Saturday, September 14, 2019


அரூப மணிகளும் அறுபடாத சரடும்


காச்சர் கோச்சர் – விவேக் ஷான்பாக் 

ஏழு அத்தியாயங்கள், வெறும் தொண்ணூறே பக்கங்கள் என்ற அளவில் பார்த்தால் குறுநாவல்தான். ஆனால்  சொல்லப்படாத விடுபடல்களின் வழியாக விரித்துப் பார்த்தால் இது நிச்சயமாக நாவல்தான். இந்த விடுபடல்கள்தான் இந்நூலை வாசகப் பரப்பில் முக்கியமான நூலாக ஆக்கி உள்ளது போலும். குறைவான சொற்களைக் கொண்டு செறிவாகவும் ஆழமாகவும் ஒரு நீண்ட வாழ்க்கையை எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் சொல்லியதால்தான் இந்நாவல் கொண்டாடப்படுகிறோ எனத் தோன்றுகிறது. 

இத்தனை சொற்சிக்கனத்தோடு எழுதப்பட்ட இந்த நாவலை மொழியாக்கம் செய்யும் பணி உண்மையில் மிக, மிக சவால் மிக்கது. அச்சவாலில் அநாயசமாக வென்றிருக்கிறார் கே.நல்லதம்பி அவர்கள். ஒரு மொழியில் பல்வேறு பரிமாணங்களுடன் பொருள் தரக்கூடிய ஆழமான சொற்களை அவற்றின் சாரமும் அடர்த்தியும் சிறிதும் குறையாமல் நேர்த்தியாக மொழிபெயர்த்திருக்கிறார். 2019 ஆம் ஆண்டின் ஜனவரி மாத நிலவரப்படி பதினெட்டு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள இந்த நூலை தமிழில் வாசிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்த கே.நல்லதம்பி அவர்களுக்கு எனது வணக்கமும் நன்றியும். 

இந்நாவலின் தலைப்பு சிறு வயதில் கேட்ட கதையை நினைவுபடுத்தியது. மாமியார் செய்து தந்த கொழுக்கட்டையின் பெயரை மறந்துவிட்டு அத்திரி பச்சா எனக் கேட்டுப் புரியாமல் தவிக்கும் மனைவியை கணவன் அடிக்கும் அக்கதை, ஒரு சொல்லால் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கலைப் பேசும். ஆனால் இந்நாவலில் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கலால் பிறந்த கோச்சர் காச்சர் என்ற ஒரு சொல் பிரதானமாக இருக்கிறது.

நூறு ஆண்டுகள் பழைமையான காப்பி ஹௌஸில் கதை தொடங்குகிறது. பெயர் மாறாத காப்பி ஹௌஸ் இப்போது பார் அண்ட் ரெஸ்டாரண்ட். ஏதோ தவறு செய்வதைப் போல் குடிக்கும் இடமாக அது இல்லாமல் குடிப்பதை மிக உயர்ந்த நாகரிகமான செயலாகக் காட்சிப்படுத்தும் இடமாக மாறி இருக்கிறது. நூறு ஆண்டு கால பழமையிலிருந்து நகர்ந்துள்ள நவீன மனிதர்களாகிய நாமும் பெயரளவில் மனிதர்களாக இருந்து கொண்டு நாகரீகம் என்ற பெயரில் அறம் மீறிய செயல்களைச் செய்து கொண்டும் அதற்கு துணை நின்று கொண்டும் இருக்கிறோம் என்பதை ஆறே ஆறு கதாபாத்திரங்களின் வழியாக சொல்லியிருப்பது இந்நாவலின் சிறப்பு. 

சமீபத்தில் வாசித்த இமையத்தின் எங் கதெ நாவல் போல இதுவும் ஓர் ஆணின் பார்வையிலிருந்து சொல்லப்பட்ட கதையாக இருக்கிறது. ஒரு பெண்ணாக இருப்பதாலோ என்னவோ ஆணின் நோக்கில் எழுதப்படும் கதைகள் என்னைக் கவர்கின்றன. நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்பது ஓர் ஆணுக்கு என்னவாக இருக்கிறது என்பதும் முன்பின் தெரியாத பெண்ணுடன் உறவு கொள்கையில் அவனுக்குள் கிளர்ந்தெழும் உணர்வுகளும் விவரிக்கப்பட்டுள்ள பகுதி மிக அற்புதமாக இருந்தது. 

அமரர் திரு ஞானி ஒரு முறை சிங்கப்பூர் வந்தபோது நடந்த கலந்துரையாடலில் குடும்பம் என்பது உங்களுக்கு ஒரு Comfort Zone. அவ்வளவுதான். எப்போது நீங்கள் அங்கே வசதியாக உணரவில்லையோ அப்போது அந்த அமைப்பு உங்களுக்கு கசக்க ஆரம்பித்துவிடும் என்றார். காச்சர் கோச்சர் நாவலும் இதைத்தான் பேசுகிறது. 

நொடித்துப்போன குடும்பங்களின் கதைகளையும் வறுமையாலும் ஏழ்மையாலும் பாதை தவறும் மனிதர்களது கதைகளையும் கேட்டும் படித்தும் இருக்கிற எனக்கு பெரும் இக்கட்டிலிருந்து தப்பிப் பிழைத்து பொருளாதாரத்தில் உயர்ந்தாலும் அறத்திலும் சமூக மதிப்பீடுகளிலும் வீழ்ச்சியடையும் இக்கதை மாந்தர்கள் ஒவ்வொருவரும் நவீன வாழ்க்கையின் பிரதிநிதிகளாக காட்சி அளிக்கின்றனர். 

வின்சென்ட் ஒரு கதாபாத்திரமாக நாவலில் இருந்தாலும் அவன் கதைநாயகனின் மனக்குரலாகத்தான் எனக்குத் தோன்றுகிறான். இப்படி மற்ற கதை மாந்தர்களுக்குள்ளும் வின்சென்ட்கள் வரலாம். கேள்வி கேட்டு சுய பரிசோதனைக்குத் தயார் செய்யலாம். கேட்க விரும்பாததைச் சொல்லி குற்ற உணர்வுக்கு ஆட்படுத்தலாம். அரிதாக, கேட்க விரும்பியதைச் சொல்லி மகிழ்வூட்டலாம். நாவலின் விடுபடல்களின் ஒரு பகுதியாக மற்ற கதாபாத்திரங்களுக்குள் தோன்றும் வின்சென்ட்களை நாம் நம் கற்பனையில் உருவாக்கி நிரப்பிக்கொள்ளலாம்.   

அப்பா என்பவர் இக்குடும்பத்தில் வெறும் பொம்மைத் தலைவர். அறச்சிந்தனை கொண்டவராக இருந்தாலும் சித்தப்பாவை அண்டி வாழ வேண்டிய சூழலில் சித்தப்பா செய்யும் எதையும் கேள்வி கேட்காமல் மௌனமாய் வாழ பழகிக்கொள்கிறார். பாரதியின் ரௌத்திரத்தை மறந்து நமது சுய தேவைக்காகவும் மகிழ்ச்சிக்காவும் இப்படி குடும்பத்தில் தொடங்கும் இக்கொடிய மௌனங்கள்தான் உலக அளவில் அரசியல் தலைமைகளைப் பணம் வைத்திருக்கும் முதலாளிகளின் கைப்பாவைகளாக மாற்றி வைத்திருக்கின்றன. அறமும் பொருளாதாரமும் இணைய முடியாத தண்டவாளம் போன்றவைதானா? இணைவது அத்தனை கடினமானதா? வள்ளுவம் அறத்தை முதலில் சொல்லி பொருளை இரண்டாவதாக சொன்னதன் சூட்சுமம் அறமற்ற பொருள் இன்பத்தை தராது என்பதற்காகத்தானே! ஆனால் நவீன வாழ்க்கை இன்பத்தைத் துய்க்க பொருள் மட்டும் போதும் என்ற முடிவுக்கு மனிதர்களைத் தள்ளிவிட்டதா? இவர்களுக்குள் அறத்தின் வடிவான வின்சென்ட்கள் தோன்றுவதே இல்லையா?     
      
தன்னோடு நேரத்தைச் செலவிடாமல் குடும்பத் தொழிலை கவனிக்கிறான் என்று சண்டை பிடித்துக்கொண்டு கணவனை விட்டுப் பிரிந்து வாழும் மாலதி. சுயமாக ஒரு வேலைக்குச் செல்லாமல் அடுத்தவர் பணத்தில் உட்கார்ந்து சாப்பிடுகிறான் கணவன் என கோபித்துக்கொள்ளும் அனிதா. கிட்டத்தட்ட ஒரே தலைமுறையைச் சார்ந்த இரு பெண்களது பார்வைகளும் விழுமியங்களும் வேறு வேறாக இருக்கின்றன. இவர்களது வளர்ப்பும், குடும்பப் பிண்ணனியும், பொருளாதார நிலையும் வெவ்வேறு சமூக பிரஜைகளாக இவர்களை வார்த்தெடுக்கிறது. குடும்பத்தின் வலுவான பொருளாதார பின்னணிதான் மாலதியை ரௌடிகளை அழைத்துக்கொண்டு சென்று கணவன் வீட்டாரை மிரட்டச்செய்கிறது. சோனா மசாலா இல்லாமல் போயிருந்தால் அவளுக்கு கணவன் வீடு ஒரு நல்ல Comfort Zone ஆக இருந்திருக்கலாம். நியாயங்களுக்காக வாதிடக்கூடிய தன்மை கொண்டவளான அனிதாவிற்குப் புகுந்த வீடு ஒரு நல்ல Comfort Zone ஆக இல்லாமல் போகிறது. 

சித்தப்பா சோனா மசாலாவின் வெற்றிக்குப் பிறகும் அந்த குடும்பத்துடன் சேர்ந்து வாழ வேண்டிய அவசியம் என்ன? அவருக்கு அக்குடும்பம் ஏன் ஒரு Comfort Zone ஆக இருக்கிறது? அக்குடும்பத்தின் அதிகார மையமாக இருப்பதுதான் அவருக்கான போதையோ? அதுதான் அவரை அக்குடும்பத்தோடு பிணைத்து வைத்திருக்கிறதோ? மறைமுகமாக அனைவரையும் ஆட்டிவிக்கும் மனிதராக இருப்பதில் அவருக்கு ஒரு சுகம் கிடைக்கிறது என்றுதான் தோன்றுகிறது. வேண்டிய அளவு பணம் தந்து கதைநாயகனை வேலை வெட்டி இல்லாமல் சும்மா இருக்கச் செய்வதும் அதனால்தானோ?

அம்மாவுக்கு அக்குடும்பத்தை ஒன்றிணைப்பது மட்டுமே வேலையாக இருக்கிறது. மேலும் அவளைப் பொறுத்தவரை அவளது குடும்பத்தில் ஐந்து உறுப்பினர்கள் மட்டுமே. அவர்களோடு மட்டுமே அவளுக்கான Comfort Zone கிடைக்கிறது. அதனால்தான் நோக்கங்களில் தெளிவான, அதி புத்திசாலியான சிவப்பு எறும்பு போன்ற அனிதாவையும் எளிய, கடிக்க கூட நேரமிருக்காத கறுப்பு எறும்பு போன்ற சுகாசினியையும் அவரால் குடும்பத்திற்குள் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அவர்களை குடும்பத்திலிருந்து அகற்ற கடுமையான சொற்களை வேப்ப இலை புகையாகப் போடுகிறார்.

கதை நாயகனின் செயலின்மை அனிதாவை மட்டுமன்றி நம்மையும் எரிச்சல் அடையச் செய்தாலும் வேறு ஒரு கோணத்தில் பார்த்தால் அவன் எதற்காக  வேலைக்குச் செல்ல வேண்டும்? அதற்கான Driving Force என்ன என்ற கேள்வியும் எழுகிறது. புறத்தில் நடக்கும் வாழ்க்கையின் சிக்கல்களை அகத்தில் அலசிப்பார்க்க கூடியவனாக அதற்கான காரண காரியங்களைப் புரிந்து கொள்ளக்கூடியவனாக ஓர் அறிவுத்தளத்தில் செயல்படும் கதைநாயகன் சொத்துக்காக தனது குடும்ப உறுப்பினர்களை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியமற்றவனாக இருக்கிறான். ஆனால் அவன் அவனாக இருக்கும் இடமான காப்பி ஹௌஸில் தனது மனசாட்சியாக இருக்கும் வின்சென்ட்டின் சொற்கள் வழியாக தன்னை சுய பரிசோதனைக்கு உட்படுத்தி குற்ற உணர்வுக்கு ஆளாகிறான்.  

ஒரு கதைக்குப் பல பரிமாணங்கள் இருக்கும் என்று வின்சென்ட் சொல்வது போல இந்நாவலின் ஒவ்வொரு நிகழ்வுக்கும் பின்னால் பல பரிமாணங்கள் உள்ளன. கதைநாயகன் சித்ராவை விட்டு விலகுவது, சித்தப்பா சுகாசினியைப் பார்க்க மறுப்பது, கணவர் வீட்டிலிருந்து பிரிந்து வரும் மாலதியை குடும்பம் திருப்ப அனுப்ப முயற்சிக்காதது, அனிதா தேன்நிலவு சென்று வந்த பிறகு எந்த பொருளையும் வாங்காமல் இருப்பது இப்படி ஒவ்வொரு நிகழ்விற்குப் பின்னும் வாசகன் கற்பனையில் இட்டு நிரப்பக்கூடிய ஊகங்களும் பரிமாணங்களும் உள்ளன.

நமது சுயநலத்திற்காகவும் மகிழ்ச்சிக்காவும் வாழ்வில் நம் கண் முன் நடக்கும் கோச்சர் காச்சர்களைக் கண்டும் காணாமல் செல்வது நவீன உலகின் வழக்கமாகிவிட்ட சூழலில் அந்த கோச்சர் காச்சர்கள் மறைமுகமாக நமக்குத் தெரியாத பல மனிதர்களது வாழ்வில் ஏற்படுத்தும் கற்பனைக்கு எட்டாத கொடிய விளைவுகளுக்கும் நாம் பொறுப்பாகிப் போகிறோம் என்பதை நாவலின் முடிவு அழுத்தமாக பதிவு செய்கிறது. சித்தப்பா சோனா மசாலா வியாபாரத்திற்காக தான் செய்யும் எதுவும் நியாயம் என்ற நிலைப்பாட்டில் ரௌடி கூட்டத்திற்கு பணம் கொடுப்பதும் அதை அறிந்த கதை நாயகன் அதற்கு எதிர்வினை ஆற்றாமல் மௌனமாய் போவதன் வழியாக மறைமுகமாக ரௌடிகளின் அக்கிரமத்திற்குத் துணைபோகிறான். சித்தப்பா உதாசீனப்படுத்தும் சுகாசினியின் முடிவு என்னவாக வேண்டுமானாலும் இருந்திருக்க வாய்ப்பு உண்டு. ஒருவேளை மரணமாக இருந்திருந்தால் அந்த மரணத்தில்  கதைநாயகனுக்கும் பங்குண்டு. 

இப்படி கண் முன் நிகழ்கின்ற கோச்சர் காச்சர்களை அவிழ்க்க முடியாத அல்லது அவிழ்க்க விரும்பாத நம்முடைய கையாலகததனத்தால் உண்டாகும் பயங்கரமான, அவிழ்க்க இயலாத காச்சர் கோச்சர்களால் நம் ஒவ்வொருவரின் கையிலும் இரத்தம் இருக்கிறது. எனக்குள் இருக்கும் வின்சென்ட் சொல்வதைக் கேட்டு என் கையைப் பார்க்கிறேன். உண்மைதான். இதுவரை எனது சுயநலத்தால் கண்டும் காணாமல் வந்த கோச்சர் காச்சர்கள் எங்கோ யாருக்கோ காச்சர் கோச்சர்களாக மாறி ரத்தத்தை என் கையில் வடியச் செய்து கொண்டுதான் இருக்கிறது. 

ஏழு மணிகளைக் கொண்டு இறுக்க கட்டப்பட்ட இந்த நாவல் சரட்டில் வாசகன் தனது கற்பனை என்னும் அரூப மணியை எங்கு வேண்டுமானலும் கோர்த்துக் கொள்ள ஏதுவாக இடைவெளியோடும் நெகிழ்வுத்தன்மையோடும் இருப்பதுதான் இந்நாவலின் வெற்றி.   


Friday, March 22, 2019




திரு சீர்காழி செல்வராஜின் கலங்கரை விளக்காய் மின்னிடு நூல் அறிமுகம்





Lisha Women Wing - Neengala Naangala? Part - 3



Image result for திருமதி கீதா ரவிச்சந்திரனின் ‘கீதா கஃபே’ நூல் அறிமுகம்


திருமதி கீதா ரவிச்சந்திரனின் கீதா கஃபே நூல் அறிமுகம்



'சுமையா' – கனவுப் பிரியன்
நூல் வனம் வெளியீடு 
Image result for சுமையா – கனவுப் பிரியன்
21 சிறுகதைகள் கொண்ட தொகுப்பு
கனவுப்பிரியன் எழுதி நான் வாசிக்கும் முதல் நூல். இவரது மொழிநடை கடினமானதோ கரடுமுரடானதோ இல்லை. வணிக எழுத்துலகில் அதிகமாகப் புழங்கும் மொழிதான். அதனால் விரைவாக இந்த நூலை வாசிக்க முடிந்தது.  
தற்கொலைப் பறவைகள் சிறுகதையில் அஸ்ஸாமில் உள்ள ஜதிங்கா என்னும் சிற்றூரில் பறவைகள் தற்கொலை செய்துகொள்வது, கடல் குதிரை சிறுகதையில் உயிரினங்களிலிலேயே ஆண் இனம் கர்ப்பம் தரிக்கும் ஒரே உயிரினமான கடல் குதிரை, எட்டாவது அதிசயம் சிறுகதையில் காரகோரம் என்னும் 1300 கிலோமீட்டர் நீளமான சைனா பாகிஸ்தான்ஃப்ரண்ட்ஷிப் ஹைவே, நேற்றைய ஈரம் சிறுகதையில் பன்றிக்கறி சாப்பிடுவாள் என்பதற்காக காதலியை தவிர்ப்பது, அது வேறு ஒரு மழைக்காலம் சிறுகதையில் தாத்தா தன் பேரனுக்கு பள்ளி வீட்டுப்பாடத்தில் உதவ நிறைய தகவல்களைச் சொல்லுதல் இப்படியாக பெரும்பாலான சிறுகதைகள் ஒரு செய்தியையோ அல்லது தகவலையோ நமக்குச் சொல்ல வலிந்து கற்பனை செய்து எழுதப்பட்டுள்ளன. 
இதுபோன்ற செய்திகளையும் தகவல்களையும் சொல்ல ஊடகங்கள் இருக்கையில் இவற்றை சிறுகதையில் கொண்டு வரவேண்டிய அவசியமென்ன என்ற கேள்வி எழுகிறது. தகவல்களைச் சொல்வதற்காக எழுதப்பட்ட சிறுகதைகள் என்ற அடிப்படையில் பார்த்தால் ஒரு தொகுப்பில் 21 சிறுகதைகள் என்பது அதிகப்படியாகத் தெரிகிறது. தொகுப்பை வாசித்து முடித்தவுடன் தகவல்கள் வாசித்த வேகத்தில் நினைவிலிருந்து மறந்து போகின்றன.
அன்னக்காடி’, ரசவாதம் இரண்டும் சிறுகதைகளாக மாறாமல் வெறும் நினைவுக் குறிப்புகளாக எஞ்சிவிட்டன. அன்னக்காடி ஒரு பயண அனுபவத்தையும், ரசவாதம் தனக்குப் பிடித்தமான மாமாவைப் பற்றிய நினைவுகளாகவும் இருக்கின்றன.
வியாதிகளின் மிச்சம்’, மண்ணெண்ன குடிச்சான்’, தற்கொலைப் பறவைகள்’, சூது கவ்வும்போன்ற சிறுகதைகள் தமிழ் திரைப்படங்களில் வருவது போல சமூகத்திற்து கேடு விளைவிக்கும் பெரிய மனிதர்களைத் தட்டி கேட்டு கொல்லப்படும் சில கதாபாத்திரங்களைப் பேசுவது சலிப்பைத் தருகிறது.
இத்தொகுப்பின் பலம் என்று சொல்லக்கூடிய ஒன்று கதைகள் நடக்கும் களம். ஒவ்வொரு கதையும் வேறு, வேறு நிலப்பரப்பில் நடக்கிறது. நாகர்கோவில், கல்கத்தா, ஈரான், பாகிஸ்தான் இப்படி பல விதமான களங்கள். வித, விதமான நிலப்பரப்பின் வாழ்க்கையை பார்க்கும் வாய்ப்பு ஒரு வாசகராக நமக்கு கிடைத்தாலும் அது தொடங்கிய வேகத்தில் சப்பென்று முடிந்துவிடுவது பெரிய பலவீனம் என்றுதான் சொல்லவேண்டும்.       
'நம்பி கோவில் பாறைகள்', 'அன்று சிந்திய ரத்தம்', 'துணிக்கடைக்கார அண்ணாச்சி', 'ஜெனியின் டைரிக் குறிப்புகள்' - நான்கு சிறுகதைகள் மட்டுமே எனது வாசிப்பிற்கு உவப்பானதாக இருந்தன.