வேலைக்குப்போகும் பெண்கள் பிள்ளை வளர்ப்பில்
சந்திக்கும் சவால்களும், தீர்வுகளும்
'தங்கமீன்' இணைய இதழில் வெளியானது
சில வருடங்கள் சிங்கப்பூரில் வேலை பார்த்த அனுபவத்தின் அடிப்படையில்
இக்கட்டுரையை எழுத துணிந்தேன். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று அந்த
காலத்தில் கேட்டமாதிரி ஆபிஸ் போகும் பெண்களுக்கு பிள்ளைகள் எதற்கு என்று கேட்கமுடியுமா? முடியாது. ஏனென்றால், எண்பது சதவீதம் பெண்கள்
பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்து தரவேண்டும் என்ற ஒரே எண்ணத்தில்தான் பிடித்தோ, பிடிக்காமலோ வேலைக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள். எந்த காரணத்திற்காக வேலைக்கு
போகிறார்களோ அதுதான் அவர்கள் முன் உள்ள பெரிய சவால். அது பிள்ளைகளை நல்லபடியாக
வளர்ப்பது.
சிங்கப்பூரில் உள்ள பிள்ளைகளை தொ.ப.மு, தொ.ப., தொ.ப.பி. என்று மூன்று பிரிவாக
பிரிக்கலாம். என்னங்க கட்டுரை எழுதச் சொன்னால் வரலாறு எழுதுறீங்க என்று சிலர்
முணுமுணுப்பது எனக்கு கேட்கிறது. பொறுங்கள். ‘’பொறுத்தார்
பூமி ஆள்வார்’’. நீங்கள் பூமி ஆளுவிங்களா இல்லையா என்று
எனக்கு தெரியாது. ஆனால் பொறுமையை கடைப்பிடித்தால் உங்கள் பிள்ளைகளை பூமி ஆளும்
மனிதனாக உருவாக்க முடியும். ஆமாம். பிள்ளைகள் வளர்ப்பில் பொறுமையும், நிதானமும் மிக, மிக அவசியம்.
தொ.ப.மு - தொடக்கப் பள்ளிக்கு முன் உள்ள
குழந்தைகள். இந்த காலகட்டத்தில் உள்ள முக்கியமான சவால்கள் உணவு உண்பது, உடல் நலம், ஆரம்ப கல்வி, நல்ல
பழக்கவழக்கங்கள். இந்த வயது குழந்தைகள் அதிக நேரம் இருப்பது பாட்டி,தாத்தாவுடன் அல்லது குழந்தைகள் காப்பகத்தில் அல்லது வேலைக்காரியுடன். பாட்டி,தாத்தாவுடன் இருக்கும் குழந்தைகள் உண்மையில்
அதிர்ஷ்டம் செய்தவர்கள் என்றுதான் சொல்லவேண்டும். குழந்தைகள் காப்பகத்தில் உள்ள
பெரிய பிரச்சனை எளிதில் தொற்றும் வியாதிகள். வேலைக்காரியிடத்தில் வளருபவர்கள் சில
சமயங்களில் வேலைக்காரியின் தீய செயல்களை, விருப்பங்களை பின்பற்றத்தொடங்கிவிடுவார்கள்.
இப்படிப்பட்ட சவால்களுக்கு தீர்வு என்ன என்று யோசித்தால்
மிக முக்கியமாக எனக்கு தோன்றுவது உடல் அளவிலான அரவணைப்பு. வேலை முடிந்து வீடு
வந்தவுடன் உடலும், மனமும் எவ்வளவு சோர்வாக
இருந்தாலும், எவ்வளவு டென்ஷனாக இருந்தாலும் அரைமணி நேரமாவது
அவர்களை கட்டியணைத்து, முத்தமிட்டு,
மடியில் அமரவைத்து பேசிவிளையாடுங்கள். இது அவர்களுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு
உணர்வை தரும். உணவு விஷயத்தில் வேலைக்குப் போகும் அன்னைகளுக்கும் ஆலோசனை
சொல்லவேண்டிய அவசியமே இல்லை. அதை அவர்கள் மிகச்சரியாக செய்கிறார்கள், செய்வார்கள் என்பதுதான் உண்மை. உடல் நலம் சரியில்லை என்றால் உங்கள்
வேலைப்பளுவை காரணம்காட்டி கைவைத்தியம் செய்துவிட்டு மருத்துவரிடம்
அழைத்துச்செல்வதை தயவுசெய்து தள்ளிப்போடாதீர்கள். விடுப்பு எடுத்து அவர்களுடன் இருந்தீர்களானால்
உங்கள் அருகாமையே நோயை விரைவில் விரட்டிவிடும். குழந்தைகள் வேலைக்காரியிடமோ, குழந்தைகள் காப்பகத்திற்கோ போவதற்கு பயந்தால் அவர்களை அதட்டி மிரட்டாமல்
பிரச்சனை என்ன என்று கண்டுபிடியுங்கள். பிரச்சனை வேலைக்காரி அல்லது குழந்தைகள்
காப்பகம் என்று உணர்ந்தால் உடனே அதை மாற்ற முயற்சியுங்கள். நல்ல பழக்கவழக்கங்களை
சொல்லித்தரும்போது கண்டிப்புடன் இருங்கள். அவர்களுடன் இருக்கும் கொஞ்ச நேரத்திலும்
ஏதாவது பேசிக்கொண்டே இருங்கள். இது அவர்களிடம் சொல்வளத்தையும், மொழிவளத்தையும் அதிகரிக்கும்.
தொ.ப. - தொடக்கப் பள்ளி குழந்தைகள். இது இன்னும் அதிக
சவால்கள் உள்ள பருவம். கல்வியை பொறுத்தவரை பணம் அதிகம் செலவழித்து பெரிய பள்ளி, ஒவ்வொரு பாடத்திற்கும் தனிவகுப்பு என்று அனுப்பினால் மட்டும்
போதாது. நீங்கள் வேலைவிட்டு வந்தவுடன் அவர்களின் வீட்டுபாடங்களில் உதவி செய்யலாம்.
ஏதாவது ஒரு புத்தகத்தை சேர்ந்து படிக்கலாம். அவர்கள் பள்ளியில் கொடுக்கும்
நடவடிக்கைகளில் படங்களை வெட்டுவது, ஒட்டுவது, வரைவது, கணினியில் குறிப்புகள் எடுத்து கொடுப்பது
என உங்கள் பங்கை ஆற்றலாம். அதற்காக எப்போதும் படிப்பு,
படிப்பு என்று அவர்களை படுத்தாமல் அன்று பள்ளியில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை
பற்றி, அவர்களின் நண்பர்களை பற்றி,
அவர்கள் செய்த குறும்புகளை பற்றி கேட்கலாம். தயவுசெய்து நீங்கள் தொலைக்காட்சிக்கு
முன் அமர்ந்து கொண்டு அவர்களை போய் படி என்று அதட்டாதீர்கள்.
இந்த வயது குழந்தைகளுக்கு எது செய்தாலும் சிறிது நேரத்தில் ‘’போர்’’ (இந்த வார்த்தையை
கண்டுபிடிச்சவன் மட்டும் என் கைக்கு கிடைத்தால்........) அடிக்க ஆரம்பித்துவிடும்.
ஆனால் கணினி விளையாட்டு, கார்ட்டூன் எல்லாம் ஒருபோதும் போர்
அடிக்காது. முடிந்தவரை இவற்றை தவிர்க்க அவர்களை பழக்கப்படுத்தலாம். சனி, ஞாயிறுகளில் அவர்களோடு சேர்ந்து வெளிப்புற நடவடிக்கைகளில் உதாரணத்துக்கு
நீச்சல், பாட்மிண்டன், கால்பந்து என
ஈடுபடலாம். அலுவலகத்தில் பணிபுரியும் நண்பர்களின் குழந்தைகளோடு உங்கள் பிள்ளைகளை ஒப்பிடுவதை
அறவே தவிர்த்துவிடலாம். நேரம் கிடைக்கும்போது ஐந்தாம், ஆறாம்
வகுப்பு பிள்ளைகளுக்கு அவர்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களையும், இனக் கல்வியையும், பெண் குழந்தைகளுக்கு
விரும்பத்தகாத தொடுதல்களையும் புரியும்படி பொறுமையாக எடுத்துச்சொல்லலாம். எல்லாவற்றிற்கும்
மேலாக உங்கள் வீட்டு முகவரி, அலுவலக முகவரி, கைபேசி எண் மற்றும் அவர்களது இரத்தப்பிரிவு ஆகியவற்றை அவர்களுக்கு
சொல்லிக்கொடுப்பது இக்கட்டான சூழ்நிலையில் உதவியாக இருக்கும்.
தொ.ப.பி. - தொடக்கப் பள்ளிக்கு பின். இது
மிக, மிக ஆபத்தான காலகட்டம். இவர்கள் பதின்மவயதுக்குள் அடி எடுத்து
வைப்பதால் நிறைய மாற்றங்களை உடலளவிலும், நடவடிக்கைகளிலும் எதிர்பார்க்கலாம். அறிவுரை சொல்வதை
அறவே விரும்பாத வயது. கட்டுப்பாடான சுதந்திரத்தை கொடுக்கவேண்டிய வயது. பெற்றோர்களைவிட
நண்பர்களை அதிகம் நம்பும் வயது. நீங்கள் வேலைக்குச் செல்வதால் இவர்களின் நண்பர்களை
அவசியம் தெரிந்துவைத்துக்கொள்வது நல்லது. அதற்காக அலுவலகத்திலிருந்து மணிக்கு
ஒருமுறை கைபேசியில் அழைத்து உளவு பார்க்காதீர்கள். அது வேறு மாதிரியான எதிர்மறை
விளைவுகளை ஏற்படுத்திவிடும். நம் பிள்ளையை நாம் நம்பாவிட்டால் வேறு யார்
நம்புவார்கள். இந்த வயதில் இயற்கையாக வரும் ஆண் பெண் உறவுகளை சந்தேக கண்ணோடு
பார்க்காதீர்கள்.
மூன்று காலகட்டத்திலும் வித, விதமான
பிரச்சனைகள். சிலவற்றை நான் குறிப்பிட மறந்திருக்கலாம். இதுவரை நான் சொன்ன
பிரச்சனைகள் அனைத்தும் எல்லா தாய்மார்களுக்கும் பொதுவானவைதான். ஆனால்
வேலைக்குப்போகும் பெண்களுக்கு இவை சவால்களாக மாற முக்கிய காரணங்கள் – நேரமின்மை, வேலைப்பளு (வீட்டிலும், அலுவலகத்திலும்), டென்ஷன், கணவரின் ஒத்துழைப்பு இல்லாமை, தனி பெற்றோராக இருப்பது, நியூக்ளியர் ஃபேமிலி.
வேலைக்குப்போகும் பெண்கள் அவசியம் கருத்தில் கொள்ளவேண்டியது
என சிலவற்றை பட்டியலிடலாம்.
- நேரத்தை நிர்வகிக்கும் திறமை
- பிள்ளைகளோடு தினமும் நேரம் செலவழிப்பது
- நம் டென்ஷனை பிள்ளைகளிடம் காட்டாமல் இருப்பது
- அலுவலக வேலையை வீட்டிற்கு கொண்டு வருவதை தவிர்ப்பது.
- அலுவலக நண்பர்களின் குழந்தைகளோடு உங்கள் பிள்ளைகளை ஒப்பிடாமல் இருப்பது.
- சம்பாதிக்கின்ற காரணத்தால் அளவுக்கு மீறிய பொருளாதார சுதந்திரம் கொடுப்பது.
- கணவருடன் கலந்தாலோசித்து வேலைகளை பங்கிட்டுகொள்வது
- வாரத்தில் ஒருநாள் உங்களுக்கென்று சிறப்பு நேரம் ஒதுக்கி உங்களுக்கு பிடித்ததை செய்வது
- அண்டை வீட்டுக்காரர்களுடன் நட்புறவை வளர்த்துக்கொள்வது
- பிள்ளைகள் ஏதாவது சாதிக்கும்போது தட்டிக்கொடுத்து பாராட்டுவது
தொ.ப.மு. காலகட்டத்தில் 75 சதவீதம் தாயாகவும், 25 சதவீதம்
ஆசானாகவும் தொ.ப. காலகட்டத்தில் 50 சதவீதம் தாயாகவும், 50 சதவீதம்
ஆசானாகவும் தொ.ப.பி. காலகட்டத்தில் 50 சதவீதம் தாயாகவும், 50 சதவீதம்
தோழியாகவும் நமது பங்கு, பிள்ளைகள் வளர்ப்பில் இருந்தால் அவர்களது வளர்ச்சிக்கு நல்லது.
சமீபத்தில் எனது தோழி அவளது குழந்தையை என்னிடம் ஒரு வாரம் விட்டுவிட்டு வேலைக்குச்
செல்லவேண்டிய சூழ்நிலை. அவள் வேலை பார்ப்பது குழந்தைகள் காப்பகத்தில். ‘’ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்’’ என்பது இதுதானோ!!
இந்த பிரச்சனையே வேண்டாம் என்று வேலையை
விட்டுவிட்டு வீட்டில் இருக்கும் என்னிடம் என் பிள்ளை ‘’என் எல்லா பிரெண்ட்ஸோட அம்மாவும் வேலைக்கு போறாங்க. நீ
மட்டும் ஏம்மா வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்னை படி, படின்னு
பாடாய் படுத்துறே’’ என்று கேட்டதால் இப்போது நானும் வேலை
தேடிக்கொண்டிருக்கிறேன். சவால்களைச் சந்திக்க தயாராகிக்கொண்டிருக்கிறேன். நீங்களும் சவால்களை
சமாளித்து உங்கள் பிள்ளைகளை சாதனையாளனாக உருவாக்க வாழ்த்துக்கள்!!
No comments:
Post a Comment