாலை நீல மலையிலிருந்து அருவி வீழ்வது போல பொலிவுடன் திகழ, நல்ல பெரும் மதம் கொண்ட களிறே நாணமடையும்படி நடந்து வந்தான்.

ஒளியுள்ள விளக்கு ஒரு விளக்கைத் தாங்கிக்கொண்டு, ஒளி பொருந்திய அணிகலனைப் பாம்பு போல இடுப்பிலே சுற்றிக்கொண்டு மெலிந்த இடை நோகுமாறு முலைகளைச் சுமந்து கொண்டு இளம்பிறை போன்ற நெற்றியை உடைய தேவ மகளிர் முன்னும் பின்னுமாக வளைத்து சூழ்ந்து வர அனைவரும் வாழ்த்த இராவணன் நடந்து வந்தான்.

அவ்வழி கருணன் செய்த பேர் எழில் ஆண்மை எல்லாம்,
செவ்வழி உணர்வு தோன்றச் செப்பினம்சிறுமை தீரா
வெவ்வழி மாயை ஒன்று , வேறு இருந்து எண்ணி வேட்கை
இவ்வழி இலங்கை வேந்தன் இயற்றியது இயம்பல் உற்றாம். (7632)

மாதிரம் கடந்த தோளான், மந்திர இருக்கை வந்த
மோதரன் என்னும் நாமத்து ஒருவனை முறையின் நோக்கி,
சீதையை எய்தி, உள்ளம் சிறுமையின் தீரும் செய்கை
யாது? எனக்கு உணர்த்தி, இன்று, என் இன்னுயிர் ஈதி என்றான்.(7633)

உணர்த்துவென், இன்று நன்று ஓர் உபாயத்தின் உறுதி மாயை
புணர்த்துவென், சீதை தானே புணர்வது ஓர் வினையம் போற்றி,
கணத்து வன் சனகன் தன்னைக் கட்டினன் கொணர்ந்து காட்ட
மணத் தொழில் புரியும் அன்றே? மருத்தனை உருவம் மாற்றி (7634)

என அவன் உரைத்தலோடும், எழுந்து மார்பு இறுகப் புல்லி,
அனையவன் தன்னைக் கொண்டு ஆங்கு அணுகுதி,
ன்ப! என்னா,
புனை மலர்ச் சரளச் சோலை நோக்கினன், எழுந்து போனான்;
வினைகளைக் கற்பின் வென்ற விளக்கினை வெருவல் காண்பான் (7635)

மின் ஒளிர் மகுட கோடி வெயில் ஒளி விரித்து வீச,
துன் இருள் இரிந்து தோற்ப, சுடர்மணித் தோளில் தோன்றும்
பொன் அரி மாலை நீல மலையின் வீழ் அருவி பொற்ப,
நல் நெடுங்களி மால் யானை நாணுற, நடந்து வந்தான்.
 (7636) 
   
விளக்கு ஒரு விளக்கம் தாங்கி, மின் அணி அரவின் சுற்றி,
இளைப்புறும் மருங்குல் நோவ, முலை சுமந்து இயங்கும் என்ன
முளைப் பிறை நெற்றி வான மடந்தையர், முன்னும் பின்னும்,
வளைத்தனர் வந்து சூழ, வந்திகர் வாழ்த்த, வந்தான். (7637)

இசை போன்ற பேச்சையும், பவளம் போன்ற உதடுகளையும், பெண்களாய் பிறந்தவர்களுக்கு அமைந்த நல் உறுப்புகள் அனைத்தும் அழகிய தன்மை உடையதாயும், எண்களால் அளவிட முடியாத சிறந்த குணங்களை உடையவளான சீதையை இராவணன் அவள் கலங்குமாறு கண்டான்.

இடையில் வாளை உடைய இராவணன் போடப்பட்டிருந்த பொன் பீடத்தில் அமர்ந்து, தேவர்களை தேவலோகத்திலிருந்து இருந்து விரட்டிய தோள் தொகுதிகள் சுற்றியிருக்க, ஒரு கால் தொடை மீது இருக்க, வட்ட வடிவமான வெண் கொற்றக் குடை தலைக்கு மேல் நிற்க, இருபுறமும் சாமரங்கள் வீசப்பட பின்வருமாறு பேசலானான்.

எப்போது அடியேனான என் மீது நீ இரக்கம் கொள்ளப் போகிறாய்? சந்திரனுக்கும் கதிரவனுக்கும் எப்போது நான் வேறுபாடு அறிவது? உருவமற்ற மன்மதனின் பாணத்துக்கு இலக்கு ஆகாமல் நான் எப்போது தப்புவது?” என்று தான் நினைத்த எல்லாவற்றையும் சொல்வதற்கு எடுத்துக் கொண்டான்.

அமுதே! வஞ்சனாகிய நான் எனக்காக பெண்ணுருவம் கொண்ட நஞ்சு தோய்ந்த அமுதத்தை உண்ண பெருவிழைவு கொண்டிருந்தேன். ஆனால் இப்போது நாளும் தேய்ந்த என் மனம் மாறியது. உங்கள் நினைப்பு விட்டால் என் உயிர் பிரிந்துவிடுமோ என அஞ்சுகிறேன். நான் உங்களது அடைக்கலம்என இராவணன் சீதையிடம் சரணாகதி அடைகிறான்.

தோல்வியே அறியாத என்னைத் தோற்கடித்தீர்கள். நிலவின் குளிர்ச்சிக்கு கூட என் மேனியை சுடுமாறு செய்தீர்கள். தென்றல் வீசும்போது கூட என் உடல் வியர்க்குமாறு செய்தீர்கள். வைரம் போன்ற என் தோள் இளைக்குமாறு செய்தீர்கள். வேனிலைத் துணையாக கொண்ட மன்மதன் ஆர்ப்பிக்குமாறு செய்தீர்கள். எனக்கு துன்பம் என்றால் என்ன என்பதை அறிவித்தீர்கள். என்னுடைய இந்த நிலையால் தேவர்களின் அச்சம் நீங்குமாறு செய்தீர்கள். இன்னும் என்னனென்ன துன்பங்களை எல்லாம் செய்யப் போகிறீர்கள்?” என்று இராவணன் காதலோடு சீதையை நோக்கி புலம்புகிறான்.    

நான் காணும் பெண்கள் அனைவரையும் நீரே என ஆக்கி, நான் அழைக்கும் பெயர் எல்லாம் உமது பெயரென ஆக்கி, நான் நோக்கும் கண்கள் எல்லாம் உமது கண்களென ஆக்கி, காமவேள் என்ற பெயருடைய மன்மதன் என் மீது அவனது பாணங்களை எய்யுமாறு செய்து, மன்மதனின் ஐந்து கணைகளால் என் மீது புண் உண்டாக்கி எனக்கு விபரீதம் உண்டாக்கிவிட்டீர்கள் என்று இராவணன் தொடர்ந்து புலம்புகிறான்.

பண்களால் கிளவி செய்து, பவளத்தால் அதரம் ஆக்கி,
பெண்கள் ஆனார்க்குள் நல்ல உறுப்பு எலாம் பெருக்கி ஈட்ட
எண்களால் அளவா மானக் குணம் தொகுத்து இயற்றினாளை,
கண்களால் அரக்கன் கண்டான், அவளை ஓர் கலக்கம் காண்பான். (7638)

        இட்டது ஓர் இரண பீடத்து, அமரரை இருக்கை நின்றும்
       கட்ட தோள் கானம் சுற்ற, கழல் ஒன்று கவானின் தோன்ற,
       வட்ட வெண் கவிகை ஓங்க, சாமரை மருங்கு வீச,
       தொட்டது ஓர் சுரிகையாளன் இருந்தனன், இனைய சொன்னான். (7639)

       என்றுதான், அடியனேனுக்கு இரங்குவது? இந்து என்பான்
       என்றுதான், இரவியோடும் வேற்றுமை
தெரிவது என்பால்?
       என்றுதான், அநங்க வாளிக்கு இலக்கு அலாது இருக்கல் ஆவது?
       என்று, தான் உற்றது எல்லாம் இயம்புவான் எடுத்துக் கொண்டான்
 (7640)

வஞ்சனேன் எனக்கு நானே, மாதரார் வடிவு கொண்ட
நஞ்சுதோய் அமுதம் உண்பான் நச்சினேன்; நாளும் தேய்ந்த;
நெஞ்சு
நேரானது உம்மை நினைப்பு விட்டு, ஆவி நீக்க
அஞ்சினேன்; அடியனேன் நும் அடைக்கலம், அமுதின் வந்தீர்! (7641)

தோற்பித்தீர்; மதிக்கு மேனி சுடுவித்தீர்; தென்றல் தூற்ற
வேர்ப்பித்தீர்; வயிரத் தோளை மெலிவித்தீர்; வேனில் வேளை
ஆர்ப்பித்தீர்; என்னை இன்னல் அறிவித்தீர்; அமரர் அச்சம்
தீர்ப்பித்தீர்; இன்னும் என் என் செய்வித்துத் தீர்திர் அம்மா!
 (7642)

பெண் எலாம் நீரே ஆக்கி, பேர் எலாம் உமதே ஆக்கி,
கண் எலாம் நும்கண் ஆக்கி, காம வேள் என்னும் நாமத்து
அண்ணல் எய்வானும் ஆக்கி, ஐங்கணை அரியத் தக்க
புண் எலாம் எனக்கே ஆக்கி, விபரீதம் புணர்த்து விட்டீர். (7643)

சிவபெருமான் முதல் மற்றைய மானுடர்கள் வரை அனைவரும் அஞ்சும்படி மூன்று உலகங்களையும் காப்பதற்காக வெற்றி பெற்றவன் நான்.வீரப்பெருமை பேசுவோர் முன் தோற்று உயிர்விடாதவன் நான். அப்படிப்பட்ட நான் பெண் மீது வைத்த காமத்தால் உயிர் பிரிந்தேன் என்றால் அது என் வீரம் கலந்த ஆண்மைக்கு இழுக்காதா?” என்று இராவணன் சீதையை நோக்கி கேட்கிறான்.

காம நோயை அனுபவிப்பதால் நொந்து துன்புறும் என் ஆவி, நாட்கள் பல கழிந்தவுடன் நாய் உயிர் என்ற இழி நிலையை அடையலாம். பல நூல்கள் கற்றுணர்ந்த அறிஞர்கள் காமத்தினால் ஏற்படும் அவஸ்தைகள் பத்து என்று பட்டியலிட்டது பொய். அந்த அவஸ்தைகள் ஆயிரத்துக்கும் மேலாகும்என்று இராவணன் தான் காமத்தினால் ஆயிரத்துக்கும் மேலான அவஸ்தைகள் படுவதாக சீதையிடம் மறைமுகமாக சொல்கிறான். காட்சி, வேட்கை, உள்ளுதல், மெலிதல், ஆக்கம் செப்பல், நாணுவரையிறத்தல், நோக்கவ எல்லாம் அவையே போறல், மறத்தல், மயக்கம், சாக்காடு ஆகியவை பத்து அவஸ்தைகள்.

அறத்தால் வரும் செல்வத்திற்கு ஒப்பானவரே! அமிழ்தினும் இனிதானவரே! என்னைப் பிறக்காதவனாக ஆக்க வந்தவரே! உங்களது பேரழகு என் மானத்தைக் கொல்ல, நான் செய்த பெரும் காரியங்கள் மறந்து போயின. நீங்கள் என் மீது காதல் கொள்வீர்கள் என்ற நம்பிக்கை மருந்தால் தினம் செத்து, செத்து பிழைக்கிறேன் நான். என்னுடைய இந்த நிலை யாருக்குத் தெரியும்?” என்று இராவணன் புலம்புகிறான்.

அமுதம் போன்ற இனிதான பேச்சை உடையவரே! நடுநிலையாக சிந்தித்துப் பார்த்தால், அகலிகை இந்திரன் மீது கொண்ட காதலால் தன்னை அவனுக்கு தந்தாள். அதனால் அவளுக்கு இழுக்கு ஏற்பட்டதா? இல்லையே. என் காமநோய் தீர உங்களது அழகிய குமுதம் போன்ற சிவந்த வாய்களில் ஊறும் அமுதைத் தவிர வேறு மந்திரம் இல்லை. மருந்து இல்லை என இராவணன் உரைக்கிறான்.   

இவ்வாறெல்லாம் கூறிவிட்டு எழுந்து சென்று, நீலக் குன்றுக்கு இணையாக உரைத்தாலும் நிகர் ஆகாத இருபது திரண்ட தோள்களும் நிலத்தில் படுமாறு, மின்னல் திரண்டு அருக்கன் தன்னை விரித்து ஒளி பரப்புவது போல தனது மகுடம் நிலம் பட சீதையின் முன் விழுந்து வணங்கினான்.

இராவணன் மொழிந்த கூற்றுகளைக் கேட்ட சீதை புலியைக் கண்ட மான் போல மறுகினாள். தனது மெலிந்த உடல் நடுங்கினாள். விம்மி அழுதாள். அவன் கொன்றாலும் பரவாயில்லை தனது உள்ளத்தில் உள்ளதை கூற வேண்டும் என்று எண்ணி தனது காலடியில் கிடந்த புல் ஒன்றை நோக்கி பேசலானாள்.

ஈசனே முதலா மற்றை மானுடர் இறுதி யாரும்
கூச, மூன்று உலகும் காக்கும் கொற்றத்
தென்; வீரக் கோட்டி
பேசுவார் ஒருவர்க்கு ஆவி தோற்றிலென்; பெண்பால் வைத்த
ஆசை நோய் கொன்றது என்றால், ஆண்மைதான் மாசு உணாதோ? (7644)

'நோயினை நுகரவேயும், நுணங்கி நின்று உணங்கும் ஆவி,
நாய் உயிர் ஆகும் அன்றே, நாள் பல கழித்த காலை?
பாயிரம் உணர்ந்த நூலோர் காமத்துப் பகுத்த பத்தி
ஆயிரம் அல்ல போனஐயிரண்டு என்பர் பொய்யே. (7645)

அறம் தரும் செல்வம் அன்னீர்! அமிழ்தினும் இனியீர் ! என்னைப்
பிறத்திலன் ஆக்க வந்தீர்; பேர் எழில் மானம் கொல்ல,
மறந்தன பெரிய, போன,
ரும் எனும் மருந்து தன்னால்,
இறந்து இறந்து உய்கின்றேன் யான்; யார், இது
தெரியும் ஈட்டார்? (7646)

அந்தரம் உணரின், மேல்நாள், அகலிகை என்பாள், காதல்
இந்திரன் உணர்த்த, நல்கி எய்தினாள், இழுக்கு உற்றாளோ?
மந்திரம் இல்லை, வேறு ஓர் மருந்து இல்லை, மையல் நோய்க்குச்
சுந்தரக் குமுதச் செவ்வாய் அமுது அலால்; அமுதச் சொல்லீர்! ‘(7647)

என்று உரைத்து, எழுந்து சென்று, அங்கு, இருபது என்று உரைக்கும் நீலக்
குன்று உரைத்தாலும் நேராக் குவவுத் தோள் நிலத்தைக் கூட,
மின்திரைத்து அருக்கன் தன்னை விரித்து மீன் தொகுத்தது ஒன்று
நின்று இமைக்கின்றது அன்ன முடி படி நெடிதின் வைத்தான். (7648)

வல்லியம் மருங்கு கண்ட மான் என மறுக்கம் உற்று,
மெல்லியல் ஆக்கை முற்றும் நடுங்கினள், விம்மு கின்றாள்,
கொல்லிய வரினும் உள்ளம் கூறுவென்,
தெரிஎன்னா,
புல்லிய கிடந்தது ஒன்றை நோக்கினாள், புகல்வ தானாள்
 (7649)

நீ செய்வது பெரும் பழி, பாவம் என்று உணரவில்லை. கூறத்தக்க சொற்கள் இவை அல்ல என்பதையும் நீ உணரவில்லை. முறைமை தெரியாமல் நடந்து கொள்கிறாய். அறம் மீறிய செயல்கள் இத்தனை செய்தும் இன்னும் நெஞ்சு பிளவுபடாமல் இருக்கிறாய். வஞ்சனையான சுற்றத்தோடு இன்றுவரை நீ அழிவில்லாமல் இருக்கிறாய் என்றால் என் கற்பின் வலிமைக்கு பொருள் என்ன? அறத்திற்கு பொருள் என்ன?” என்று சீதை கேட்கிறாள்.     

வானம் உள்ளது. அறத்தின் சொற்படி மண்ணுலகில் வாழும் ஊன் போர்த்திய எல்லா உடம்புகளுக்கும் உயிர் உள்ளது. உணர்வும் உள்ளது. பத்து பிளவுபட்ட வாய்களை வைத்துக் கொண்டு நீ உரைக்கும் தகாத சொற்களைக் கேட்க நான் இங்கே இருக்கிறேன் என்றால் நீ என்னதான் பேசமாட்டாய்? யாதுதான் செய்யமாட்டாய்?” என சீதை கோபத்தோடும் எரிச்சலோடும் கேட்கிறாள். 
      
இந்திரன், பிரம்மா, முருகன், சிவன் இவர்களின் பெருமை அறியாமல் அவர்களைப் போரில் எதிர்த்து வென்றேன் என்கிறாய். போர்க்களம் புகுந்தபோது என் ஆசைப் பழமான இராமனை அச்சத்தால் கண்ணால் காணவில்லை போலும் என்று நக்கலாக உரைக்கிறாள் சீதை.

ஊண் உண்ணாமல் இந்த உடலைப் பேணிக்கொண்டு, நற்பெருமையை இழந்து உன் முன் நாணமில்லாது இருக்கிறேன் என்று நினைத்தால் அப்படி அல்ல. குற்றமற்ற பண்புகளை அணிகலன்களாக அணிந்த திருமேனியனும் புண்ணியமூர்த்தியுமான இராமனைக் காண காதலோடு காத்திருக்கிறேன். தெரிந்துகொள்!” என்று சீதை எச்சரிக்கை விடுகிறாள்.
  
போர்க்களத்தில் செம்பொன்னாலான குன்று போல அவரது தம்பி இலக்குமணன் நின்று நீ புறமுதுகிட்டு ஓடுவதைத் தடுக்க, உன்னைக் கொன்று, உன் தலைகளை நிலத்தில் வீழ்த்தி, அரக்கர் குலத்தையே முற்றிலும் அழித்தொழித்து இராமன் என் முன் வந்தருளும் கோலத்தைக் காணும் பேராசையோடு சென்று, சென்று நீங்கும் ஆவியை மீண்டும் கொண்டு வந்து உயிர் வாழ்கிறேன் என்று சீதை கூறுகிறாள்.

நெறிமுறை எல்லைகளுக்கு உட்படாதவனே! இரக்கத்தைத் தவிர வேறு ஓர் உயிர் இன்றி, தாமரைக் கண்களைக் கொண்டு, கருமேகம் ஒன்று வில் ஏந்தியிருப்பது போல அனைவரது மனதுக்கும் இனியவனான இராமனைத் தவிர எனக்கு வேறு உயிர் என்று தனியாக இல்லை என சீதை இராமன் மீது கொண்ட காதலை வெளிப்படுத்துகிறாள்.     

பழி இது; பாவம் என்று பார்க்கிலை; “பகரத் தக்க
மொழி இவை அல்ல ‘‘ என்பது உணர்கிலை; முறைமை நோக்காய்;
கிழிகிலை நெஞ்சம்; வஞ்சக் கிளையொடும் இன்று காறும்
அழிகிலை என்றபோது, என் கற்பு என்னாம்? அறம்தான் என்னாம்? (7650)

வான் , றத்தின் தோன்றும் சொல்வழி வழுவா; மண்ணின்
ன் , உடம்புக்கு எல்லாம் உயிருள; உணர்வும் உண்டால்;
தா
ன் , பத்துப் பேழ்வாய் தகாதன உரைக்க, தக்க
யா
ன் உளன் கேட்க என்றால், என் சொல்லாய்? யாது செய்யாய்? (7651)

வாசவன், மலரின் மேலான், மழுவலான் மைந்தன், மற்று அக்
கேசவன்
சிவன் என்று இந்தத் தன்மையோர் தன்மை கேளாய்
பூசலின் எதிர்ந்தேன் என்றாய்; போர்க்களம் புக்கபோது என்
ஆசையின் கனியைக் கண்ணின் கண்டிலை போலும், அஞ்சி.
 (7652)

ஊண் இலா யாக்கை பேணி, உயர்புகழ் சூடாது, உன் முன்
நாணிலாது இருந்தேன் அல்லேன்; நவை அறு குணங்கள் என்னும்
பூணெலாம் பொறுத்த மேனிப் புண்ணிய மூர்த்தி தன்னைக்
காணலாம் இன்னும் என்னும் காதலால் இருந்தேன் கண்டாய்.
 (7653)

சென்று சென்று அழியும் ஆவி திரிக்குமால் செருவில் செம்பொன்
குன்று நின்றனைய தம்பி புறக் கொடை காத்து நிற்ப,
கொன்று, நின் தலைகள் சிந்தி, அரக்கர்தம் குலத்தை முற்றும்
வென்று நின்றருளும் கோலம் காணிய கிடந்த, வேட்கை. (7654)

எனக்கு உயிர் பிறிது ஒன்று உண்டு என்று எண்ணலை; இரக்கம் அல்லால்
தனக்கு உயிர் வேறு இன்றாகி, தாமரைக் கண்ணது ஆகி,
கனக் கருமேகம் ஒன்று கார்முகம் தாங்கி, யார்க்கும்
மனக்கு இனிது ஆகி, நிற்கும் அஃது அன்றி வரம்பு இலாதாய்! (7655)
 

இவ்வாறு சீதை கூறி முடித்தவுடன் கண்கள் நெருப்பைக் கக்க, அவள் தன்னைக் கொன்றுவிட்டது போல மான உணர்ச்சி சீண்டப்பட, எமன் போல கோபம் கொண்டான் இராவணன். இராமன் என்னை வென்று உன்னை மீட்ட பின்பு, நீ அவனோடு ஒரே உயிர் என வாழ்வாய் போலும் என்று ஏளனமாக கூறி இடியோசை போல சத்தமிட்டுச் சிரித்தான்.

அரக்கர்கள், மனிதர்கள், தேவர்கள் முதலானவர்களில் யார் எனது சினத்திற்குத் தப்பி பிழைப்பார்கள்? தயரதன் பெற்ற சிறுவனும் தன்னை துளசி மாலை அணிந்த திருமால் என்று கூறி மகிழ்பவனுமான இராமன் உன் மனதில் உள்ளான் என்றால் அவனைக் கொல்வேன். அதன் பின் நீ அவனோடு மகிழ்ச்சியாக வாழ் என்று நக்கலாக கூறுகிறான்.    
  
மென்மையான, நுண்மையான இடையை உடைய பெண்ணே! இலங்கையின் மதிலை வளைத்து, கடலில் பாலம் கட்டி, வாயால் பேரொலி எழுப்பிய குரங்குகளை நினைத்து நீ அகம் மகிழ்ந்தாயானால் அதனால் வியக்க வேண்டாம். என் எதிரில் வரும் அத்தனை குரங்குகளும் விளக்கின் மீது வீழ்ந்த விட்டில் பூச்சிகளாகி விடும்என்கிறான் இராவணன்.

அயோத்தி குலத்தை முற்றிலும் பற்றிக் கொண்டு வந்து தாருங்கள். இல்லையேல் பசுந்தலைகளைக் கொணர்ந்து வந்து தாருங்கள். முயற்சித்து இட்ட செயலை ஆற்றுங்கள் என்று வெற்றி வாள் அரக்கர்களுக்கு கட்டளை இட்டு அனுப்பியுள்ளேன். உனது தந்தை சனகனையும் பற்றிக் கொண்டு வர வெற்றி பெற்ற அரக்கர்களை விரைந்து செல்லுமாறு அனுப்பி உள்ளேன் என்கிறான் இராவணன்.

இராவணன் இவ்வாறு உரைத்தவுடன் மாயம் செய்து தன்னை இங்கே கவர்ந்து வந்தவனுக்கு முடியாதது எதுவுமில்லை என்ற அச்சம் மனதில் தோன்ற நின்று, நின்று பெருமூச்சு விட்டு உயிர் வெதும்பினாள் சீதை. நெருப்பைத் தின்று, தின்று உமிழ்கின்றவர்களைப் போல துன்பங்கள் வந்து தங்குமிடமென ஆனாள்.

கரையே இல்லாத வெள்ளப்பெருக்கு போல கண்ணீர் சீறிப்பாய இங்கே எனக்கு இத்தனை துன்பம் செய்யும் ஆற்றல் மிக்கவர்கள் அங்கே துன்பம் விளைவிக்க சிறியவர்களாகி விடுவார்களா? இல்லை வலியவர்கள் அவர்கள். பொய்ச் செயல்களைச் செய்வதுதான் தற்போது தர்மம் என்றாகிவிட்டது போலும் என்று எண்ணி உள்ளம் நைந்து போகிறாள்.     
         என்றனள்; என்றலோடும், எரி உகு கண்ணன், தன்னைக்
        கொன்று அன மானம் தோன்ற, கூற்று எனச் சீற்றம் கொண்டான்,
        ‘வென்று எனை, இராமன் உன்னை மீட்ட பின், அவனோடு ஆவி
        ஒன்று என வாழ்தி போல் என்று, இடி உரும் ஒக்க நக்கான் (7656).

         இனத்துளார் உலகத்து உள்ளார், இமையவர் முதலினோர், என்
        சினத்துளார் யாவர் தீர்ந்தார்? தயரதன் சிறுவன், தன்னைப்
        புனத் துழாய் மாலையான் என்று உவக்கின்ற ஒருவன், புக்கு உன்
        மனத்துளான் எனினும் கொல்வென்; வாழுதி, பின்னை மன்னோ.(7657)

        “வளைத்தன மதிலை, வேலை வகுத்தன வரம்பு, வாயால்
        உளைத்தன குரங்கு பல்கால் ‘‘ என்று அகம் உவந்தது உண்டேல்,
        இளைத்த நுண்மருங்குல் நங்காய்! என் எதிர் எய்திற்று எல்லாம்
        விளக்கு எதிர் வீழ்ந்த விட்டில் பான்மைய; வியக்க வேண்டா. (
7658)

        கொற்ற வாள் அரக்கர் தம்மை, “அயோத்தியர் குலத்தை முற்றும்
       பற்றி நீர் தருதிர்; அன்றேல், பசுந்தலை கொணர்திர்; பாரித்து
       உற்றது ஒன்று இயற்றுவீர் ‘‘ என்று உந்தினேன்; உந்தை மேலும்,
       வெற்றியர் தம்மைச் செல்லச் சொல்லினென், விரைவின் என்றான். (7659)

         என்று அவன் உரைத்த காலை, ‘என்னை இம்மாயம் செய்தாற்கு
        ஒன்றும் இங்கு அரியது இல்லை என்பது ஓர் துணுக்கம் உந்த,
        நின்று நின்று உயிர்த்து நெஞ்சம் வெதும்பினாள், நெருப்பை மீளத்
        தின்று தின்று உமிழ்கின்றாரின், துயருக்கே சேக்கை ஆனாள்.
 (7660)

இத்தலை இன்ன செய்த விதியினார், என்னை, இன்னும்
அத்தலை அன்ன செய்யச் சிறியரோ? அளியர் அம்மா!
பொய்த்தலை உடையது எல்லாம் தருமமே போலும் என்னாக்
கைத்தனள் உள்ளம், வெள்ளக் கண்ணின் நீர்க்கரை இலாதாள். (7661)
     
      
     
                         
       
                 














No comments:

Post a Comment