Thursday, October 20, 2016

A CONVENIENT MARRIAGE - COLIN LEE (First Prize winner in Golden Point Award Competition in year 2007 organized by the National Arts Council)

CHANGING TIMES THROUGH SINGAPORE STORIES அதாவது சிங்கப்பூர் கதைகளின் வழியாக மாறிவரும் காலங்கள் என்ற கருப்பொருளின் அடிப்படையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய உரை வடிவம். 

இலக்கியம் எப்போதும் காலத்தை பிரதிபலிக்ககூடிய காலக்கண்ணாடியாக இருக்கிறது. அப்படி இருந்தால்தான் அது இலக்கியம் என்றழைக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் வாழ்ந்த மக்களின் சமூக, அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார கூறுகளைத் தன்னகத்தே கொண்டு எழுதப்படும் இலக்கியங்கள் பிற்காலத்தில் செவ்வியல் இலக்கியங்கள் என்று போற்றப்படுகின்றன. உதாரணத்திற்கு நம் சங்க இலக்கியங்கள் பண்டைய தமிழர்களின் வாழ்வை பறைசாற்றும் காலக்கண்ணாடியாக, காலப்பெட்டகமாக இன்றும் விளங்குகின்றன.

அந்த வகையில் சிங்கையை எடுத்துக்கொண்டால், அடிப்படையில் சிங்கப்பூர் ஒரு குடியேறிகளின் நாடு. மேலும் பல இனம், மதம், கலாச்சாரம் கொண்ட மக்களை உடைய. 1819 ஆம் ஆண்டில் சிறு மீன் பிடி கிராமமாக இருந்த சிங்கப்பூர் 2015 ஆம் ஆண்டில் உலக அரங்கில் வளர்ந்த நாடாக திகழ்கிறது. இந்த இடைப்பட்ட கால கட்டத்தில் சிங்கப்பூர் பலவிதமான சமூக, அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார மாற்றங்களை சந்தித்திருக்கிறது. இந்த மாற்றங்களை எல்லாம் அவதானித்து, உள்வாங்கி இலக்கியவாதிகள் தங்கள் படைப்புகளில் வெளிப்படுத்துகிறார்கள்.  

சிங்கப்பூர் கதைகள் – காலக்கண்ணாடி என்ற கருப்பொருளின் அடிப்படையில் பேச எடுத்துக்கொண்டிருக்கும் கதை ஒரு சீனக்கதை. ஆங்கிலத்தில் A CONVENIENT MARRIAGE.  தமிழில் அனைவரையும் மகிழ்வித்த திருமணம். இதை எழுதியவர் COLIN LEE (First Prize winner in Golden Point Award Competition in year 2007 organized by the National Arts Council). 2014 ஆம் ஆண்டில் வாசிப்போம் சிங்கப்பூர் இயக்கத்தில் காலம் கடந்து நிற்கும் படைப்பிலக்கியங்கள் என்ற கருப்பொருளில் தொகுக்கப்பட்ட சிறுகதைகளில் இதுவும் ஒன்று.   

இந்த சிறுகதை நடக்கும் காலகட்டம் 1956 ஆம் ஆண்டில் இருந்து 1965 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டம். இது சிங்கப்பூர் வரலாற்றில் மிக முக்கியமான காலகட்டமும் கூட. இந்த காலகட்டத்தில் நடந்த அரசியல் மாற்றங்களும் கதையும் தண்டவாளக் கம்பிகளைப் போல இணைந்து பயணிக்கின்றன. 

கதைச்சுருக்கம்

ஆசிரியர் கதையை இப்படித்தான் தொடங்குகிறார்:

1956 ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் டேவிட் மார்ஷல் ஆங்கிலேயர்களுடன் ஒப்பந்தம் பேசிக்கொண்டிருக்கும் அதே வேளையில் டுரியான் கிராமத்தில் ஒரு முக்கிய கூட்டமும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த கிராமத்தில் எதற்கு இந்த கூட்டம்? அந்த கூட்டத்தின் பிண்ணனிதான் கதை.

ஆங்கில பள்ளியில் படித்த சூ பன் என்ற இளம்பெண் யூலி என்ற இளைஞனை காதலிக்கிறாள். பையனின் அப்பா பன்றி பண்ணையும் காய்கறி பண்ணையும் வைத்திருக்கிறார். அவர் கிராமத்தில் அனைவருக்கும் உதவகூடிய மனிதர். பெண்ணின் அப்பா காப்பி கலக்குவதில் வல்லவர். பிரிட்டிஷ்காரர்கள் இவரது காப்பியை அருந்துவதற்காகவே அந்த கடைக்கு வருவார்கள். இப்படி காப்பி கலக்குபவர்தான் தொலைநோக்கு பார்வையோடு தன் மகள் ஆங்கில கல்வியைக் கற்க வேண்டும் என்று அவளை ஒரு கிறிஸ்துவப் பள்ளிக்கு அனுப்பினார். இருவரது குடும்பமும் கிராமத்தில் மரியாதைக்குரிய குடும்பங்களாக இருந்தன.. சூ பன் மற்றம் யூலி காதலுக்கு குடும்பத்தினர் பச்சைக்கொடி காட்டுகிறார்கள்.

பெண்பார்க்கும் படலம் நடக்கிறது. மரபுப்படி மாப்பிள்ளை வீட்டார் ஒரு புரோகிதரை அழைத்து வரவேண்டும். ஆனால் மரபுக்கு எதிராக யூலியின் அப்பா தன் மனைவி மகனுடன் மூன்று பருமனான நபர்களை அழைத்து வருகிறார். பேச்சு வார்த்தை நடக்கிறது. பெண்ணின் அப்பா   தான் நான்கு பொருள் கொண்ட அன்பளிப்பு தருவதாகவும் அதற்குப் பதிலாக மாப்பிள்ளை வீட்டார் டிராகன் பீனிக்ஸ் உணவகத்தில் முன்னூறு பேருக்கு உணவும் ஆறு வாட்டிய பன்றிகளும் தரவேண்டும் என்று கூறுகிறார். தாம் சிரமப்பட்டு வளர்த்த பன்றிகளை தருவதற்கு பையனின் அப்பா தயங்குகிறார். திருமணம் முடிப்பதற்கு இவ்வளவு செலவானால் இனி யாருக்கும் திருமணம் நடக்காது என்று மனதுக்குள் பொருமும் அவர் பன்றிகளை உண்ணும்போது ஊர் மக்கள் தம்மை வாயார புகழ்வார்கள் என்பதை அறிந்தடன் பன்றிகளை கொடுக்க ஒத்துக்கொள்கிறார். அப்போது மாப்பிள்ளையின் தாய் பண்ணையில் இருக்கும் சிறிய பன்றிகளை கொடுத்தால் போதும் என்று மனதுக்குள் நினைத்துக்கொள்கிறாள்.    

அப்போதுதான் மணப்பெண் இரண்டு பெரிய குண்டுகளை போடுகிறாள். சிவப்புநிற திருமண ஆடையை அணியமாட்டேன், மேற்கத்தியபாணியில் இருக்கும் வெள்ளை நிற உடைதான் அணிவேன் என்பது முதல் குண்டு. நான் படித்த பள்ளியின் முதல்வர் பாதிரியார் மைக்கல்தான் திருமணத்தை நடத்தவேண்டும் என்பது இரண்டாவது குண்டு. இதைக்கேட்ட அனைவரும் அதிர்ச்சியடைகிறார்கள். ஆக மொத்தத்தில் டுரியான் கிராமத்தில் நடந்த கூட்டமும் லண்டனில் டேவிட் மார்ஷல் கலந்திருந்த கூட்டமும் ஒரே முடிவை அடைந்தன. அதுதான் தோல்வி.

மரண காரியங்களுக்கு பயன்படுத்தும் வெள்ளை உடையை அணியலாமா? நாங்கள் உயிரோடு இருக்கும்போது மூன்றாம் மனிதர் அதுவும் ஓர் ஆங்கிலேயர் ஏன் திருமணத்தை நடத்த வேண்டும் என்று இரண்டு வீட்டிலும் கேள்விகள் எழுகின்றன. காலம் மாறிவிட்டது. புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் பழங்கால சீனாவில் இல்லை. இப்போது மரபுகள் மாறிவிட்டன என்று சூ பன் வாதிடுகிறாள்.

இறுதியில் பாதிரியார் மைக்கேல் இரண்டு குடும்பங்களுடன் பேசுவது என்று முடிவாகிறது. சிங்கப்பூரில் ஜப்பானியர்கள் ஆட்சி முடிந்து மீண்டும் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு வந்தபோது சிங்கப்பூருக்கு வந்தவர் பாதிரியார் மைக்கேல். இங்கேயே பல ஆண்டுகள் இருந்ததால் பல இனத்தவரின் மொழியை சுமாராக கற்றுக்கொண்டார். பாதிரியாரோடு பேச இரண்டு குடும்பங்களும் மீண்டும் சந்தித்தபோது சீனர் ஒருவர் சிங்கப்பூரின் பிரதமராக நியமிக்கப்பட்டிருந்தார். அப்போது சிங்கப்பூருக்கு விரைவில் சுதந்திரம் கிடைத்துவிடும்,  ஆங்கிலேயர் வெளியேறிவிட்டால் யார் தங்களை காப்பாற்றுவது, ஆங்கிலேயர்கள் வெளியேறினால் பாதிப்பு ஒன்றுமில்லை, நம்மை நாமே தற்காத்துகொள்ள வேண்டும் என்று பலவிதமான பேச்சுகள் உலாவிக்கொண்டிருந்தன. இன்னும் ஒரு மாதத்தில் ஆங்கிலேயர் வெளியேறிவிடுவர் என்று நிறைய பேர் பணம் கட்டு போட்டியிட்டு தோற்றனர். ஆக கிராமத்தில் இரண்டு பந்தயங்கள் நடந்துகொண்டிருந்தன. ஒன்று ஆங்கிலேயரின் வெளியேற்றம் பற்றியது. மற்றொன்று சூ பன் யூலி திருமணம் பற்றியது.      

மாப்பிள்ளையின் அப்பா மொழிபெயர்ப்பாளராக புது டில்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் பயின்ற சண்முகத்தை நியமிக்கிறார். உங்கள் கலாசாரத்தில் ஏன் சின்ன பிரச்சினை பெரிதாகிவிட்டது? இந்தியாவில் முகம் பார்க்காமலே இருவரும் திருமணம் சம்மதிப்பர். அவர்களுக்கு கொடுக்க வேண்டிய வரதட்சணையை கொடுத்தால் மட்டும் போதும். ஆங்கிலேயர் முன்னால் நாம் அவமானப்படக்கூடாது. எப்படியாவது இந்த திருமணத்தை நடத்தவேண்டும் என்று கூறுகிறார்.

திருமணத்தில் எப்படி ஒரு வெளி ஆளைச் சம்மந்தப்படுத்துவது என்று சண்முகம் கேட்கும் கேள்விக்கு பாதிரியார் ஆசிரியரும் பாதி பெற்றோர்தான் என்பது போன்ற பல விளக்கங்களைச்  சீன மொழியில் அழகாக எடுத்துக்கூறி இரு வீட்டாரையும் கவர்கிறார். கிராமத்து தரகரின் உதவியோடு சீன மரபுப்படி தான் திருமணத்தை நடத்துவதாக இரு வீட்டாருக்கு உறுதி அளிக்கிறார். 

அடுத்த ஆண்டு 1957 ல் திருமணம் நடந்தது. சூ பன் இளஞ்சிவப்பு நிற ஆடை அணிந்திருந்தாள். வாட்டிய பன்றி அனைவருக்கும் வழங்கப்பட்டது. ஆக மொத்தத்தில் அனைவரையும் மகிழ்வித்த திருமணமாக அது இருந்தது. 1959 ல் சூ பன்னுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதை ஆண்டில் சிங்கப்பூர் தன்னாட்சி பெற்றது. விடுதலைக்கும் தன்னாட்சிக்கும் வித்தியாசம் தெரியாமல் பலர் மீண்டும் ஆங்கிலேயர் வெளியேற்றத்தின் மீது பந்தயம் கட்டி தோற்றனர்.   

ஆசிரியர் கதையை இப்படி முடிக்கிறார்:

1965ல் ஆங்கிலேயர்கள் திரும்பும்போது இரு வீட்டாரும் சேர்ந்து ஒரு நடிகரை வழயனுப்புவது போல 18 பேர் பாயா லேபர் விமான தளத்திற்கு வந்திருந்தனர். அதே நேரம் சிங்கப்பூர் தன்னாட்சி பெறும் என்று பந்தயம் கட்டியவர்கள் பந்தயத்தில் வெற்றி பெற்றனர்.

மாறிவரும் காலங்கள்

  • மணப்பெண் மரபுக்கு மாறாக வெள்ளை ஆடை அணியவேண்டும் என்று சொல்வது
  • மணப்பெண் ஆங்கிலேயர் ஒருவர் தலைமையில் தனது திருமணம் நடக்க வேண்டும் என்று கூறுவது
  • மாப்பிள்ளையின் தந்தை புரோகிதரை அழைத்து வராமல் மரபுக்கு மாறாக மூன்று பருமனான நபர்களை அழைத்து வருகிறார்.
  • மணப்பெண்ணின் தந்தை மரபுக்கு மாறாக இரண்டு வாட்டிய பன்றிகளுக்கு பதிலாக ஆறு வாட்டிய பன்றிகளைக் கேட்கிறார்.
  • தன்னாட்சிக்கும் சுதந்திரத்திற்கும் வேறுபாடு தெரியாத மக்கள்.

என் பிரதிபலிப்புகள்

  • ஒரு நாட்டில் நடக்கும் அரசியல் மாற்றம் ஒரு சாதாரண குடிமகனையும் பாதிப்பது.  
  • ஒரு நாட்டின் நிலையற்ற தன்மை மக்கள் மனதில் ஏற்படுத்தும் குழப்பம்.
  • ஒரு தலைமுறை ஆங்கிலேயர்களை வெளியேற்ற வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கும் வேளையில் அடுத்த தலைமுறை ஆங்கிலேயர்களின் பழக்க வழக்கங்களை பின்பற்ற விரும்புவது.
  • மூத்த தலைமுறை அவர்கள் வசதிக்கு ஏற்ப சில மாறுதல்களை மரபில் கொண்டுவருகிறார்கள். ஆனால் அடுத்த தலைமுறை சில மாற்றங்களைக் கொண்டு  வரும்போது வன்மையாக எதிர்க்கும் மனப்பக்குவம்.
  • தனது விருப்பங்களை வெளிப்படையாகச் சொல்வதும், காலங்காலமாக பின்பற்றப்படும் மரபில் மாற்றங்கள் கொண்டு வர முனைவதும் அதுவும் குறிப்பாக ஒரு பெண் செய்ய விழையும்போது ஏற்படும் அதிர்வுகள்.
  • சீனர்களின் சூதாட்ட பழக்கம் – எல்லவாற்றிற்கும் சூதாட்டத்தில் ஈடுபடுவது
  • பல இன மக்கள் வாழும் சூழலில் மொழி எவ்வளவு முக்கியமானது. அவர்களின் மொழியில் பேசும்போது பெரிய பிரச்சினை கூட மிக இலகுவாகிவிடுகிறது.

     
       




  .      

No comments:

Post a Comment