
கண்ணகி - சு.தமிழ்ச்செல்வி - உயிர்மை
பதிப்பகம்
'சிங்கப்பூர் கிளிஷே' இணைய இதழில் வெளியானது
இந்த குறுநாவலை நூலகத்திலிருந்து எடுக்க என்னை
தூண்டியவை மூன்று. அவை நாவலின் பெயர், பெண் எழுத்தாளர், உயிர்மை பதிப்பகம். எழுத்தாளர், இந்த நாவல் அவர் சந்தித்த மீன் விற்கும் ஒரு
தலித் பெண்மணியின் கதை என்று கூறுகிறார். அந்த வகையில், இந்த நாவல் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த
ஒரு பெண்ணிற்கு கற்பு என்கிற பண்பாட்டு கூறு எவ்வளவு அற்பமாக இருக்கிறது என்பதை
மிக இயல்பாக, எந்த வித கற்பனையும் இல்லாமல், அழகான கீழ்த்தஞ்சை வட்டார வழக்கில்
எடுத்துரைக்கிறது.
நாவலின் கதாநாயகியான கண்ணகியின் இளமைப்பருவம்
அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது. பதினேழு தாய்மாமன்களை கொண்ட அவள், தாத்தவின் அன்புக்கு உரிய பேத்தி. அவளது
தாத்தவும், அப்பாவும் மாட்டுத் தரகு தொழில் செய்பவர்கள். கண்ணகி பதினோறாவது
வயதில் பெரிய மனுஷி ஆகிறாள். பதிமூணாவது வயதில் வீட்டின் முன்பு மின்சார கம்பிகளை
புதைக்கும் வேலைக்காக வரும் ஆசைத்தம்பியின் மீது ஆசை கொண்டு அவனோடு ஓடிப்போகிறாள்.
தாத்தா, மாமன்கள், பெற்றவர்கள் அனைவரும் அழைத்தும் வர
மறுக்கிறாள்.
எல்லோரையும் எதிர்த்துக்கொண்டு வாழ்க்கையை
தொடங்கியவள் நாளாக, நாளாக
தனது தவறை எண்ணி வருந்துகிறாள். ஆசைத்தம்பியிடம் அடிபட்டு,
உதைபட்டு, உலக்கை அடி வாங்கி இரண்டு முறை அவளது குழந்தைகள்
குறைமாதத்தில் இறந்து பிறக்கின்றன. அவள் கண்முன்னே ஆசைத்தம்பி மேலும் இரண்டு
பெண்களை மணம் செய்து வீட்டிற்கு கூட்டி வருகிறான். அதனால் அவன் மீதான் கோபமும்,
வன்மமும் கண்ணகிக்கு அதிகரிக்கிறது. அவனை பழிவாங்க ஏதாவது செய்யவேண்டும் என்று
நினைக்கும் அவளால் செய்யமுடிந்தது வீட்டை விட்டு வெளியேறுவதுதான. மீண்டும்
அம்மா வீட்டிற்கு செல்லும் அவளுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. அவள் அம்மா அவளை ஏற்றுக்கொள்ள
மறுக்கிறாள். கால்போன போக்கில் செல்லும் அவள் திவ்யநாதனை சந்திக்கிறாள். அவனோடு
ஏற்பட்ட தொடர்பில் ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகிறாள். ‘’குழந்தைக்கு
நான்தான் அப்பா என்று சொல்லிவிடாதே’’ என்று திவ்யநாதன் சொன்னவுடன் அவன் ஒரு
முதுகெலும்பில்லாத கோழை என்பதை புரிந்துகொள்கிறாள். ஆண் குழந்தை பாரதியை அனாதை
ஆசிரமத்தில் சேர்த்துவிட்டு பணிப்பெண் வேலைக்காக சிங்கப்பூர் பயணமாகிறாள். குழந்தையின்
அப்பாவாக கணவன் ஆசைத்தம்பியின் பெயரை ஆசிரமத்தில் பதிவு செய்கிறாள்.
சிங்கப்பூர் சென்றவளுக்கு அடுத்த அதிர்ச்சி. அவளை
அழைத்துச் செல்லும் அன்சார் அவளை தாலி கட்டாத மனைவியாக வாழச் சொல்லி
வற்புறுத்துகிறான். முதலில் மறுத்து, பின்பு அவன்
விருப்பபடி வாழத்தொடங்குகிறாள். இரண்டு வருடங்களுக்கு சென்றவள் பதினான்கு
வருடங்கள் அன்சாருடன் இருந்து விடுகிறாள். அன்சார் அவளை மிக கண்ணியமாக
நடத்துகிறான். தன்னுடனேயே இருந்து விடுமாறு கண்ணகியை வேண்டுகிறான்.
கண்ணகிக்கு ஆண் குழந்தை பிறந்ததையும்,
சிங்கப்பூரில் வசதி, வாய்ப்பாக இருப்பதையும் கேள்விப்படுகிறான் அவளது கணவன்
ஆசைத்தம்பி. அனாதை ஆசிரமத்திலிருந்து பாரதியை அழைத்துவந்து தன்னுடன் வளர்த்து வருகிறான்.
பாரதி தனக்கு பிறந்தவன் என்று அவன் நம்புகிறான். பாரதியின் மூலம் கண்ணகியோடு தனது
உறவை புதுப்பித்துக்கொள்ள ஆசைத்தம்பி விரும்புகிறான். பாரதியை கடிதம் எழுத வைத்து கண்ணகியை
இந்தியாவுக்கு வரவழைக்கிறான். மகன் பாரதி அழைத்ததால் அன்சார் வற்புறுத்தியும் சிங்கப்பூரில்
தங்காமல் இந்தியாவுக்கு திரும்புகிறாள்.
கண்ணகியை எல்லா உறவுகளும் பொருளாதார தேவைகளுக்காக
பயன்படுத்திக்கொள்கின்றன. அவள் சிங்கப்பூரிலிருந்து கொண்டுவந்தபணம்,
பொருட்கள் அனைத்தையும் கணவன், மகன், கணவனின் மற்ற மனைவிகளுக்கு பிறந்த பிள்ளைகளுக்காக
செலவிடுகிறாள். மகன் பாரதியோ அவளோடு பேசுவதே இல்லை. கணவன் ஆசைத்தம்பி நோய்வாய்ப்பட்டு
இறக்கும் தருவாயில் கூட கண்ணகியிடம் ‘’நான் இருந்த பிறகும்
நீ பத்தினியாக இருக்கவேண்டும்’’ என்று சத்தியம் வாங்கிக்கொண்டு இறந்து போகிறான்.
அன்சார் திருமணம் ஆகி குடும்பத்துடன் சிங்கப்பூரில்
வசித்து வருகிறான். கண்ணகி மீண்டும் அன்சாருடன் தொலைபேசித் தொடர்பு
வைத்துக்கொள்கிறாள். ஏதாவது தொழில் தொடங்கலாம் என்று எண்ணும் கண்ணகி மீன் விற்கும்
தொழிலை தேர்ந்தெடுத்து அதில் நான்கைந்து பெண்களுக்கு வேலை கொடுக்கும் அளவிற்கு முன்னேறுகிறாள்.
நாவலின் இறுதி கட்டமாக, மகன் பாரதி வீடு கிரகப் பிரவேசத்துக்கு கண்ணகியை
அழைக்கிறான். மகன் பேசியவுடன் அவளுக்கு மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது. கிரகப்பிரவேசத்தன்று
கிளம்பும் அவளுக்கு அன்சாரிடமிருந்து ஃபோன் வருகிறது. சிங்கப்பூரிலிருந்து அவன்
திருச்சி வருவதாகவும் அவளை அங்கு வரச்சொல்லியும் கூப்பிடுகிறான். கண்ணகி
பக்கத்தில் இருக்கும் தோழியிடம் ‘’நீ பாரதி வீட்டு கிரகப்பிரவேசத்துககு போ. நான் திருச்சி
போகிறேன்’’ என்று சொல்லிவிட்டு கிளம்புகிறாள். அதற்கு
அந்த தோழி ‘’பாரதி கோபித்துக் கொள்வான்’’
என்று சொன்னவுவுடன் கண்ணகி கீழ்க்காணுமாறு சொல்லுவதாக நாவல் முடிகிறது.
“அவன் (பாரதி), அவ பொண்டாட்டி புள்ளிவளோட சந்தோசமா இருக்குறான்... நான் 13 வயசில
அறியா புள்ளயா பின்னாடி வந்தப்பகூட என்ன பாவமேன்னு
நெனச்சிப்பார்க்காம ஏகப்பட்ட துரோகம் பண்ணின எம்புருசன் அவன் செத்த பிறகும் நான் பத்தினியா இருந்து அவம் பேர காப்பாத்தனுமுன்னு
சாவக்குள்ளக் கூட சத்தியம்
வாங்கிக்கிட்டு சாவுறான். நான் எதுக்காக அவம் பேர காப்பத்தணும்? தாலி கட்டாத
பொண்டாட்டியா இருந்தப்பவும் காசுக்கு முந்தான விரிச்ச வேசியா இருந்தப்பவும் என்ன ஒரு பொட்டச்சியா நெனச்சி புரிஞ்சி நடந்துக்கிட்ட நல்ல
மனுசன் அவரு(அன்சார்). அவரு மொகத்த
நான் இப்பக்கூட பாக்காம வுட்டன்னா வேற எப்ப பாக்குறது?”
குறிப்பிட்டு சொல்லவேண்டிய சில
கருப்பண்ணசாமி
சத்தியமா இந்த நாதியத்தப்பயலுக்கு
(கணவன் ஆசைத்தம்பி) நான் புள்ள பெத்துக்குடுக்க மாட்டன். இவன் பேருசொல்ல புள்ள
பெத்து குடுத்துரவனா நான் கள்ளிப்
பால குடிச்சாவது கருவுலயே அழிச்சிடமாட்டன்?
ஆசவச்சிப் பெத்துக்கிர்றதுதான் புள்ள. அரிப்பெடுத்து
பெத்துக்கிர்றத்துக்கெல்லாம் பேரு புள்ளயில்ல
ஆம்புளன்னா அவுத்துக்கிட்டு அலயலாம், பொட்டச்சின்னா மட்டும் பூட்டிவச்சிக்கிட்டு கெடக்கணும்
இதுதான் அவனுவ சொல்ற ஞாயம்
சத்தியமாவது பீயாவது. பொட்டச்சின்னா என்னான்னு நெனச்சிட்டான் ஓம்புருசன். ஏதோ
மரியாதக்கிக் கட்டுப்பட்டு மண்ணள்ளித் தின்னுகிட்டு கெடக்குறமேத் தவிர நமக்குன்னு ஒரு ஞாயம் இல்லாமயா இருக்கு.
அதெல்லாம் என்னான்னு தெரிஞ்சா
தாங்குவானுங்களா இவனுங்கல்லாம்
இங்க யாரு செய்றது ஞாயம்? அவங்க
அவங்களுக்கு அவங்க செய்றதுதான் ஞாயம்
மேலே சொன்ன எழுத்துக்கள், பெண்களின் சுயத்தை
மறுக்கும், மறுதலிக்கும் ஆணாதிக்க ஆணவத்திற்குக் கிடைக்கும் சவுக்கடியாக அமைகிறது.
எனது பார்வையில் சில
சிலப்பதிகார கண்ணகியைப் போலவே சிறு வயதிலேயே திருமணமாகிக் கணவனால் வஞ்சிக்கப்பட்டிருந்தாலும், கோவலன் மனைவி கண்ணகியைப் போலல்லாமல், தன் கணவன் செய்வது துரோகம், தவறு என்று உணரவும், கோபப்படவும், தண்டிக்கவும் முயன்றிருப்பது அவளது
சுயத்தை எடுத்துரைக்கின்றது.
‘’நாம் என்ன தவறு செய்தோம்? ஆசைத்தம்பி உறவினருக்கும் ஊருக்கும் தெரிந்தே பல தவறுகள் செய்திருப்பினும்
அவனை யாரும் தவறாக நினைக்கவில்லை. இன்றைக்கும்
குடும்பத்தில் தலைவனாய் இருந்துகொண்டு அதிகாரம் செலுத்துகிறான். அவனை விட நான் என்ன மோசமாய்
நடந்துவிட்டேன். திமிர் எடுத்தா வீட்டை விட்டுப்போனேன். தன் தாய், மகன்
உட்பட அனைவரும் தன்னைத் தவறாகவே பார்க்கிறார்களே என எண்ணிப் பார்க்கிறாள். தாயே தன்னிடம் கால தூக்கிக்கிட்டு அலஞ்சதெல்
லாம் போதும். ஒழுங்கா புருசங்கூட
இருந்து அடங்கி ஒடுங்கி குடும்பம் பண்ணு என்றவுடன், எப்போதுதான் நான் புருசனுக்கு அடங்காமல் நடந்துகொண்டிருக்கிறேன் என்று நினைத்துப்
பார்க்கிறாள்’’. இந்நிலை சமூகத்தின் ஒருதலைப்பட்ச பார்வையை
வெளிப்படுத்துகிறது. கண்ணகியின் செயலைக் கண்டிக்கும் சமூகமும் குடும்பமும் ஆசைத்தம்பியின் செயலைத் தவறு
என்று கூறக்கூட முன்வராமல்
அவனது அதிகாரத்தை ஏற்றுக்கொண்டும் ஆதரித்தும் வளர்க்கிறது.
தன் மனைவி தன்னுடன் வாழும்போதே பல பெண்களை மணந்து கொண்டும் அருகிலிருக்கும்போதே வேறொரு
பெண்ணுடன் நெருங்குவதுமாக இருந்த ஒரு ஆண், தான் இறந்த பின்னும் தனக்குத் துரோகம் செய்யாமல் இருக்க
வேண்டும் என்று சத்தியம் வாங்கிக்கொள்வது, தன் கௌரவத்திற்கும் ஆசைக்கும், வாரிசிற்கும் உரிய கருவி மட்டுமே பெண் என்று நினைத்துச் செயல்படும் ஆண்
ஆணவத்தின் உச்சகட்ட செயலாக வெளிப்படுகின்றது.
பெண்ணியம்
என்பது படிப்பு, ஆய்வு என்பது
மாறி சமூக, பொருளாதார, அரசியல், கலாச்சார,
சமய, பண்பாட்டு நிலைகளில் தமது வாழ்வு நிலை எவ்வாறு இருக்கிறது என்கிற பெண்களின் விழிப்புணர்வாக மாறிக்கொண்டிருக்கிறது
என்பதை இந்த நாவல் தெளிவாக விளக்குகிறது.
இந்த விழிப்புணர்வால்
கற்பு, புனிதம், தீட்டு என்று
சமூகம் கட்டமைத்திருந்த மதிப்பீடுகளை தூக்கி எறிந்துவிட்டு பெண்கள் அவர்கள்
சுயத்துடன் இயங்குகிறார்கள்.
கண்ணகியின் யதார்த்தமான வாழ்க்கைப் பாதையில் கற்பு என்ற சொல் அவளது காலுக்கடியில் மிதிபட்டு
சிதைந்து காணாமல் போகிறது. கண்ணகி நாவல் ஆணின் அதிகாரத்திற்கு, அதிகார எதிர்பார்ப்பிற்கு, கௌரவத்திற்குப் பதிலடி கொடுப்பதாக
அமைந்துள்ளது.
இந்த நாவல் பின்நவீனத்துவம் என்ற வகைக்குள் அடங்குவதாக
எனக்குப்படுகிறது. பெண்ணியத்தையும், தலித்தியத்தையும் ஒருசேர நாவலுக்குள் கொண்டு வந்ததன்
மூலம் இது சாத்தியப்படுகிறது.
‘’எனது
எழுத்துக்கள் யதார்த்த வகையாக புரிந்துகொள்ளப்பட்டால் கூட அது ஒரு லட்சிய யதார்த்த
வகையாகத்தான் தெரிகிறது. அந்த லட்சிய யதார்த்தம் விரைவில் வசப்படவேண்டும்’’–
இது எழுத்தாளர் சு.தமிழ்ச்செல்வியின் கருத்து. இதன்படி பார்த்தால் இந்த நாவலின்
முடிவும் சற்று லட்சிய யதார்த்தமாகத்தான் எனக்குப் படுகிறது.
ஒரு படித்த பெண்ணான நான் கண்ணகியின் இடத்தில் இருந்தால்
இப்படி ஒரு வாழ்க்கையை மேற்கொள்வேனா என்பது ஒரு பெரியகேள்விக்குறியாக எனது மனதில்
ஓடிக்கொண்டிருக்கிறது. படித்து, சுவைத்து, அனுபவித்து,
அலசி பார்க்கவேண்டிய நாவல்!
No comments:
Post a Comment