'சுமையா' – கனவுப் பிரியன்
நூல் வனம் வெளியீடு
21 சிறுகதைகள் கொண்ட தொகுப்பு
கனவுப்பிரியன் எழுதி நான் வாசிக்கும் முதல் நூல். இவரது மொழிநடை கடினமானதோ
கரடுமுரடானதோ இல்லை. வணிக எழுத்துலகில் அதிகமாகப் புழங்கும் மொழிதான். அதனால் விரைவாக
இந்த நூலை வாசிக்க முடிந்தது.
‘தற்கொலைப் பறவைகள்’ சிறுகதையில் அஸ்ஸாமில் உள்ள ஜதிங்கா என்னும் சிற்றூரில் பறவைகள் தற்கொலை
செய்துகொள்வது, ‘கடல் குதிரை’ சிறுகதையில் உயிரினங்களிலிலேயே ஆண் இனம் கர்ப்பம் தரிக்கும் ஒரே உயிரினமான
கடல் குதிரை, ‘எட்டாவது அதிசயம்’ சிறுகதையில் காரகோரம் என்னும் 1300 கிலோமீட்டர் நீளமான சைனா பாகிஸ்தான்’ஃப்ரண்ட்ஷிப்
ஹைவே, ‘நேற்றைய ஈரம்’ சிறுகதையில் பன்றிக்கறி சாப்பிடுவாள் என்பதற்காக காதலியை தவிர்ப்பது, ‘அது வேறு
ஒரு மழைக்காலம்’ சிறுகதையில் தாத்தா தன் பேரனுக்கு பள்ளி வீட்டுப்பாடத்தில் உதவ நிறைய
தகவல்களைச் சொல்லுதல் இப்படியாக பெரும்பாலான சிறுகதைகள் ஒரு செய்தியையோ அல்லது தகவலையோ
நமக்குச் சொல்ல வலிந்து கற்பனை செய்து எழுதப்பட்டுள்ளன.
இதுபோன்ற செய்திகளையும் தகவல்களையும் சொல்ல ஊடகங்கள்
இருக்கையில் இவற்றை சிறுகதையில் கொண்டு வரவேண்டிய அவசியமென்ன என்ற கேள்வி எழுகிறது.
தகவல்களைச் சொல்வதற்காக எழுதப்பட்ட சிறுகதைகள் என்ற அடிப்படையில் பார்த்தால் ஒரு தொகுப்பில்
21 சிறுகதைகள் என்பது அதிகப்படியாகத் தெரிகிறது. தொகுப்பை வாசித்து முடித்தவுடன் தகவல்கள்
வாசித்த வேகத்தில் நினைவிலிருந்து மறந்து போகின்றன.
‘அன்னக்காடி’, ‘ரசவாதம்’ இரண்டும் சிறுகதைகளாக மாறாமல் வெறும் நினைவுக் குறிப்புகளாக எஞ்சிவிட்டன.
‘அன்னக்காடி’ ஒரு பயண அனுபவத்தையும், ‘ரசவாதம்’ தனக்குப்
பிடித்தமான மாமாவைப் பற்றிய நினைவுகளாகவும் இருக்கின்றன.
‘வியாதிகளின் மிச்சம்’, ‘மண்ணெண்ன குடிச்சான்’, ‘தற்கொலைப் பறவைகள்’, ‘சூது கவ்வும்’ போன்ற சிறுகதைகள் தமிழ் திரைப்படங்களில் வருவது போல சமூகத்திற்து கேடு
விளைவிக்கும் பெரிய மனிதர்களைத் தட்டி கேட்டு கொல்லப்படும் சில கதாபாத்திரங்களைப் பேசுவது
சலிப்பைத் தருகிறது.
இத்தொகுப்பின் பலம் என்று சொல்லக்கூடிய ஒன்று கதைகள் நடக்கும் களம். ஒவ்வொரு
கதையும் வேறு, வேறு நிலப்பரப்பில் நடக்கிறது. நாகர்கோவில், கல்கத்தா, ஈரான், பாகிஸ்தான்
இப்படி பல விதமான களங்கள். வித, விதமான நிலப்பரப்பின் வாழ்க்கையை பார்க்கும் வாய்ப்பு ஒரு வாசகராக நமக்கு
கிடைத்தாலும் அது தொடங்கிய வேகத்தில் சப்பென்று முடிந்துவிடுவது பெரிய பலவீனம் என்றுதான்
சொல்லவேண்டும்.
'நம்பி கோவில் பாறைகள்', 'அன்று சிந்திய ரத்தம்', 'துணிக்கடைக்கார அண்ணாச்சி', 'ஜெனியின் டைரிக் குறிப்புகள்' - நான்கு சிறுகதைகள்
மட்டுமே எனது வாசிப்பிற்கு உவப்பானதாக இருந்தன.
No comments:
Post a Comment